- ரொபட் அன்டனி -
விகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள்
தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற
ஆசனங்கள்
1989 – 125
1994 – 94
2000 – 89
2001 – 109
2004 – 82
2010 – 60
2015 – 106
2020 – 1
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலானது நாட்டின் அரசியல் கட்சிகளை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளதுடன் வரலாற்று ரீதியான திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு முக்கிய சாதனைகள் மற்றும் தோல்விகள் என்பனவற்றை இந்த தேர்தல் நாட்டுக்கு கொடுத்துள்ளது.
விகிதாசார தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக ஆளும் கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளமைஇ நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தது முதல் பல்வேறு திருப்புமுனை விடயங்களை முன்னெடுத்த வரலாற்று ரீதியான ஐக்கிய தேசிய கட்சியின் மிக மோசமான தோல்விஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கம் வடக்கில் பின்னடைவை சந்தித்தமை என பல முக்கியத்துவம் திருப்பங்கள் இந்த தேர்தலில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன. தமிழ்க் கூட்டமைப்பு 10 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி. 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டு ஆசனங்களையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இ இ தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இ தமிழ் மக்கள் புலிகள் கட்சிஇ முஸ்லிம் காங்கிரஸ்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்இ முஸ்லிம் தேசிய முன்னணி இ தேசிய காங்கிரஸ்இ ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுன தனித்து 145 ஆசனங்களை பெற்றபோதிலும் கூட்டு கட்சிகளின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. காரணம் சுதந்திரக் கட்சி பெற்றுள்ள ஒரு ஆசனம் ஈ.பி.டி.பி. பெற்றுள்ள இரண்டு ஆசனங்கள் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி பெற்ற ஒரு ஆசனம் மற்றும் தேசிய காங்கிரஸ் பெற்ற ஒரு ஆசனம் ஆகிய ஐந்து ஆசனங்களையும் கொண்டுள்ள கட்சிகள் ஆளும் கட்சியின் கூட்டு கட்சிகள் என்பதால் சிறிலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றிருக்கின்றது. அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.
22 தேர்தல் மாவட்டங்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 18 மாவட்டங்களில் அமோக வெற்றியீட்டியுள்ளது. வடக்கு கிழக்கு மூன்று மாவட்டங்களில் தமிழ்க் கூட்டமைப்பும் கிழக்கு மாகாணத்தில் ஒரு மாவட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் கைப்பற்றியுள்ளன.
ஆளும் கட்சியின் எழுச்சி
இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு கிடைத்த வெற்றியானது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மீது மக்கள் வைத்துள்ள மிகப்பெரிய நம்பிக்கையை வெளிக்காட்டுகின்றது. கடந்தகால நல்லாட்சியில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தல் விடயத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை முன்னணியில் இருக்கின்றமை போன்ற காரணங்கள் ஆளும் கட்சியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளன. அது மட்டுமன்றி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தேவையான அரசாங்கத்தை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்பதனை மக்கள் நினைவில் இருத்தி வாக்களித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் நாட்டில் அரசியலமைப்பு ரீதியாக சில மாற்றங்களை செய்வதற்கும் புதிய அரசியலமைப்பை கொண்டுவரவும் தேர்தல் முறையை மாற்றவும் தமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் அரசாங்கம் கோரியவாறு மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்த தேர்தலில் என்ன நடந்தது என்பதனை பார்க்கவேண்டும்.
ஐ.தே.க.வுக்கு ஏற்பட்ட அவலம்
இம்முறை ஐக்கிய தேசிய கட்சி சஜித் தரப்பு மற்றும் ரணில் தரப்பு என பிரிந்து போட்டியிட்ட நிலையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி கடும் மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறான பாரிய பின்னடைவை இதற்கு முன்னர் சந்தித்ததில்லை.
ஐக்கிய தேசிய கட்சி எப்படி உருவாகியது?
ஐக்கிய தேசிய கட்சி என்பது நாட்டின் சுதந்திர வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட கட்சியாகும். ஆரம்பத்தில் இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற பொது அமைப்பு 1919 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு அப்போதைய நிலைமையில் இலங்கையின் அபிவிருத்தி சுதந்திரம் காலனித்துவ மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தி வந்தது. இந்த அமைப்பே இலங்கையின் முதலாவது நிறுவன மய அரசியல் அமைப்பாக உருவெடுத்தது. ஆனால் அரசியல் கட்சியாக பார்க்கப்படவி்ல்லை. 1931 ஆம் ஆண்டு இலங்கையில் வாக்குரிமை வழங்கப்பட்ட பின்னர் நடைபெற்ற சட்ட சபைக்கான தேர்தலில் இலங்கை தேசிய காங்கிரஸ் அமைப்பு 22 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் கட்சி அரசியல் போட்டி இருக்கவில்லை. அதன் பின்னர் 1935 ஆம் ஆண்டு லங்கா சம சமாஜ கட்சி உருவாக்கப்பட்டது. இதுவே இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியாக பார்க்கப்படுகின்றது.
இந்த சூழலிலேயே இலங்கை தேசிய காங்கிரஸ்இ சிங்கள மகா சபைஇ அகில இலங்கை முஸ்லிம் லீக்இ அகில இலங்கை மூர் சங்கம் ஆகியன இணைந்து ஐக்கிய தேசிய கட்சியை 1946 ஆம் ஆண்டு உருவாக்கின. பெரும்பான்மை சமூக ஆதிக்கத்தின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கப்பட்டாலும் அதில் அழுத்தம் பிரயோகிக்க கூடியவகையில் சிறுபான்மை முக்கயஸ்தர்கள் இடம்பெற்றனர். இவ்வாறு வரலாற்று ரீதியாக நாட்டின் அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய வகையில் பிரமாண்டமாக உருவெடுத்த மற்றும் உருவாக்கப்பட்ட மாபெரும் கட்சியே ஐக்கிய தேசிய கட்சியாகும். இன்று அந்தக் கட்சிக்கு என்ன நடந்தது?
1956 வீழ்ச்சி
1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியிலேயே இலங்கையின் முதலாவது பிரதமராக டி.எஸ். சேனாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். எனினும் அப்போதே கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டது. 1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியிலிரு்து விலகிய எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்தே 1956 ஆம் ஆண்டு தேர்தலில் பண்டாரநாயக்க வேறு பல சக்திகளை இணைத்து ஆட்சிமைத்தார். 1956 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி இலங்கை தமிழரசு கட்சி மற்றும் லங்கா சம சமாஜ கட்சி ஆகியவற்றை விட குறைவான ஆசனங்களையே பெற்றது. 1956 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட.சி பின்னடைவை சந்தித்தபோதும் 8 ஆசனங்களை பெற்றிருந்தது. அதுவே வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சி பெற்ற மிகப்பெரிய தோல்வியாகும்.
1977 அரசியல் திருப்பம்
ஆனால் அதன் பின்னர் வெற்றி தோல்வி என கலவையாகவே பயணித்த ஐக்கிய தேசிய கட்சி 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாட்டை திருப்பிப்போடும் வகையிலான வெற்றியை அடைந்தது. அந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக பாராளுமன்றத்துக்கு பிரவேசித்தார். அதில் ஐக்கிய தேசிய கட்சி 168 ஆசனங்களில் 140 ஆசனங்களை பெற்று ஆறில் ஐந்து பலத்தை பெற்றது. அதில் வெற்றிபெற்று 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் திருத்தத்தை செய்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற ஜே.ஆர். ஜயவர்த்தன நாட்டில் பாரிய மாற்றங்களை செய்தார்.
1978 ஆம் ஆண்டு புதிய இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர் பதவி வலுவிழக்கப்பட்டது. அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதி வசம் சென்றன. அதுமட்மின்றி 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டுடன் 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொகுதி தேர்தல் முறையிலிருந்து விகிதாசார தேர்தல் முறையை இலங்கையில் அறிமுகப்படுத்தியது ஐக்கிய தேசிய கட்சியாகும். ஐக்கிய தேசிய கட்சி காலத்திலேயே புலிகள் அமைப்புடன் பல தடவைகள் சமாதான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. ஜே.ஆர். ஜயவர்த்தன ரணசிங்க பிரேமதாச மற்றும் டி.பி. விஜேதுங்க என மூன்று ஜனாதிபதிகளை இலங்கைக்கு தந்துள்ளது.
இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சி என்பது இந்த நாட்டின் பல திருப்பங்களை ஏற்படுத்திய கட்சி என்பதுடன் அதன் தற்போதைய தலைவரும் பழுத்த அரசியல் அனுபவம் மிக்கவர். தெற்காசியாவில் இருக்கக்கூடிய ஒருசில சிரேஷ்ட சர்வதேச விவகாரம் அறிந்த அரசியல் தலைவர்களில் ரணில் விக்ரமசிங்க ஒருவர். 1977 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர். இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியின் அருகாமைக்கு வந்து சென்றவர். அவரின் காலத்தில் பல தோல்விகள் ஏற்பட்டாலும் மூன்று முறை வெற்றியை பெற்றுக்கொடுத்தவர். ஐந்து முறை பிரமதமராக பதவி வகித்தவர்.
ஆனால் இன்று மாவட்ட மட்டத்தில் ஒரு ஆசனத்தைக் கூட ஐக்கிய தேசிய கட்சியினால் பெற முடிவில்லை. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் பல தடவைகள் முதலிடத்தை பெற்றுவந்த ரணில் விக்ரமசிங்க இம்முறை தோல்வியடைந்திருக்கிறார். ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனம் மட்டும் கிடைத்துள்ளது. அந்தளவுக்கு இந்த மாபெரும் கட்சி மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி பிரிந்து போட்டியிட்டதாலேயே இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களை பெற்றுள்ளது. எனவே இரண்டு தரப்பினரும் இணைந்து போட்டியிட்டிருந்தால் இது இன்னும் சற்று அதிகமாக இருந்திருக்கும். ரணில் விக்ரமசிங்க அகில விராஜ் காரிய வசம் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் வெற்றிபெற்றிருப்பார்கள். ஆனால் அதற்கான அவகாசத்தை ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் இழந்துவிட்டது. இறுதி நேரத்திலும் இரண்டு தரப்பினரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கப்பட்ட போதும் அந்த முயற்சி கைக்கூடவில்லை. கட்சியை பிரியாமல் தடுப்பதற்கு மேலும் முயற்சித்திருக்கலாம். பிரதான எதிர்க்கட்சி ஒன்று பிளவடைந்து போட்டியிடும்போது அது ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பது அரசியலில் யாருக்கும் தெரியாத விடயமல்ல. எனினும் இந்த பிளவை தடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே ஐக்கிய தேசிய கட்சி தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து திட்டமிடவேண்டியது அவசியமாக இருக்கின்றது.
குறிப்பாக அடுத்து எவ்வாறு கட்சி பயணிக்கப்போகின்றது என்பது குறித்து பரந்துபட்ட அனுகுமுறை அவசியமாகும். கட்சி மட்டத்தில் தவறுகள் விடப்பட்டிருந்தால் அதிலிருந்து பாடத்தைக் கற்று அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவேண்டும்.
1989 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு வரை பல தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்தாலும் கணிசமான அளவு ஆசனங்களை பெற்று வந்தது. அவ்வாறு எதுவுமற்ற எதிர்க்கட்சிகள் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக ஜே.ஆர். ஜயவர்த்தன தற்போதைய தேர்தல் முறையையே கொண்டுவந்தார்.
அதனடிப்படையிலேயே கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளை பெற்று வந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 125 ஆசனங்களை பெற்று ஆட்சியமைத்தது. 1994 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்தாலும் 94 ஆசனங்களை பெற்றது. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஐககிய தேசிய கட்சி தோற்றபோதும் 89 ஆனங்களை பெற்றது. 2001 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 109 ஆசனங்கை பெற்று வெற்றியீட்டி ஆட்சியமைத்தது. தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 82 ஆசனங்களை பெற்று தோல்வியடைந்தது. 2010 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்விடைந்த போதிலும் 60 ஆசனங்களை பெற்றது. 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றது. அதில் 106 ஆசனங்களை அந்தக் கட்சி பெற்றது. ஆனால் 2020 பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்தை அதுவும் தேசிய பட்டியலில் மட்டுமே பெற்றுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி இந்த மோசமான நிலைமைக்கு சென்றமைக்கு கட்சிக்குள் ஏற்பட்ட பிளவே காரணம் என்பது தெளிவான விடயமாக இருக்கின்றது. அதனால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் தீர்மானங்களை எடுக்கவேண்டும். அதாவது சஜித் பிரேமதாச அணியுடன் மீண்டும் இணைந்து செயற்படுவதா? அதாவது இரண்டு தரப்பினரும் மீண்டும் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியாக பயணிப்பதா? என்பது தொடர்பில் தீர்மானம் அவசியமாகும்.
மேலும் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் தொடர்பிலேயே இந்த பிளவு பிரச்சினை உருவாகியது. எனவே தற்போது படுதோல்வியடைந்துள்ள நிலையில் தலைமைப் பதவி தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவும் சிந்திக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போதைய கட்சியின் இக்கட்டான கட்டத்தில் தலைமை பதவி தொடர்பில் ரணில் விக்ரமசிங்க ஏதாவது ஒரு தீர்மானத்தை எடுத்தாகவேண்டும். இது தொடர்பில் ரணில் சஜித் ஆகியோர் இருதரப்பு சந்திப்புக்களை நடத்துவது அவசியமாகும். இலங்கைக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு கரைந்து போவது ஜனநாயகக் கட்டமைப்புக்கு ஆரோக்கியமாக அமையாது.
எனவே 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பெற்றுக்கொடுத்துள்ள தேர்தல் முடிவுகளை பாடமாகக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி விரைந்து தூரநோக்குடனான தீர்மானத்தை எடுக்கவேண்டியிருக்கின்றது. கட்சிக்கு அடுத்துவரும் வாரங்கள் மிக தீர்க்கமானவையாகும். என்ன நடக்கும் என்பதனை பார்ப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM