( எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த அங்கொட லொக்கா, இந்தியாவில் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல் மதுரையில் எரிக்கப்பட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் தற்போது இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

சி.பி.ஐ. எனப்படும் இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 07 குழுக்கள்  இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இது தொடர்பில் இரு வழக்குகளை கோவை  குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அவர்கள், இவ்விவகாரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை தமது பொறுப்பில் எடுத்து தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளதாகவும்  அறிய முடிகின்றது.

கொலை, கொள்ளை, கப்பம் கோரல் உள்ளிட்ட பல திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில்  பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, பிரபல பாதாள உலகத் தலைவன்  அங்கொட லொக்கா என அறியப்படும் மத்துமகே லசந்த சமிந்த பெரேராவின் மரணம் தொடர்பில் 27 வயதான அமானி தான்ஜி , 36 வயதான சட்டத்தரணி சிவகாமி சுந்தரி மற்றும் எஸ்.தியாகேஷ்வரன் ஆகிய மூவர்  சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.  

அங்கொட லொக்கா நஞ்சூட்டி கொலை செய்யப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட தகவலை அடுத்து, இலங்கை பொலிஸார் 2002 ஆம் ஆண்டில் 25 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பில் பரஸ்பர தகவல் பறிமாற்றுச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் உதவியை அது குறித்து உறுதி செய்ய கோரியது.

இந் நிலையிலேயே இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த இந்திய பொலிஸார்  அங்கொட லொக்கா என கருதப்படும் நபரின் உடலை எரிக்க, அவர் தொடர்பில் போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் தியாகேஸ்வரனும் சிவகாமி சுந்தரி என்ற சட்டத்தரணியையும் கைது செய்தனர்.

27 வயதான அமானி தான்ஜி என்ற பெண் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்று கோயம்புத்தூர் - சேரன்மாநகரில் அங்கொட லொக்காவுடன் வசித்து வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.  

இந் நிலையிலேயே அம்மூவரையும் தமது பொறுப்பில் வைத்து, உயிரிழந்தவர் உண்மையிலேயே அங்கொட லொக்காவா என்பது தொடர்பிலும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பதை உறுதி செய்யவும் விசாரணைகளை முன்னெடுக்க சி.பி.ஐ.க்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே மரணம் தொடர்பாக ஒரு  வழக்கும் போலி ஆவணங்களை பயன்படுத்தி தங்கியிருந்ததாக மற்றொரு வழக்கும் கோவை குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  அறிய முடிகின்றது.

 கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி பிரதீப் சிங் என அடையாளத்தைக் கொண்டிருந்த அங்கொட லொக்கா, நெஞ்சு வலி காரணமாக கோயம்புத்தூரில் வைத்தியசாலையொன்றில் அமானி தான்ஜி என்ற குறித்த பெண்ணால் அனுமதிக்கப்பட்டிருந்தார். மயக்க நிலையில் இருந்த லொக்கா அவ்வாறே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் இலங்கையின் ஊடகங்கள் அவர் விஷம் கொடுக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையிலேயே , கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் 07 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு இந்திய மத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கோரப்பட்டுள்ளது. அது தொடர்பிலான  தீர்மானம் இந்த  வாரம் வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.