(நா.தனுஜா)

லெபனான் தலைநகர் பெய்ரூற்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச்சம்பவத்தினால் பாதிப்பிற்குள்ளான இலங்கைத்தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளின் இல்லங்களின் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான உலர் உணவுப்பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் லெபனானில் உள்ள இலங்கைத்தூதரகம் தெரிவித்திருக்கிறது.

லெபனானின் தலைநகர் பெய்ரூற்றில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற பாரிய வெடிப்புச்சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 2 இலிருந்து 10 ஆக உயர்ந்திருப்பதாக லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் வெடிப்புச்சம்பவத்தினால் பாதிப்பிற்குள்ளான லெபனானில் உள்ள இலங்கைத்தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளின் இல்லங்களின் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், அதேவேளை அந்நாட்டு நேரப்படி தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் இவ்விடயம் தொடர்பான தெளிவுபடுத்தல்களை வழங்குவதற்கான தொலைபேசி சேவை அமுலில் இருப்பதாகவும் இலங்கைத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.

பெரும் எண்ணிக்கையானோர் தமக்கான உதவிகளைக்கோரி தூதரகத்தை அணுகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தூதரகத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், பெருமளவானோர் அதற்கான தேவைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றனர். மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கைத் தூதுவர் தொடர்ந்தும் லெபனானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தூதரக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

அதேவேளை லெபனானின் பெய்ரூற் நகரில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச்சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து சுமார் 137 இற்கும் அதிகமானோர் உயிரிழந்து, 5000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமை குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது ஆழ்ந்த கவலையையும் தற்போதைய நெருக்கடி நிலைமையில் லெபனானுடனான இலங்கையின் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.