நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் அவர்களின் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது. இது சரியா? தவறா ?என்ற கேள்விகளுக்கு அப்பால் தமிழ் தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர், இன்றுவரை திருந்த வில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. அவர்களின் ஆதிக்க போட்டியே அவர்களின் பின்னடைவுக்கும் தோல்விக்கும் முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்குகள் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் விமர்சித்து வருகின்றனர். அடுத்து தேசிய பட்டியல் தொடர்பில் கட்சிகளுக்கிடையே பெரும் போராட்டம் இடம்பெறும் என்றும் பேசப்படுகின்றது. வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தமிழ் மக்களின் மத்தியில் மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து போனது மாத்திரமன்றி இதர கட்சிகள் வெற்றி வாகை சூட வாய்ப்பாகவும் அமைந்தது. இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆசனங்கள் உள்ளிட்ட ஆறு ஆசனங்களை இழந்துள்ளது.
ஏற்கனவே இது எதிர்பார்க்கப்பட்டதும் கூட. வடக்கு முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனின் பிளவு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திடீர் வளர்ச்சி, கூட்டமைப்பின் மீது இளைஞர்கள் கொண்ட வெறுப்பு என்ற பல்வேறு காரணங்கள் இந்தத் தோல்வியின் பின்னால் ஆதிக்கம் செலுத்தியிருந்தன .
மேலும் தேர்தல் முடிவுகள் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை .பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர் .
கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற ஈ. சரவணபவன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சிவமோகன், சிறிநேசன், யோகேஸ்வரன் ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். இதேபோன்று அம்பாறையில் கோடீஸ்வரனும் தோல்வியடைந்துள்ளார். கூட்டமைப்பிற்கு கிடைத்த 9 ஆசனங்களில் தமிழரசுக் கட்சிக்கு 5 ஆசனங்களே நேரடியாக கிடைத்துள்ளன.
முதலில் 22 ஆசனங்கள் பின்னர் 16 ஆசனங்கள் இப்போது 10 ஆசனங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னோக்கி பயணித்துள்ளமைக்கு காரணம் கட்சிக்குள்ளே தான் உள்ளது என்பதை மறந்து போகக் கூடாது .
இதேவேளை விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் சோபிக்கத் தவறிவிட்டது . இதன் மூலம் கூட்டமைப்பை பலவீனப்படுத்த முடிந்ததே தவிர, கூடிய வாக்குகளையோ ஆசனங்களையோ பெற முடியவில்லை .வடக்கு, கிழக்கில் மொத்தமாக 50,301 வாக்குகளை மாத்திரமே இக்கட்சி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரன் 21,000 வாக்குகளையே பெற்றுள்ளார் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கில் பெற்ற வாக்குகளை விடவும் இது குறைவானது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதேவேளை 2013 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளை விக்னேஸ்வரன் பெற்றிருந்தார் . இந்த நம்பிக்கையே அவரை தனி வழி செல்ல தள்ளியது என்றும் கூறலாம்.
உண்மையிலேயே தமிழ் மக்களின் நலன், கொள்கை சார்ந்து தமிழ் தலைவர்கள் நடந்திருப்பார்களேயானால் இந்த அளவு பின்னடைவை எதிர்நோக்கி இருக்கமாட்டார்கள். மூன்றாவது அணி ஒன்று முன்னிலை பெற்றிருக்காது . ஆனால் தமிழ் தலைமைகள் ஒன்றையொன்று விழுத்த முற்பட்டு, இறுதியில் அவர்களே விழுந்து போனார்கள் . அதுமாத்திரமல்ல கூட்டமைப்பு இனித்தான் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்கப் போகின்றது. அதாவது இது வருங்காலத்தில் எதிர்நோக்கப் போகும் சவால்களுக்கான ஆரம்பம் என்று கூறினால் தவறில்லை.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM