(நா.தனுஜா)

நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கு ஸ்திரமான அரசாங்கத்தைப் போன்றே வலுவான எதிரணியொன்றும் மிகவும் அவசியம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருக்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொள்கைகளின் அடிப்படையில் ஒன்றுபடுவதன் ஊடாகவே வலுவான எதிர்தரப்பைக் கட்டியெழுப்ப முடியும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

2020 ஆகஸ்ட் 5 பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைக்கக்கூடிய மக்கள் ஆணையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதேவேளை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும். எனினும் எந்தவொரு கட்சியாக இருப்பினும், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதென்பது அக்கட்சிக்கு அதிகூடிய அதிகாரங்களை வழங்குவதாகவே அமையும் என்றும் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் கடந்த காலத்தில் அரசியல் அவதானிகள் பலரும் எச்சரித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையிலேயே இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருக்கும் புதுமுகங்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வாழ்த்துக் கூறியிருக்கும் கரு ஜயசூரிய, வலுவான எதிரணி ஒன்றின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருக்கிறார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

முதற்தடவையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருக்கின்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தமது செயற்பாடுகளின் ஊடாக சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பாராளுமன்றம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கின்ற அபிப்பிராயத்தை மேம்படுத்துவதற்கும் இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். 'கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்' என்று அழைக்கப்படுவதற்குரிய தகுதியையும், மதிப்பையும் அவர்கள் சம்பாதித்துக்கொள்ள வேண்டும்.

வலுவான அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் தெளிவான ஆணையொன்றை வழங்கியிருக்கின்றனர். நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கு ஸ்திரமான அரசாங்கத்தைப் போன்றே, வலுவான எதிர்க்கட்சியும் இருக்கவேண்டும். தனிப்பட்ட வசதிகளை விடுத்து கொள்கைகளின் அடிப்படையில் ஒன்றுபடுவதன் ஊடாகவே மிகவும் உறுதியான எதிர்தரப்பொன்றைக் கட்டமைக்க முடியும்.