-கபில்
அரசியலில் தூரநோக்கு முக்கியமானது. அந்த தூர நோக்கு என்பது, மகிந்த ராஜபக்சவைப் போன்று, ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டியதில்லை.
பசில் ராஜபக்சவைப் போன்ற அடுத்தடுத்த கட்டங்கள் குறித்து திட்டமிட்டு செயற்படுவது தான் தூர நோக்கு. தமிழ் அரசியல்பரப்பில் அத்தகைய தூர நோக்குடைய தலைவர்கள் யாரும் கிடையாது என்றே கூறலாம்.
இனத்தின் இருப்பு, நலன்களை அடிப்படையாக கொண்டு முடிவுகளை எடுப்பதும், அதனடிப்படையில் செயற்படுவதும் தான் தூர நோக்கு.
அவ்வாறான நோக்குடன் தமிழ் அரசியல் பரப்பில் எந்த தலைவராவது இருந்தால், இந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இந்தளவுக்கு பிரிந்து நின்று மோதியிருக்காது.
தமிழ் மக்களின் பலத்தைக் கெடுத்து, சிதைத்துப் போட்டிருக்காது. தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப் பிழையாக வந்து விட வேண்டும் என்ற மனநிலை தோன்றியிருக்காது.
எதேச்சாதிகாரப் போக்குகளும், அவர்களுக்கிடையில் உள்ள உளவியல் சிக்கல்களும், போட்டிகளும் தூரநோக்குப் பற்றிய சிந்தனையில் இருந்து பெரும்பாலான தமிழ் அரசியல் தலைவர்களை விலக்கியே வைத்திருக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஒருவரின் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை வந்து பல காலமாகி விட்டது,
அங்கு தமிழர்களின் வாக்குகள் சிதைந்தால், அல்லது சிதைக்கப்பட்டால், தமிழரின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து இருந்தது. அதனை தமிழ்க் கட்சிகள் கருத்தில் கொள்ளவில்லை.
இதனால், அம்பாறையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பறிபோயிருக்கிறது, இந்த நிலைக்கு பொறுப்பேற்க வேண்டியது, அங்கு வாக்குகளை சிதைத்த எல்லா கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களும் தான்.
அம்பாறையின் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக அங்கு போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்.
ஆனால், அவரோ அவரது கட்சியோ ஒட்டுமொத்த தமிழரின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்று சிந்தித்ததா?
அம்பாறையில் அவர்களுக்கு ஒரு நியாயம் இருந்தது. திருகோணமலையில் இன்னொரு நியாயம் இருந்தது.
அம்பாறையில் போட்டியில் நிறுத்த பொருத்தமான வேட்பாளர்கள் கிடைக்காததால் தான், அங்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி போட்டியிடவில்லை. அவ்வாறு போட்டியிட பொருத்தமான ஆட்கள் கிடைத்திருந்தால், அங்கும் நிச்சயம் போட்டியில் நின்றிருக்கும்.
அம்பாறையைப் போலவே, திருகோணமலையும் தமிழர் பிரதிநிதித்துவம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள ஒரு மாவட்டம் தான். அங்கு 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழரின் பிரதிநிதித்துவம் இல்லாமலேயே போயிருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன போட்டியிட்டு வாக்குகளை பிளவுபடுத்தியதே அதற்குக் காரணம். அப்போது இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினார்கள்.
அந்தப் பாடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முக்கியமான ஒரு காரணமாகவும் இருந்தது.
அப்போது, தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து, 2001 பொதுத் தேர்தலில் திருகோணமலையில் தமிழரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தவர், விடுதலைப் புலிகளின் அப்போதைய திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த ரூபன்.
அதற்குப் பின்னர், 2004 பொதுத் தேர்தலில் திருகோணமலை மாட்டத்தில் இரண்டு ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்தது.
ஆனால், அதற்குப் பின்னரான காலகட்டத்தில் தமிழ் தலைமைகளின் தூர நோக்கற்ற செயலினால், திருகோணமலையின் தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஒன்று கூட கிடைக்குமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது.
இந்தமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, அங்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை போட்டியில் நிறுத்தினார் சி.வி.விக்னேஸ்வரன்.
இரா.சம்பந்தன் தோற்கடிக்கப்பட்டால் தான் தனது அரசியல் தலைமைத்துவம் உறுதி செய்யப்படும், பலமடையும் என்பது அவரது தனிப்பட்ட நம்பிக்கையாக இருந்தது.
அதற்காக அவர், திருகோணமலையின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அங்கு சம்பந்தனை தோற்கடிப்பதற்காகவே ரூபனை போட்டியில் நிறுத்தினார்.
கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைப்பது கடினம் என்பதை ஒரு கட்டத்துக்கு மேல் உணர்ந்து கொண்ட சி.வி.விக்னேஸ்வரன், ரூபனுக்கு வழி விட்டு இரா.சம்பந்தன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.
இரா.சம்பந்தனை தோற்கடிப்போம் என்று சபதம் செய்து போட்டியில் நிறுத்தி விட்டு, அவரை போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று மண்டியிட்டது சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி எனலாம்.
ரூபனின் வெற்றி கேள்விக்குறியாக மாறியிருந்ததால் தான், அவர் அவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிட நேர்ந்தது.
தேர்தல் நடக்க முன்னரே, விக்னேஸ்வரன் அங்கு தமது தோல்வியை வெளிப்படுத்தினார். இதுதான் விக்னேஸ்வரனின் அதிகபட்ச தூர நோக்கு.
திருகோணமலையின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை 2001இல் காப்பாற்றியவர், தம்பி பிரபாகரன் கைகாட்டியவர் என்று வேறு ரூபனை அறிமுகப்படுத்தினார் சி.வி.விக்னேஸ்வரன்.
ரூபன் தோல்வியடைந்தால், பிரபாகரன் கைகாட்டியவர் தோல்வியடைந்து விட்டார் என்ற பழிச் சொல் வரும் என்பது பற்றி அவர் கவலைப்படவில்லை.
ஏனென்றால் விக்னேஸ்வரனுக்கும், பிரபாகரனுக்கும் மனதளவில் கூட ஒருபோதும் நெருக்கம் இருக்கவில்லை.
திருகோணமலையின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்தவர் என்று, ரூபனுக்கு கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வந்த பெருமை, இத்தோடு போய் விடும் ஆபத்து இருந்ததை கூட அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.
அங்கு தமிழ்ப் பிரதிநித்துவம் இல்லாமல் போனால், அந்தப் பழி தம் மீது வரும் என்ற தூரநோக்குக் கூட இல்லாமல் போனது. இரா.சம்பந்தனை வீழ்த்துவது தான் விக்னேஸ்வரனின் தூரநோக்கு. விக்னேஸ்வரனை தோற்கடிப்பது தான் சுமந்திரனின் தூரநோக்கு.
சுமந்திரனைத் தள்ளி விழுத்துவது தான் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், அனந்தி, சிவாஜிலிங்கம் போன்றவர்களின் தூரநோக்கு. இப்படித் தான் இருக்கிறது தமிழ்த் தலைமைகளின் தூரநோக்கு.
தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்கின்ற தலைமைகள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், அதனை எதிர்கொள்வதற்கான வியூகங்களை முன்வைத்து தூரநோக்கில் சிந்திக்கவேயில்லை.
அவர்கள் தேர்தல் வெற்றிகளை மையப்படுத்தியே சிந்தித்தார்கள். சிந்திக்கிறார்கள். தேர்தலில் வெற்றியைப் பெறுவது மட்டும் தான் அதிகபட்ச தூரநோக்காக கருதுகிறார்கள்.
தமிழரின் இருப்பு, நலன்களை பலிகொடுத்தாவது வெற்றியைப் பெற வேண்டும், தமக்கு சவாலானவர்களை தோற்கடித்து விட வேண்டும் என்று தான் செயற்படுகிறார்கள்.
இந்தளவுக்கு குறுகிய நலன்களைக் கொண்ட தமிழ்த் தலைமைகளிடத்தில் தூரநோக்கிலான செயற்திட்டங்களை எதிர்பார்ப்பதும், தவறு தான். ஆனால் இதே தவறை அவர்கள் தொடர்ந்தும் இழைத்துக் கொண்டிருக்க முடியாது.
அரசியல் போட்டிகளாலும், உள்முரண்பாடுகளாலும் தமிழரின் அரசியல் பலம் சிதைந்து போய் விடக் கூடாது. ஒரே அரசியல் பிரதிநிதிகளை அனுப்பி எதைக் கண்டோம், வெவ்வேறு கட்சிகளில் இருந்து அனுப்புவது என்ன தவறு என்ற பிரசாரம் முன்னிறுத்தப்பட்டது.
மாற்றுத் தலைமை மாற்று அணி என்பனவற்றை முன்னிறுத்தி தோல்வியில் முடிந்ததால் தான், பல கட்சிகளை அனுப்புவோம் என்று பிரசாரம் செய்யப்பட்டது. அந்தப் பிரசாரத்துக்கு இந்த தேர்தலில் ஓரளவுக்கு சாதகமான பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இம்முறை கூட்டமைப்புடன் அதனை எதிர்த்து அரசியல் செய்யும், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் போன்றவர்கள் மாத்திரமன்றி, டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், வியாழேந்திரன், பிள்ளையான் போன்றவர்களும் நாடாளுமன்றத்துக்கு செல்லப் போகிறார்கள்.
ஒரு பன்மைத்துவ அரசியல் சூழல் தமிழ்த் தரப்பில் உருவாகியிருக்கிறது, இந்த நிலைமை எந்தளவுக்கு உகந்தது என்ற கேள்விக்கு இனிமேல் தான் பதில் கிடைக்கும். யார் யார் எதைச் செய்யப் போகிறார்கள் என்று தெரியவரும்.
இந்தச் சூழலை எத்தகைய தூர நோக்கில் தமிழ்க் கட்சிகள் செயற்படப் போகின்றன- தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றன?
பொறுத்திருந்து பார்க்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM