ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியலில் தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்று , குறிப்பாக யாழ் – மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அதேவேளையில் தனக்கு கடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக யாழ் -கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

குறிப்பாக வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள். இலங்கை மக்கள் சரிசமமாக ஒற்றுமையுடனும், சகோதரத்துசத்துடனும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்கின்ற சட்டங்களையும் கொள்கைகளையும் இயற்றக் கூடிய புதிய பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தமிழ் பிரதிநிதித்துவம் ஒன்று யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலைமையைக் கவனத்தில் கொண்டு யாழ் மாவட்டத்திலுள்ள தமிழர் ஒருவருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் யாழ் மாவட்டத்தில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய விருப்பு வாக்குகளைச் சேகரித்துக் கொள்வதில் கவனம் செலுத்தினார்களே தவிர கட்சிக்கு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. அதனாலேயே யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியாமைப் போயிற்று. யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் ஒரு பிரதிநித்துவம் கிடைக்கப் பெறாமைப் போனது துரஸ்திடமேயாகும்.

அது மட்டுமல்ல மக்களுடன் நல்ல உறவுகளைப் பேணி தொடர்ச்சியாக மக்களுக்கு சேவை செய்யக் கூடிய குறிப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்கு மாறாக மீண்டும் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக திரும்பத் திரும்ப உணர்ச்சிகரமான தமிழ் தேசிய கோசங்களை எழுப்பி தம்பட்டம் அடிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் ஒரு கனம் சிந்தித்து வாக்களித்திருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒரு பிரதிநிதி வந்திருப்பார்.

தேர்தல் வாக்குறுதிகளை சீர் தூக்கிப் பார்த்து தூர நோக்குடன் ஒரு முறைக்கு பலமுறை சற்று நிதானமாக சிந்தித்து பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து இருக்க வேண்டும். திரும்பவும் பழைய பல்லவிகளையும் பழைய மரபுகளையும் நடைமுறைப்படுத்துகின்ற அரசியல் காய் நகர்த்தல்களையே தொடர்ந்து இனி வருங்காலங்களில் பார்க்கப் போகின்றோம்.

எவ்வாறாயினும் யாழ் மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை வழங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை தேர்தலில் நின்று தோற்றவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமளிப்பதில்லை என்பதாகும். எனவே நான் கேட்பது தேசியப்பட்டியலில் தோல்வியுற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதல்ல மக்களின் தேவைகளை பொறுப்புடன் நிறைவேற்றக் கூடிய வடக்கு வாசியான வேறொருவருக்கு வழங்க வேண்டும்.

அத்தோடு தமது கட்சிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.