தென்னிலங்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ராஜபக்ஷாக்கள் பலமான ஆட்சியமைத்திருக்கிறார்கள். ஆனால் நாம் அதை எவ்வாறு எதிர்கொள்வது, ஏனைய சிறுபான்மையினரோடு எப்படிச் சேர்ந்தியங்குவது என்பதைத் தவிர்த்து ஏனைய அனைத்தையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எவ்வித அடிப்படைகளும் இன்றி தீய எண்ணத்தில் அவிழ்க்கப்படும் போலி வதந்திகளுக்கு உடனுக்குடன் பதில் வழங்குவதானது வதந்திகளை, அந்த நிலையிலிருந்து நாமாகத் தரமுயர்த்துவதாக அமைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட அன்றைய தினம் விருப்பு வாக்கு விவகாரத்தில் மோசடிகள் இடம்பெற்றதாகக் கூறி சுமந்திரன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் தனது உத்தியோக பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டு அதிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

தேர்தல் முடிவுகளை முன்னிறுத்திச் செய்யப்பட்ட போலிச் சலசலப்புகளுக்கு எனது பக்கத்தில் உடனடிப் பதிலை வழங்கவில்லை என பலர் கவலை கொண்டது அவதானிக்கப்பட்டது. எதுவித அடிப்படைகளுமின்றி, தீய எண்ணத்தில் அவிழ்க்கப்படும் போலி வதந்திகளுக்கு சூட்டோடு சூட்டாக, முண்டியடித்துக் கொண்டு பதில் வழங்குவது வதந்திகளை, அந்த நிலையிலிருந்து நாமாகத் தரமுயர்த்துவதாக அமைந்துவிடும். இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

எம். ஏ. சுமந்திரனைக் குறி வைத்து வடக்கிலும், தெற்கிலும் இப்படியான போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவது இது முதற் தடவை அல்ல. இது இறுதிச் சந்தர்ப்பமும் அல்ல. இது போன்ற காட்சிகள் மீண்டும், மீண்டும் அரங்கேறத்தான் போகிறது.

ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் வைத்து எந்தளவிற்கு இலகுவாகக் குறித்ததோர் கூட்டு மனப்பான்மையைக் கட்டமைக்கலாம், ஒருவர் மீதான வெறுப்புணர்வை வளர்க்கலாம், நல்லெண்ணம் கொண்டவர்களைக் கூட உணர்ச்சியூட்டித் திசை திருப்பலாம் என்பதை கடந்த இரண்டு நாள் காட்சிகள் எமக்குப் புலப்படுத்தியிருக்கின்றன. இதன் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

தென்னிலங்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ராஜபக்ஷாக்கள் பலமான ஆட்சியமைத்திருக்கிறார்கள். நாமோ அதை எவ்வாறு எதிர்கொள்வது, ஏனைய சிறுபான்மையினரோடு எப்படிச் சேர்ந்தியங்குவது என்பதைத் தவிர்த்து மீதி எல்லாவற்றையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர்வரும் காலங்களிலும் நிதானம் மிக அவசியமாகிறது.