சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ‘நீங்கள் இல்லாமல் நானில்லை‘ என்று நன்றி தெரிவித்திருக்கிறார்.

தன் படத்தில் நல்ல கருத்துகளை இடம்பெற வைத்து வாழ்வதற்கு வழிகாட்டியதால் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் மக்கள் திலகம் எம்ஜி ஆர். தான் ஏற்ற கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் திலகம். தன்னுடைய ஸ்டைலால் இளைய தலைமுறையினரை இன்றும் கவர்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

1975 ஆம் ஆண்டில் இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் தயாரான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். அதன் பிறகு நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், திரையுலகில் அறிமுகமாகி நாற்பத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் தான் நடித்த படம் வணிகரீதியாக தோல்வியடைந்ததால் விநியோகஸ்தர்களை அழைத்து, அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கிய முதல் நட்சத்திர நடிகர் என்ற முன் மாதிரியான வரலாற்றை பதிவு செய்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 45 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் இணையத்தில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகிறார்கள்.

இதற்காக தன்னுடைய டுவிட்டரில், 'என்னுடைய திரையுலக பயணத்தில் 45 ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில் என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை.'  என்று பதிவிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அண்ணாத்தே என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.