- சுயாஷ் தேசாய் -

மக்கள் சீனக்குடியரசு அதன் மக்கள் விடுதலை இராணுவம் தாபிக்கப்பட்டதன் 93 ஆவது வருடாந்தத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி கொண்டாடியது. நான்சாங் கிளர்ச்சியின் போது (கோமின்ராங் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட 1927 ஷங்காய் படுகொலைக்கு எதிராக சீனக்கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய அந்தக் கிளர்ச்சியே சீன உள்நாட்டுப்போரில் கம்யூனிஸ்ட் படைகள் ஈடுபடத்தொடங்கியதே - 1 ஆகஸ்ட் 1927 - நான்சாங் கிளர்ச்சி என்று அழைக்கப்படுகிறது) வலுப்படுத்தப்பட்ட மக்கள் விடுதலை இராணுவம் சீன உள்நாட்டுப்போரின் போது கோமின்ராங்கினால் மேற்கொள்ளப்பட்ட கம்யூனிஸ்ட்கள் களையெடுப்பிற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஆயுதப்படைப்பிரிவாக அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு சுமார் 200,3000 படையினரையும் 510,000 ரிசேர்வ் படையினரையும் கொண்டதாக உலகின் மிகப்பெரிய ஆயதப்படையாக மக்கள் விடுதலை இராணுவம் மாறியிருக்கிறது.

மக்கள் விடுதலை இராணுவம் அதன் அண்மைய வரலாற்றில் இரண்டு முக்கிய திருப்புமுனைகளைக் கண்டது. முதலில் 1990 களில் முதலாவது வiளைகுடா யுத்தத்தின்போது அமெரிக்கா பயன்படுத்திய மிகவும் நவீன ரகமான இராணுவத்தளபாடங்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களை நாடுவதற்கு மக்கள் விடுதலை இராணுவத்தை நிர்பந்தித்தன. இரண்டாவதாக 2049 ஆம் ஆண்டளவில் மக்கள் விடுதலை இராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ஒரு படையாக மாற்றும் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவரும் ஜனாதிபதியுமான சீ ஜின்பிங்கின் கனவு அதன் புனர்நிர்மாணத்திற்கும் துரித நவீனமயமாக்கத்திற்கும் வழிவகுத்தது. ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் அதிகரித்துவரும் இராணுவ வல்லமைக்கு மத்தியிலும் மக்கள் விடுதலை இராணுவத்திற்கு 4 முக்கிய குறைபாடுகள் இருக்கின்றன. 93 வருடங்களை நிறைவுசெய்திருக்கும் அந்த இராணுவத்திற்கு இருக்கின்ற மிகவும் முக்கியமான 4 சவால்களை இங்கு விபரிக்க விரும்புகின்றேன். 

1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு மக்கள் விடுதலை இராணுவம் எந்தவொரு போரிலும் பங்கேற்கவில்லை என்பதால் சமாதான நோய், சமாதானகாலப் பழக்கவழக்கங்கள், சமாதானகாலப் பிரச்சினைகள் அதைத் தொற்றியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. படைவீரர் ஒருவர் சமாதான காலத்தில் நாளடைவில் வளர்த்துக்கொள்ளக்கூடிய அணுகுமுறை போர்க்காலத்தில் இருக்கக்கூடிய தயார்நிலைக்கான பயிற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலைவரமே இதுவாகும்.

நவீன யுத்தத்தின் மும்முரத்தை அல்லது தீவிரத்தன்மையை மக்கள் விடுதலை இராணுவம் விளங்கிக்கொள்ளவில்லை என்று சீனக்கம்யூனிஸ்ட் கட்சி கவலைகொண்டுள்ளது. இதனை நன்கு தெரிந்துகொண்ட சீ ஜின்பிங் 'யதார்த்தபூர்வமான சண்டை" நிலைமைகளின் கீழ் பயிற்சிபெறக்கூடியதாக மக்கள் விடுதலை இராணுவத்தை மாற்றுவதற்கு அதன் விதிமுறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். யுத்த அனுபவமின்மையை ஈடுகட்டுவதற்காக 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு வெளிநாட்டு இராணுவங்களுடனான மக்கள் விடுதலை இராணுவத்தில் இருதரப்பு - முத்தரப்பு இராணுவ ஒத்திகைகளின் எண்ணிக்கை 1914 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்திருக்கிறது என்பதையும் எனது ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த மாற்றத்தின் தாக்கத்தை மக்கள் சீனக்குடியரசு போரொன்றுக்குப் போகும்வரை உறுதிப்படுத்த முடியாது.

இரண்டாவது கடந்த இரு தசாப்தங்களாக மட்டுப்பாடில்லாத ஒரு நவீனமயமாக்கலை முன்னெடுத்து வந்திருக்கும் மக்கள் விடுதலை இராணுவம் 2012 ஆம் ஆண்டு மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராக சீ ஜின்பிங் பொறுப்பேற்றதிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுவந்திருக்கிறது. இந்த முன்னேற்றம் அதன் பாதுகாப்பு பட்ஜெட்டில் பிரதிபலிக்கிறது. மூலதன செலவினத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பங்கை சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கு ஒதுக்கியிரு;கிறது. 

ஆனால் இராணுவமயமாக்கலுக்குப் பொருத்தமானதாக விசேடமாகக் கடற்படை, விமானப்படை, ரொக்கெட் படை மற்றும் கேந்திர முக்கியத்துவ ஆதரவுப்படை போன்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட சேவைகளில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகளின் தரம் அமையவில்லை. இந்தக் குறைபாடுகளைப் புரிந்துகொண்ட நிலையில், மக்கள் விடுதலை இராணுவம் அதன் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மாற்றிக்கொண்டது. அதாவது விசேட மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் இருந்த சிறந்த தகுதியுடைய மாணவர்களைச் சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

2017 சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் சீ ஜின்பிங்கினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் ஆயுதப்படைகளுக்கான தகவல் தொழில்நுட்ப இலக்கை 2035 ஆம் ஆண்டளவில் அடைவதற்கு மக்கள் விடுதலை இராணுவம் அதன் ஆட்சேர்ப்புப்பாணியை மாற்றியமைக்க வேண்டிய தேவையை உணர்ந்தது. இதனைச் சாதிப்பதற்கு, மிகவும் சிறந்த ஆற்றலும் தகுதியும் உடைய படித்த மாணவர்களைக் கவர்வதற்குப் பல நிதி ஊக்குவிப்புக்களை மத்திய இராணுவ ஆணைக்குழு அறிமுகப்படுத்தியது. ஆனால் அனுகூலமான ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்ட போதிலும் குறைபாடுகள் இன்னமும் இருப்பதாகவும் மக்கள் விடுதலை இராணுவம் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட சேவைகளை முன்னெடுப்பதற்கான ஆற்றல் வாய்ந்த நிபுணர்களின் பற்றாக்குறைக்கு இன்னமும் முகங்கொடுத்துக்கொண்டேயிருக்கிறது.

மூன்றாவதாக ஆயுதப்படைகள் மத்தியில் நிலவுகின்ற ஊழல்கள் போர்க்களத்தில் காண்பிக்கவேண்டிய அவற்றின் ஆற்றலை மலினப்படுத்துவதுடன் இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கத்தைக் கற்பிக்கின்ற அதேவேளை, தேசிய பாதுகாப்பு அபிவிருத்தியைப் பெரிதும் பாதிக்கின்றன. மக்கள் விடுதலை இராணுவத்தை 1980 களின் புதிய சந்தைச் சீர்திருத்தங்களின் விளைவாகக் கிடைக்கப்பெறுகின்ற வர்த்தகத்திலும் தொழில்வாய்ப்புக்களிலும் ஈடுபடுத்தியபோது அதில் ஊழல்மோசடிகள் பரவலாக வளர்ந்தன. 1998 ஆம் ஆண்டில் இராணுவ - வர்த்தக வலைப்பின்னலைக் கலைப்பதன் மூலமாக இந்தப் பிரச்சினையைக் கையாளுவதற்க அப்போதைய மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவரும் ஜனாதிபதியமான ஜியாங் செமின் முயற்சித்தார். ஆனால் அந்த நேரமளவில் சீரளிவு மிகவும் ஆழமானதாகி வியாபகமடைந்துவிட்டது. 

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக 2012 ஆம் ஆண்டில் வந்த பிறகு சீ ஜின்பிங்க ஊழலுக்கு எதிரான போராட்டத்தை விரிவுபடுத்தியதன் விளைவாக 4000 இற்கும் அதிகமான ஊழல் எதிர்ப்பு விசாரணைகள் நடத்தப்பட்டன. சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஹ{ஜின்டாவோவின் கீழ் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் உபதலைவர்களாகப் பணியாற்றிய ஸ{ கைஹோ, குவோ பொக்ஸியோங் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட விசாரணைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால் மத்திய இராணுவ ஆணைக்குழுவிற்குள் ஒழுங்கு, கட்டுப்பாட்டு மேற்பார்வை ஆணையாளர் பதவி அறிமுகம், நான்கு இராணுவ - உயர்மட்ட அதிகாரத்துவத் திணைக்களங்களின் கலைப்பு மற்றும் மத்திய இராணுவ ஆணைக்குழுவிலிருந்து படைத்தளபதிகள் நீக்கம் போன்ற சில மாற்றங்கள் உள்ளுக்குள் எதிர்ப்புக்களை மூளச்செய்தன. 

சீ ஜின்பிங்கின் சீர்திருத்தங்களின் விளைவாகப் பாதிக்கப்பட்டவர்களில் செல்வாக்கு மிக்கவர்கள் பலரும் அடங்குகின்றார்கள். அதனால் அந்தச் சீர்திருத்தங்கள் ஆயுதப்படைகளுக்குள் எதிர்ப்பிற்கு வழிவகுத்திருக்கக்கூடியது சாத்தியமாகும். சிரேஷ்ட அதிகாரிகளில் பலர் மக்கள் விடுதலை இராணுவத்தின் பொதுநிலைப் படையணிகளுக்குள் பொருத்தமான பதவிகளுக்கு மாற்றப்பட்டார்கள். கடமையிலிருந்து நீக்கப்படுவதைவிடுத்து அவர்களுக்கு நிவாரணமளிக்கும் ஒரு ஏற்பாடாக இவ்வாறு செய்யப்பட்டது. இதனால் எதிர்ப்புக் குறைவடைந்த போதிலும் கூட ஊழலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களில் பயனுடைத்தன்மை கேள்விக்குரியதாக்கப்படலாம். 

நான்காவதாக கம்யூனிஸ்ட் புரட்சிக்குப் பிறகு மக்கள் சீனக்குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு நிறைவடையப்போகின்ற 2049 ஆம் ஆண்டளவில் உலகத்தரம் வாய்ந்த படையொன்றைக் கட்டியெழுப்பும் சீனக்கனவை நனவாக்குவதில் இடையறாத நவீன இராணுவமயமாக்கல் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். ஆனால் அதிகரிக்கின்ற செலவினமும் ஏற்கனவேயிருக்கும் ஆயுத தளபாடங்களைப் பராமரிப்பதற்கான செலவுகளும் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். 2012 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சீனா அதன் இராணுவ நவீனமயமாக்கலுக்காகச் செலவிடுகின்ற நிதி அதிகரித்து வந்திருக்கிறது. இது 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு மொத்த மூலதனச்செலவினத்தில் 40 சதவீதத்தைத் தாண்டியது. 

ஆனால் சீனா மிகப்பெரிய எண்ணிக்கையில், அதாவது 5 கோடி 70 இலட்சம் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஓய்வுபெற்ற வீரர்களைக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஓய்விற்குப் பின்னரான பல்வேறு சலுகைகளைக் கோருகின்றார்கள். ஓய்விற்குப் பின்னரான வேதனங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் வாழ்வாதார மானியங்களுக்கான நிதி சீனாவின் பாதுகாப்புச் செலவினங்களில் இருந்தே ஒதுக்கப்படுகின்றது. இதுவிடயத்தில் 2018 ஆம் ஆண்டிலிருந்து அதிகரிக்கின்ற செலவினங்கள் அண்மைய எதிர்காலத்தில் மூலதனச்செலவினங்களில் நிச்சயமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். தவிரவும் தற்போதிருக்கும் இராணுவத் தளபாடங்களையும், ஆயுதங்களையும் மக்கள் விடுதலை இராணுவம் பராமரிக்க வேண்டியும் இருக்கிறது. இவை கடந்த ஒருசில வருடங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டவையாகும். 

கடற்படை மற்றும் விமானப்படை போன்ற தெரிந்தெடுக்கப்பட்ட துறைகளில் உபகரணங்களையும், கப்பல்களையும் பராமரிப்பதற்கான செலவினம் அவற்தை; தயாரித்துப் பயன்பாட்டிற்கு விடப்பட்டபோது ஏற்பட்ட செலவினத்தைவிட மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது. அதனால் அதிகரிக்கும் செலவினங்கள் மங்ஞம் பராமரிப்புச்செலவுகள் என்ற இரட்டைக்காரணிகள் சீனாவின் இராணுவ நவீனமயமாக்கல் முன்னெடுப்பைத் தாமதப்படுத்தும். 

இந்த நான்கு முக்கிய பிரச்சினைகள் தவிரவும் படைகளை விமானம் மூலம் கொண்டுசென்று தரையிறக்குவதிலும், கடற்பரப்பில் எரிபொருள் மீள்நிரப்பலிலும் உள்ள ஆற்றல்களில் இருக்கக்கூடிய மூலோபாய மட்டுப்பாடுகள், வெளிநாடுகளில் இருக்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட இராணுவத்தளங்கள், கூட்டு நடவடிக்கைகளுக்கான ஆற்றல்கள் இன்மை, மக்கள் விடுதலை இராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகள் மத்தியில் சுழற்சி முறையிலான மாற்றங்களின்மை போன்ற ஏனைய போர்த்திற நடவடிக்கைக் குறைபாடுகளும் இருக்கின்றன. இந்த மட்டுப்பாடுகள் சகலதும் சீனாவின் கனவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மாத்திரமல்ல, எதிர்காலத்தில் அதன் மூலோபாய இராணுவ வழிகாட்டல் விதிமுறைகளை அடைவதற்கான ஆற்றல்களையும் மாற்றியமைக்கும்.(இந்துஸ்தான் ரைம்ஸ்)

(சுயாஷ் தேசாய் பெங்களுரில் உள்ள தக்ஷசிலா நிறுவனத்தில் சீன ஆய்வுகளுக்கான திட்டத்திற்கான ஆய்வாளராவார்)