(ஆர்.ராம்)

தமிழ் மக்கள் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,  திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான இரா.சம்பந்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளின் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில்தமிழ்த் தேசிய வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்த சாதகமான நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முதலில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த  மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களித்ததோடு அதற்கும் அப்பால்சென்று சில தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தங்களுடைய வாக்குகளை அளித்திருக்கின்றார்கள்.

அந்தக்கட்சிகளும் பிரதிநிதித்துவங்களை பெற்றிருக்கின்றன. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிகப்படியாக ஒன்பது ஆசனங்கள் தெரிவாகியிருக்கின்றன. தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைத்துள்ளது. மக்கள் இவ்விதமாக வழங்கிய ஆணையை நாம் மதிக்கின்றோம். எமது அரசியல் இயக்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. நாம் மக்களுக்காக, அவர்களின் அபிலாஷைகளை நியாயமான முறையில் மீளப்பெறமுடியாத வகையில் பெற்றுக்கொடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றோம்.

அதற்காக நாம் பல்வேறு கருமங்களை பல்வேறு தளங்களில் முன்னெடுத்திருக்கின்றோம். முன்னெடுக்கவும் உள்ளோம். நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்காக எமது மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். ஆகவே கூட்டமைப்பிற்கு வெளியே தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ் மக்களுக்காகவே செயற்படவுள்ளார்கள். அவ்வாறாயின் அவர்களும் எம்முடன் ஒற்றுமையாக பயணிக்க முடியும்.

மக்களுக்காக ஒன்றாகப் பயணிப்பதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. எமது மக்களுக்காக நாம் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஏனைய தரப்பினருடன் இணைந்து பயணிப்பதற்கு தயாராகவே உள்ளோம். ஓற்றுமை அவசியம். அது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அவர்களின் விடயங்களை பிரிந்து நின்று கையாள்வதையும் விடவும் ஒன்றுபட்டு முன்னெடுப்பது சிறந்ததே. ஆகவே எமது மக்களுக்காக அனைத்து தரப்பினுரும் ஒன்றிணைவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. நாமும் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.