‘19ஆவது திருத்தத்தில் காணப்படுகின்ற விடயங்களை கீழ் நோக்கிச் செல்லும் வகையில் மாற்றங்களைச் செய்வதை தவிர்த்து அதனை மேலும் வலுவாக்கும் வகையிலான செயற்படுகளை முன்னெடுக்க வேண்டும்’
நான் சுயதீர்மானத்தின் அடிப்படையிலேயே தவிசாளர் பதவிலியிருந்து விலகுகின்றேன். இதில் எவ்விதமான அழுத்தங்களும் கிடையாது. நான் அழுத்தங்களுக்கு அஞ்சி பதவி விலகும் நபர் அல்ல என்று எதிர்வரும் செப்டம்பர் மாத நிறைவுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியிலிருந்து விலகும் கலாநிதி.தீபிகா உடகம தெரிவித்துள்ளர்.
இராஜிநாமா அறிவிப்பினை உத்தியோக பூர்வமாக அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டதன் பின்னர் வீரகேசரி வாரவெளியிட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியிலிருந்து இராஜிநாமாச் செய்வதாக நீங்கள் திடீரென அறிவித்தமைக்கான காரணம் என்ன?
பதில்:- நான் தவிசாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவை மிகவும் நிதானமாகக் குறிப்பிட்ட காலம் சிந்தித்தே எடுத்திருந்தேன். அந்தத் தீர்மானத்துக்கு அமைவாகவே ஜுலை முதல் வாரத்தில் எனது கடிதத்தை அரசியலமைப்பு பேரவையிடத்தில் கையளித்திருந்தேன். அரசியலமைப்பு பேரவை இரண்டு வாரங்களின் பின்னரே கூடியதோடு எனது இராஜிநாமா விடயத்தையும் பகிரங்கப்படுத்தியது. தேர்தல் பரபரப்பு மிக்க சூழலில் எனது இராஜிநாமா விடயம் வெளிப்பட்டதால் திடீரென நான் பதவி விலகுவது போன்று உணரப்பட்டு விட்டது.
கேள்வி:- தவிசாளர் பதிவியில் நீடிப்பதற்கான காலம் இருக்கின்ற நிலையில் முன்கூட்டியே இராஜிநாமாச் செய்துள்ளீர்களே?
பதில்:- நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத் தலைவராகவும், பேராசிரியராகவும் கடமையாற்றி வருகின்றேன். அவ்வாறானதொரு நிலையில்தான் அந்தப் பொறுப்புக்களிலிருந்து விடுமுறை பெற்றுக்கொண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியைப் பொறுப்பேற்றிருந்தேன். முதல் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் நான் அதிலிருந்து விடைபெறுவதற்கே முனைந்திருந்தேன். எனினும், 2018இல் ஒக்டோபர் அரசியல் புரட்சியும் ஏற்பட்டது.
அத்தகைய நிலைமை பதவி வெற்றிடத்துடன் காணப்படும் சுயாதீன ஆணைக்குழுக்களில் தாக்கம் செலுத்தும் என்ற முற்கூட்டிய சிந்தனை எம் அனைவருக்கும் இருந்தது. அதனடிப்படையில் அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆணைக்குழுக்கனின் தவிசாளர்களை அழைத்து நிலைமைகளை விபரித்ததோடு பதவிக்காலத்தை நீடிக்க வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார். அதற்கமைவாக எனது பதவிக்காலமும் மேலும் நீடிக்கப்பட்டது. அச்சமயத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மீள நியமனத்தைப் பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் இரண்டாவது தடவையாக பதவியில் அமர்ந்தப்பட்ட எனக்கு இன்னமும் ஒருவருடமே எஞ்சியிருக்கின்றது. எனது துறைசார் விடயப் பரப்பில் இருந்து ஓய்வுபெற்ற நபராக நான் இருந்திருந்தால் இதே பதவியில் தொடர்ந்தும் இருக்கத் தலைப்பட்டிருப்பேன். ஆனால், எனக்கு கற்பித்தல் துறையில் பாரிய பொறுப்பு இருக்கின்றது. இளைய சந்ததியைத் தயார்ப்படுத்துவதற்கான எனது கடமையை நான் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றே விரும்புகின்றேன்.
கேள்வி:- ஆணைக்குழுவிலிருந்து விடைபெற்றதன் பின்னர் மனித உரிமைகள் செயற்பாட்டில் உங்களது வகிபாகம் எவ்வாறிருக்கப் போகின்றது?
பதில்:- மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் செயற்பாட்டில் நான் தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன். ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் அமர்வதற்கு முன்னதாக நான் எவ்வாறு செயற்பட்டேனோ அதேபோன்று தொடர்ந்தும் செயற்படவுள்ளேன். மனித உரிமைச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பதவிகளோ, அதிகாரங்களோ அவசியமில்லை.
கேள்வி:- ஆணைக்குழுவில் நீங்கள் பணியாற்றிய காலத்தில் மறக்கமுடியாத விடயங்களாக எவற்றைக் கூறுவீர்கள்?
பதில்:- பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. மக்களுக்காக ஆணைக்குழு செயற்படுகின்றபோது அவர்கள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கும் கருத்துக்கள் எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துபவையாகவே இருந்திருக்கின்றன. மக்களின் கருத்துக்கள், அனுபவப் பகிர்வுகள், அவர்களின் இன்ப துன்பங்கள் என்றுமே மறக்க முடியாதவை.
விசேடமாக, பொதுமக்களுக்கு ஏதோவொரு வகையில் குரல் கொடுப்பதற்காக அல்லது யாரும் இல்லாத எமக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளனது என்ற மனநிலை பிரதிபலிக்கின்றபோது ஏற்படுகின்ற திருப்தியான நிலைமைகள் என்றுமே மறக்கவே முடியாதவையாக இருக்கின்றன.
அதேநேரம், பொதுவெளிகள் முதல் பாராளுமன்று வரையில் ஆணைக்குழு மீது, அதன் செயற்பாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. விமர்சனங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஆணைக்குழுவைப் பொறுத்தவரையில் அது வெற்றிகொள்ளப்பட வேண்டியதொரு சவாலாகவே காணப்பட்டிருந்தது. இவ்வாறு பல விடயங்கள் உள்ளன. சில சம்பவங்களை நான் பொதுவெளியில் கூறுவதற்கு விரும்பவில்லை.
கேள்வி:- அரசியலமைப்பு பேரவை மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் காணப்படுகின்ற விமர்சனங்கள் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- ஆணைக்குழுக்களின் பதவிகளுக்கான நியமனங்கள் அரசியலமைப்பு பேரவை ஊடாகவே நடைபெறுகின்றன. அந்தச் சபையில் உள்ள உறுப்பினர்களின் மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் திறன் அதியுச்சமானதாகவே உள்ளது. அந்த அடிப்படையில் அவர்களின் திறன்களையும் உள்ளீர்த்ததாகவே எனது தலைமையிலான ஆணைக்குழுவின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மேலும் நாம் எதிர்பார்த்ததைப் போன்று 19ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அரசியலமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. சில ஏற்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. குறிப்பாக கூறுவதானால் அரசியலமைப்பு பேரவையில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிகமாக உள்ளீர்க்கப்படவில்லை. நிறைவேற்று அதிகார ஆட்சியாளர் தனக்கு விரும்பிய ஒருவரை நேரடியாக ஆணைக்குழுவின் முக்கிய பதவிகளுக்கு நியமிப்பதை விடவும் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட மற்றும் சிவில் சமூகத்தினரின் பங்களிப்புடனான கலந்துரையாடல்கள் ஊடாக நியமனங்கள் நிகழுகின்றமை முன்னேற்றகரமானதாகக் கொள்ள முடியும். ஆனால், இன்னும் முன்னேற்றங்கள் ஏற்பட்டால் மேலும் சிறப்பாகவே இருக்கும்.
கேள்வி:- நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை மேடைகளில் 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டுமென்ற கோசம் பிரதான இடம் பிடித்ததை அவதானித்தீர்களா?
பதில்:- 19ஆவது திருத்தச் சட்டமானது ஏற்கனவே கூறியது போன்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட அனைத்து விடயங்களும் உள்ளீர்க்கப்பட்டிருக்கவில்லை. இருப்பினும், 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக பல்வேறு விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மக்களுக்குப் பொறுப்புக்கூறும் நிலைமைகள் உருவாக்கப்பட்டன. விசேடமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
மேலும் அரசமைப்பில் ஜனநாயகப் பண்புகளை வலுப்படுத்திப் பிரதிபலிக்கும் வகையில் அதிகாரங்களைக் 'கட்டுப்படுத்தல்: சமப்படுத்தல்' கோட்பாட்டுக்கு அமைவாக 19ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசேடமாக நிறைவேற்று அதிகாரத்துறையால் இழைக்கப்படும் அநீதி அல்லது சட்டமீறல் கேள்விக்குட்படுத்தக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் ஒன்றையொன்று மேற்பார்வை செய்வதற்கான சூழல்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்விதமாக பல விடயங்களைக் கூற முடியும். ஆகவே, 19ஆவது திருத்தத்தில் காணப்படுகின்ற விடங்களை கீழ் நோக்கிச் செல்லும் வகையில் மாற்றங்களைச் செய்வதை தவிர்த்து அதனை மேலும் வலுவாக்கும் வகையிலான செயற்படுகளை முன்னெடுக்க வேண்டும். அதனை மக்களே தீர்மானிக்க வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே எதனையும் முன்னெடுக்க முடியும்.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான ஆட்சி அதிகாரப் போக்கும், பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையப்போகின்ற புதிய ஆட்சியும் தங்களுடன் முரண்படலாம் அல்லது தங்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்பதனால் முற்கூட்டியே நீங்களாக விலகிச் செல்கின்றீர்கள் என்ற தோற்றப்பாடொன்று காணப்படுகின்றதே?
பதில்:- முரண்பாடுகள் அல்லது அழுத்தங்கள் அல்லது விமர்சனங்களுக்காக பதவியை இராஜிநாமாச் செய்ய வேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் அவ்விதமான பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டபோது நான் விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. முரண்பாடுகள் ஏற்பட்டு விடும் என்று அஞ்சியோ, அழுத்தங்களுக்கு அடிபணிந்தோ பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் நபர் நானல்லன்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையது. அவர்களுக்கே அதன் உரிமையும் காணப்படுகின்றது. அவ்வாறிருக்கையில் அவ்விதமான கட்டமைப்பொன்றின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு எந்தவொருவருக்கும் உரிமை இல்லை.
அதனைவிடவும், கடந்த ஐந்து வருடங்களாக நான் பதவியில் இருந்துள்ளேன். இந்தக்காலத்தில் எந்தவொரு நபர்களோ அல்லது குழுக்களோ தலையீடுகளைச் செய்வதற்கு முயற்சிக்கவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
மேலும் தற்போது தேர்தல் காலம். இந்தத் தேர்தல் கூட ஒத்திவைக்கப்பட்ட தேர்தலாகும். ஆட்சியாளர்களை மையப்படுத்தியதாக எனது முடிவு அமைவதாக இருக்குமாயின் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்தவுடனேயே பதவியிலிருந்து விலகிச் சென்றிருப்பேன் அல்லவா.
கேள்வி:- மனிதர்களுக்கு எதிரான சித்திரவதைகள் இலங்கையில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில் இதுபற்றி ஆணைக்குழு எவ்விதமான கரிசனையை கொண்டுள்ளது?
பதில்:- நான் பதவியைப் பொறுப்பேற்ற கையோடு முதலாவதாக, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற சித்திரவதைகள் தொடர்பிலேயே கவனம் செலுத்தினோம். அவ்வாறான சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்தவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம்.
விசேடமாக பொலிஸாரால் தடுத்து வைக்கப்படுகின்றபோது மேற்கொள்ளப்படுகின்ற சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகமாக எமக்குக் கிடைத்திருந்தன. அது பற்றிய பல்வேறு நகர்வுகளை ஆணைக்குழு மேற்கொண்ட போதும் அவ்வாறான சித்திரவதைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைக் குறைக்க முடியாத நிலைமையே நீடித்துக்கொண்டிருக்கின்றமையானது கவலை தரும் விடயமாகின்றது. ஆகவே, பொலிஸ் ஆணைக்குழு இந்த விடயத்தில் விசேட கவனத்தைச் செலுத்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே மிகப்பொருத்தமானதொரு செயற்பாடாக இருக்கும்.
மேலும், கொரோனா காலத்தில் சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. ஆகவே, மனிதர்களுக்கு எதிரான சித்திரவதைகளைக் குறைவடையச் செய்வதற்கான செயற்பாட்டில் ஆணைக்குழுவால் முழுத்திருப்தி கொள்ள முடியாது.
கேள்வி:- நாட்டில் சிறந்த நிர்வாகத்தை முன்னெடுப்பதாக இருந்தால் ஜனாதிபதிக்குத் தீர்மானங்களை எடுக்கவல்ல அதிகாரங்கள் அவசியமாகின்றன என்ற விடயத்தில் மீண்டும் நிறைவேற்றுத்துறை வலுவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் அதிகமாக மேழுந்துள்ளதே?
பதில்:- ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றுகின்ற பல்வேறு நாடுகளில் அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கின்ற விடயங்கள் நடைமுறைச் சாத்தியமாகின்ற தருணங்களை அவதானிப்பதற்கான முறைமையொன்று காணப்படுகின்றது. அந்த முறைமையானது 'அரசியலமைப்பு கலாசாரம்' என்று அழைக்கப்படுகின்றது. அவ்விதமானதொரு கலாசாரம் இலங்கைக்கும் மிகவும் அவசியமாகின்றது.
நிறைவேற்று அதிகாரத்துறையில் முதலாவதும், முக்கியமானதுமான கட்டமைப்பாக இருப்பது அமைச்சரவையாகும். அதில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டவையாக அமைய வேண்டும். அவ்வாறு அமைகின்றபோது அந்தத் தீர்மானங்கள் சிறப்பானவையாக அமைகின்றன.
அதனைவிடவும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாகத்தின் பின்னர் அரச திணைக்கள, நிறுவன அதிகாரிகள் ஆட்சியாளர்களின் தாளத்துக்கு நடனமாடுபவர்களாக உருவாகிவிட்டனர். அந்த நிலைமையும் வெகுவாக மாற்றப்பட வேண்டியதொன்றாக உள்ளது. அவர்கள் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும் அதேபோன்று சுயாதீனமாக, பக்கச்சார்ப்பற்ற வகையில் செயற்படுவதற்கான உத்தரவாதங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.
அரசியல்வாதிகளின் தலையீடுகள் அல்லது அழுத்தங்கள் காரணமாக அரச அதிகாரிகள் 'இணக்கமாகச்' செல்கின்ற நிலைமைகள் ஏற்படுகின்றபோது பொறுப்புக்கூற வேண்டிய பாத்திரத்தை அரச அதிகாரிகளே கொண்டிருக்கின்றனர். அதற்கு அமைவாக, பொதுமக்களுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றபோது திரிசங்கு நிலைமை ஏற்பட்டு விடுகின்றது. ஆகவே, உரிய பொறிமுறைகள் அந்தந்த அரச கட்டமைப்புக்களினுள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.
கேள்வி:- 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக இரு அதிகாரமையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இருவேறு கட்சிகளில் இருந்து ஜனாதிபதி பிரதமர் தெரிவு செய்யப்பட்டால் மக்களே பாதிக்கப்படுவார்கள் என்பது முக்கியமானதொரு விடயமாக சுட்டிக்காட்டப்படுகின்றதே?
பதில்:- நான் எஞ்சியிருக்கும் பதவிக்காலத்தினையும் வகிக்க வேண்டும் என்ற சில கோரிக்கைகள் இருக்கின்றன. அவ்வாறு பதவியில் நீடிப்பதால் விளைவு என்ன? யார் பதவியில் இருந்தாலும் செயற்பாட்டு ரீதியிலான விடயங்கள் தான் முக்கியமாக இருக்கின்றன. நிறுவனங்கள் நபர்களை மையப்படுத்தியதாக இருக்ககூடாது. ஆகவே தான் நாட்டிற்கு ‘புதிய அமைப்பு முறை’ அவசியமாகின்றது.
முதிர்ச்சியான ஜனநாயக பண்புகளை பிரயோக ரீதியாக பேணுவதாக இருந்தால் சரியானதொரு 'அமைப்பு' அவசியமாகின்றது. அவ்வாறான நிலைமையொன்று இருக்கின்றபோது எவிதமான பிரச்சினைகளும் ஏற்படப்போவதில்லை.
முதிர்ச்சியான ஜனநாயகத்தினை ஏற்றுக்கொண்டிருக்கின்றோமென்றால் இத்தகைய விடயங்களுக்கான பொறிமுறைகளை உருவாக்கி பிரயோக ரீதியான அரசாட்சியை முன்னெடுக்க முடியும். அவ்வகையானதொரு நிலைமைக்கு நாம் வந்திருகின்றோமா என்றபதை எமக்குள் கேள்வி எழுப்பி நாமே பதிலளித்து சுயபரிசீலை செய்யவேண்டிய சந்தர்ப்பத்தில் உள்ளோம்.
கேள்வி:- புதிய அரசியலமைப்பொன்று நாட்டிற்கு அவசியமென்று கருதுகின்றீர்களா?
பதில்:- ஆம், அடிப்படை உரிமைகள் சார் விடயத்திற்கு அப்பால் மனித உரிமைகள் ஆணக்குழு செல்லவேண்டியதில்லையென்றும், அந்த விடயங்கள் உயர்ந்த மட்டத்தில் இருந்தால் போதுமானது என்றும் சிலர் கூறுகின்றார். உண்மையிலேயே அடிப்படை உரிமைகள் உயர் மட்டத்தில் இருந்தாலும் அதனை செயற்படுவதற்கான பொறிமுறை சரியாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி உருவாக்கப்படும் அரசியலமைப்பு தனி நபர்களையோ அல்லது குழுவையோ மையப்படுத்தியதாக அல்லாது அனைத்து மக்களின் விருப்பு வெறுப்புக்கள், கருத்துக்களை உள்ளீர்த்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும்.
(நேர்காணல்:- ஆர்.ராம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM