(க.பிரசன்னா)

எதிர்வரும் காலங்களில் என்னுடைய அரசியல் பயணம் தனிப்பட்டதாக அமையுமா அல்லது கட்சியுடன் இணைந்ததாக அமையுமா என்பது தொடர்பில் தான் சிந்திக்கவேண்டுமெனவும் இதற்கு பதில் வழங்கப்படுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

வெள்ளவத்தையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தேர்தல் காலங்களில் முதலில் கட்சியை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படும். பின்னர் கட்சிகளுக்குள்ளே விருப்பு வாக்குகளுக்கு போட்டி ஏற்படும். இந்நிலைமை சகல கட்சிகளுக்குள்ளும் இருக்கும் நிலையாகும். இது விருப்பு வாக்கு முறையில் உள்ள குறைபாடாகும். இதனால் ஏற்றதாழ்வுகள், விருப்பு வெறுப்புகள் ஏற்படும். எனவே போட்டிகள் வருமென்பது இயல்பானது.

தேர்தலில் நானும் மனோ கணேசனும் இணைந்து பயணிக்கவே நினைத்திருந்தோம். பின்னர் தனிதனியே செல்லும்போது வாக்குகளை அதிகம் பெற்றுக்கொள்ள முடியுமென மனோகணேசன் கூறியதால் தனியே பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. எனவே தனிப்பயணம் எங்களுக்கிடையிலான பிரச்சினை என்று கூறமுடியாது. இன்று என்னோடு பலர் இணைந்து பயணிக்க தயாராக இருக்கின்றார்கள். அது தனிப்பட்ட பயணமா அல்லது அங்கம் வகிக்கும் கட்சியுடனான பயணமா என்பது தொடர்பில் சிந்திக்க காலம் தேவை.

மனோ கணேசனுடன் இவ்விடயம் தொடர்பாக தெளிவாக பேச தீர்மானித்திருக்கின்றேன். அதன் பின்னரே அது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும். ஆனால் நிச்சயமாக என்னுடைய அரசியல் பயணம் காத்திரமானதாக அமையும். புதிய உத்வேகத்துடன் புதிய எதிர்பார்ப்புடன் நல்லதொரு அரசியலை முன்னெடுப்பேன். என்னுடைய அரசியலில் பிரதேசவாதம் இருக்காது. எனது அரசியல் பயணம் கொழும்பை தலைமையாக கொண்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும்.