(செ.தேன்மொழி)

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலம் வரை அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டங்கள் , பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவது தடைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன்குணசேகர தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் , 

பாராளுமன்ற தேர்தல் கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்ததுடன் , கடந்த வெள்ளிக்கிழமை காலை வரை தேர்தல் முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டின் அமைதியை பாதுகாப்பதற்காக பாராளுமன்ற தேர்தல் சட்டவிதிகள் நாட்டில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 69 ஆவது அத்தியாயத்திற்கமைய பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு இறுதி முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒருவார காலம் வரை அரசியல் கட்சிகள் பேரணிகளையோ, ஊர்வலங்களையோ நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தல் சட்டத்தின் 70 ஆவது அத்தியாயத்திற்கமைய இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவார காலம் வரை அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அமைதியை நிலைநாட்டும் நோக்கிலேயே இவ்வாறான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நாட்டு மக்களும் , அரசியல் கட்சிசார் தரப்பினரும் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும். இதேவேளை பொலிஸாரினதும் , சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினதும் செயற்பாட்டிற்கு அனைவரும் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும்.