பெய்ரூட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கர குண்டுவெடிப்பு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த பேரழிவுக்கான சர்வதேச பிரதிபலிப்பு குறித்த மெய்நிகர் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் ட்ரம்ப், ஒரு முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு லெபனான் அரசாங்கத்தை வலியுறுத்தினார், அத்துடன் இதற்கு அமெரிக்கா உதவ தயாராக உள்ளதகவும் கூறியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

அத்துடன் பெய்ரூட் வெடிப்பில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

மேலும் லெபனான் மக்களுக்கு மீட்க உதவுவதற்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்க தயாராக உள்ளது என்பதை மீண்டும் இதன்போது அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அது மாத்திரமின்றி அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி போராட்டக்காரர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் வன்முறை மோதல்களில் ஈடுபட்டுள்ள பெய்ரூட்டில் நடந்து வரும் போராட்டங்கள் தொடர்பாக ட்ரம்ப், அமைதியாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

பல நாட்கள் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தப்பியவர்களைக் கண்டுபிடிப்பதில் நம்பிக்கை குறைந்துவிட்டதாக லெபனான் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டின் துறைமுகத்தைத் தாக்கிய வெடிப்பு லெபனான் தலைநகரின் பெரும் பகுதிகளை பேரழிவிற்கு உட்படுத்தி 150 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது மற்றும் சுமார் 6,000 பேர் காயமடைந்தனர்.

உலகத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஒரு லெபனான் பொதுமக்கள் ஒரு சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர், எனினும் லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன், இதுபோன்ற விசாரணைக்கு அழைப்பு விடுப்பது நேரத்தை வீணடிப்பதாகும் என்று கூறியுள்ளார்.