பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம்

08 Aug, 2020 | 10:08 PM
image

-பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட

பொதுத் தேர்தலில் சகல எதிர்க்கட்சிகளையும் முக்கியத்துவமற்றவையாக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுலபமாக சாதித்த ஏறத்தாழ 2/3 பாராளுமன்ற பெரும்பான்மை வெற்றி கடந்த காலத்தில் ஒரேயொரு சமாந்திரத்தை மாத்திரமே கொண்டிருந்தது. 1977 ஜூலை பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்தனா  தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 6/5 பாராளுமன்ற பெரும்பான்மை வெற்றியே அதுவாகும்.

முக்கிய போக்குகள்

225 ஆசனங்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை வென்றிக்கும் அதேவேளை, முன்னாள் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பரிதாபகரமான தோல்வியை சந்தித்திருக்கிறது. அந்தக் கட்சிக்கு ஒரேயொரு ஆசனமே கிடைத்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒருசில மாதங்களுக்கு முன்னர் மாத்திரமே அமைத்த ஐக்கிய மக்கள் சக்தி(சமகி ஜன பலவேகய) விகிதாசாரத் தேர்தல் முறை காரணமாக இரண்டாவதாக வந்து 54 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

பொதுஜன பெரமுனவின் இந்த சௌகரியமான வெற்றி ஒன்றும் எதிர்பார்க்கப்படாததல்ல. அநேகமாக ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்காளர்களில் பெருமளவானோர் வாக்களிக்காமல் இருந்தமையே ‘சகல எதிர்பார்ப்புகளையும் மீறிய’ இந்த வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது போல தோன்றுகிறது. இதை பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் உடனடியாகவே ஒத்துக்கொண்டும் இருக்கிறார். அதேவேளை, எந்தவொரு தேர்தலிலுமே இலங்கை வாக்காளர்களின் பங்கேற்பு மிகுந்த உயர்ந்த தராதரத்தில் இருந்த நிலைவரங்களுடன் ஒப்பிடும்போது இந்த தேர்தலில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் பங்கேற்பு குறைவானதென்றே கூறவேண்டும்.

தேர்தல் முடிவுகளில் இரு குறிப்பிடத்தக்க போக்குகளை காணக்கூடியதாக இருக்கிறது. முதலாவது சுயாதீனமான அரசியல் கட்சிகள் என்ற வகையில் இனத்துவ சிறுபான்மை பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி. இலங்கை பாராளுமன்றத்தில் பெருமளவுக்கு குரல் கொடுக்கின்ற சிறுபான்மையின கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி அதன் வாக்காளர் பலத்தை இழந்திருக்கிறது. முன்னைய பாராளுமன்றத்தில் 16 ஆசனங்களை கொண்டிருந்த இந்த கட்சிக்கு இத்தடவை 10 ஆசனங்களே கிடைத்திருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து 6 ஆசனங்களை பொதுஜன பெரமுனவுடன் அணிசேர்ந்து நிற்கும் சிறிய தமிழ்க் கட்சிகள் பெற்றிருக்கின்றன. 

தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தின் சிதைவு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் வீழ்ச்சியிலும் பிரதிபலித்திருக்கிறது. முஸ்லிம் கட்சிகள் அவை தனியாக போட்டியிட்ட மாவட்டங்களில் தங்களது சமூகத்துக்காக வெறுமனே இரண்டு ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இது தவிர ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த வேறும் சில சிறுபான்மை எம்.பி.க்களும் தெரிவாகியிருக்கிறார்கள்.

இரண்டாவதாக, புதிய பாராளுமன்றத்தில் இரு பெரிய கட்சிகளாக இருக்கும் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய மக்கள் சக்தியும் மிகவும் அண்மைக்காலத்தில் தோன்றியவையாகும். இரண்டு பிரதான பாரம்பரிய கட்சிகளிலிருந்து பிரிந்து சென்ற பிரிவினரால் அவை அமைக்கப்பட்டன.

தீர்க்கமான காரணிகள்

இலங்கையின் அரசியல் அரங்கில் பொதுஜன பெரமுன தலைமையில் இடம்பெற்றிருக்கும் இந்த வியப்பை தருகின்ற மாற்றத்தை நான்கு காரணிகள் சாத்தியமாக்கியிருக்கின்றன போல தோன்றுகிறது.

முதலாவது காரணி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்ததன் மூலம் 2015 ஜனவரியில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த முன்னைய கூட்டணி அரசாங்கத்தின் படுமோசமான தோல்வியாகும்.

ரணில் விக்கிரமசிங்கவினதும் மைத்திரிபால சிறிசேனவினதும் தலைமையிலான யகபாலனய(நல்லாட்சி) கூட்டணி 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் அதிர்ச்சிகரமான வெற்றியை பெற்றது. ஜனநாயகத்தை மீட்டெடுத்தல், சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தல், ஊழலற்ற அரசாங்கத்தை நிறுவுதல் மற்றும் அதீதமான அதிகார குவிப்பின் மூலமாக ஆட்சி செய்யும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் என்று அந்த கூட்டணி அளித்த வாக்குறுதிகளுக்கு வாக்காளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. ஆனால், அதிகாரத்தில் இருந்தபோது விக்கிரமசிங்க – சிறிசேன அரசாங்கத்தின் ஆட்சிமுறை செயற்பாடுகளும் அணுகுமுறைகளும் மேற்கூறப்பட்ட குறிக்கோள்களை முழுமையாக அடைவதை அரவே சாத்தியமாக்கவில்லை.

மிக விரைவாகவே அன்றைய ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், ஆளும் கூட்டணிக்குள் நிலவிய ஐக்கியமின்மை, குழுக்களுக்கிடையேயான பகைமை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையேயான அதிகார சண்டை மற்றும் அவற்றின் விளைவாக நிர்வாக கட்டமைப்புகளிலும் தேசிய பாதுகாப்பு கட்டமைப்புகளிலும் ஏற்பட்ட முடக்கநிலை எல்லாம் ‘ஜனநாயகத்தின் மூலமான ஆட்சி’ முறை என்ற அந்த சிந்தனைக்கே கெட்டப்பெயரை கொடுத்துவிட்டது. 

அந்த அரசாங்கம் அதன் மிகவும் முக்கியமான அரசியல் சாதனை என்று கூறிக்கொண்ட அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தின் பயன்களை கூட பாதுகாத்து நிலைநிறுத்தவும் தவறிவிட்டது. அத் திருத்தம் ஜனாதிபதியின் தன்னிச்சையான அதிகாரங்களை கடுமையாக குறைத்து இலங்கை பாராளுமன்ற ஜனநாயகத்தை திரும்பவும் நிறுவியதுடன் நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்ற அதிகாரம் மீது கட்டுப்படுத்தல்களும் சமப்படுத்தலும் கொண்ட முறைமை ஒன்றையும் அறிமுகப்படுத்தியது.

யகபாலனய அரசாங்கத்தின் தோல்வி நிலையானதும் பரந்தளவிலானதுமான அரசியல் விளைவுகளை கொண்டுவரக்கூடிய மிகவும் வலுவான தேர்தல் சுலோகங்களை பொதுஜன பெரமுனவுக்கு கொடுத்தது. ஒரு பலம் பொருந்திய தலைவர், பலம் பொருந்திய அரசாங்கம், இராணுவ ஆற்றலுடன் கூடிய பலம்பொருந்திய நிர்வாகத்துடனான புதிய அரசியல் மாற்றத்தை கொண்டு வருவது அதுவும் குறிப்பாக எந்தவிதமான கட்டுப்பாடும் சமப்படுத்தலும் இல்லாத உறுதியான அதிகார மையம் ஒன்றை உருவாக்குவது என்பதே அந்த சுலோகங்களில் முக்கியமானதாகும்.

கடந்த வருடம் நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த மகத்தான வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் வாக்காளர்களினால் வழங்கப்பட்ட கடுமையான ஒரு தண்டனையாகவும் நோக்க முடியும். நான்கரை வருட காலங்களாக பொறுப்பற்ற முறையிலும் உள்தகராறுகளோடும் செயற்திறன் அற்ற ஆட்சியின்போது தங்களுக்கு கடுமையான பாதிப்புகளை கொடுத்தமைக்காக ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவத்தை வாக்காளர்கள் மன்னிக்கவில்லை என்பது வெளிப்படையானதாகும்.

பொதுஜன பெரமுனவை நோக்கி மிகவும் வலுவான முறையில் வாக்காளர்கள் கவரப்பட்டதற்கான வேறு முக்கியமான காரணங்களும் இருக்கின்றன. 2016ஆம் ஆண்டில் செல்வாக்கு மிக்க ராஜபக்ச குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட ஒப்பீட்டளவில் புதிய அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனவின் வேலைத்திட்டம், கோட்பாடு மற்றும் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டம் பெருமளவுக்கு வெகுஜனங்களை கவரும் பரிமாணத்தை கொண்டிருந்தது. 

பலம் பொருந்திய தலைவர் ஒருவர் தலைமையிலான உறுதிமிக்க அரசு என்ற அதன் சுலோகம் சிங்கள பௌத்த தேசபக்த அடையாள அரசியலினால் போர்த்தப்பட்டிருப்பதாக இருந்தது. இது உண்மையில் சிங்கள சமுதாயத்தின் சகல சமூக வர்க்கங்களினதும் வாக்காளர்களை கவருவதாக இருந்தது.

பொதுஜன பெரமுனவின் பொருளாதார மேம்பாடு பற்றிய பேச்சுகளும் மேற்குலகுக்கு எதிரான தேசியவாதமும் நலன்புரி அரசின் (Welfare State) அம்சங்களை மீண்டும் கொண்டுவருவது என்ற வாக்குறுதியுடன் சேர்த்து வறிய மற்றும் நடுத்தர வர்க்கங்கள் மத்தியில் எப்போதுமே கவர்ச்சிக்குரியவையாக இருந்தன. முன்னைய அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினரால் மிகவும் ஆர்வத்துடன் முன்னெடுக்கப்பட்ட நவதாராளவாத சீர்திருத்த கொள்கைகளினால் இந்த வர்க்கத்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

கடன் நெருக்கடியில் சிக்குப்பட்ட மிகவும் மந்தமான ஒரு பொருளாதாரத்தினால் ஏற்பட்ட பரந்தளவிலான சமூக அதிருப்திக்கு மத்தியில் வெகுஜன கவர்ச்சிமிகு அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் உறுதிப்பாடு என்ற சுலோகங்கள் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு பிரசாரம் பலவீனமான ஜனநாயக ஆட்சிமுறை ஒன்றின் மீட்சியை விடவும் மக்களை பெருமளவுக்கு கவருவதாக இருந்தது.

தொற்றுநோய் நெருக்கடி, போதைப்பொருளுக்கு எதிரான போர்

அதேவேளை, கொவிட் 19 தொற்றுநோயின் விளைவான பொது சுகாதார சவாலை மிகவும் பயனுறுதி உள்ள முறையில் கையாண்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அணுகுமுறை ஜனாதிபதியின் நேரடியான வழிகாட்டலில் இராணுவத்தின் வெளிப்படையான பங்கேற்புடன் கூடிய புதிய வடிவிலான செயற்திறன் மிக்க அரசாங்கம் ஒன்று புதிய அரசியல் பரீட்சார்த்தத்துக்கு ஒரு வகை மாதிரியாக அமையும் என்று இலங்கை வாக்காளர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் நம்பினார்கள் போல் தோன்றுகிறது. அதனால் அந்த பரீட்சார்த்தம் ஒரு வாய்ப்பை கொடுப்பதற்கு தகுதியானது என்று அவர்கள் கருதினார்கள். 

போதைப்பொருட்கள் மீட்பு, முற்றுகைகள் மற்றும் கைதுகளுக்கு கொடுக்கப்பட்ட பரந்தளவிலான ஊடக பிரசித்தியுடன் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னர்களுக்கு எதிரான இடையறாத இருமாத காலப்போர், முழு எதிரணியினை விடவும் ஜனாதிபதி முகாமுக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்புகளை பொறுத்தவரை தீர்க்கமான மேம்பட்ட நிலையை கொடுத்தது. 

அது மாத்திரமல்ல, பழைய பாணியிலான தாராளவாத ஜனநாயகங்களினால் பிரஜைகள் மனதில் ஏற்படுத்த முடியாதுபோன புதிய பாதுகாப்பு உணர்வை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற சட்டம் ஒழுங்கை முதன்மைப்படுத்துகின்ற ஆட்சிமுறையை பின்பற்றுவதற்கு இலங்கை தயாராக இருக்கின்றது என்பதையும் அது காட்டியது.

இறுதியாக பொதுஜன பெரமுனவின் எதிர்கால சீர்த்திருத்த புரட்சித் திட்டம் பற்றிய வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமான அம்சம் தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, அரசியல் உறுதிப்பாடு, ஆட்சியின் தொடர்ச்சி, பொருளாதார சுபீட்சம் மற்றும் மத நெறிமுறைகளுக்கு புத்துயிர் அளித்தல் ஆகியவற்றுக்கு அதிஉச்சபட்ச முன்னுரிமை கொடுக்கின்ற அரசியல் ஒழுங்கு ஒன்று இலங்கை பிரஜைகளுக்கு அவசியமாக தேவைப்படுகின்றது என்ற உட்கிடையான கருத்தாகும்.

கட்சி முறைமையில் புடைபெயர்வு

இந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் இலங்கையின் பாரம்பரியமான அரசியல் கட்சி முறைமையில் வியக்கத்தக்க மாற்றம் ஒன்று ஏற்பட்டிருப்பதையும் வெளிக்காட்டுகின்றன. இரண்டு மிகப்பெரிய பழைய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பாராளுமன்றத்திலிருந்து முழுமையாக துடைத்தெறியப்பட்டிருக்கின்றன. புதிய வெகுஜன கவர்ச்சி கட்சியான பொதுஜன பெரமுன தனியொரு ஆதிக்க கட்சியாக வெளிக்கிளம்பியிருக்கிறது.

பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சி என்ற வழைமையான அதன் பாத்திரத்தை ஐக்கிய தேசியக் கட்சி மீட்டெடுக்க முடியாத வகையில் தோல்வி கண்டிருக்கிறது. அதன் இடத்தை சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இப்போது கைப்பற்றியிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி மிகுந்த ஆற்றலுடன் தன்முனைப்பாக செயற்பட்டால் மாத்திரமே இலங்கை ஒரு கட்சிமுறையின் ஆதிக்கத்துக்குள் விழுவதை தடுக்கக்கூடியதாக இருக்கும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் அரசியலமைப்பு மற்றும் சட்டவாக்க மறுசீரமைப்பு செயற்திட்டங்களை இதுவரையில் வெளிப்படையாக சொல்லாமல் இருப்பதில் மிகவும் ஜாக்கிரதையாக செயற்படுகிறது. இருந்தாலும் முழு அளவிலான ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்ட அரசியலமைப்பு திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதையும் இராணுவத்துக்கு ஒரு நிர்வாக பாத்திரத்தை வழங்குவதையும் இலக்காகக்கொண்ட முக்கியமான அரசியலமைப்பு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்பதற்கான போதுமான அறிகுறிகளை அந்தக்கட்சி வெளிக்காட்டியிருக்கிறது. 

நிறைவேற்றதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையிலான தற்போதைய அதிகார சமநிலையும் நிறைவேற்று அதிகார பீடத்துக்கு அனுகூலமான முறையில் மாற்றியமைக்கப்படக்கூடியது சாத்தியம்.

மகத்தான பெரும் வெற்றிக்கு பின்னர் தவிர்க்க முடியாத ஆரவாரத்துக்கு மத்தியில் மிகவும் சவால்மிக்க ஒரு எதிர்காலத்தை பொதுஜன பெரமுன அரசாங்கம் சந்திக்க வேண்டியிருக்கிறது. கொவிட் தொற்றுநோயின் விளைவாக ஏற்படக்கூடிய உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியினால் தீவிரப்படுத்தப்படக்கூடிய முன்னென்றும் இல்லாதவகையிலான பொருளாதார சமூக நெருக்கடிகள் தொற்றுநோய் பரவலுக்கு வெகு முன்னதாக தாங்கள் தீட்டிய திட்டங்கள் பலவற்றை பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் தலைவர்கள் விரைவில் மீளாய்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடும். 

இந்த சவால்மிக்க பின்புலத்தில் வெறுமனே பலம்பொருந்திய ஒரு அரசாங்கம் அல்ல மனிதாபிமான அணுகுமுறையுடனான அரசாங்கமே இலங்கை மக்களுக்கு தேவைப்படுகிறது.

(பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான தகைசார் பேராசிரியர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி...

2024-10-05 12:29:13
news-image

தனியார் கடன் அதிகரிப்பினால் வளர்ச்சியடையும் பொருளாதாரம்

2024-10-04 16:15:59
news-image

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி...

2024-10-03 20:30:56
news-image

இ.தொ.காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...! 

2024-10-03 17:26:10
news-image

முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும்...

2024-10-02 13:56:37
news-image

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய...

2024-10-02 10:45:36
news-image

மாறி வரும் உலகில் உணரப்படாத வயோதிபம்

2024-10-01 15:53:03
news-image

பரீட்சை வினாக்களின் கசிவு: பொறுப்புக்கூறுவது யார்?

2024-10-01 14:52:31
news-image

இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய...

2024-10-01 11:04:59
news-image

அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை...

2024-10-01 10:47:45
news-image

முதியோரின் உணர்வுகளை மதிப்போம் : இன்று...

2024-09-30 11:48:26
news-image

சிறுவர்களின் உலகைக் காப்போம்! : இன்று...

2024-09-30 12:17:38