-ரொபட் அன்டனி
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை அச்சொட்டாக இருக்கவில்லை. 135 ஆசனங்கள் அளவில் பெற முடியும் என்றே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி மக்கள் மிகப்பெரிய ஆதரவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இந்தத் தேர்தலில் வழ்ஙகியிருக்கின்றனர். அதுவும் விகிதாசார தேர்தல் முறையில் பெறக்கூடிய மிக உச்சபட்ச வெற்றியை சிறிலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் பெற்று மகத்தான சாதனை படைத்திருக்கின்றது.
முதலில் எவ்வாறு ஆசனங்களை கட்சிகள் பெற்றுள்ளன என்பதனை பார்க்கவேண்டிய தேவை உள்ளது. அதன்படி புதிய பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றியீட்டியுள்ளது.
இரண்டாவது இடத்தில் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தேசியப் பட்டியல் ஊடாக மட்டும் ஒரு ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன. தமிழ்க் கூட்டமைப்பு 10 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி. 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
மேலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, , தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் புலிகள் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய முன்னணி, தேசிய காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
இதேவேளை ஆளும் கூட்டணி 145 ஆசனங்களை பெற்றிருந்தாலும் அது கூட்டணியாக 150 ஆசனங்களை பெற்றிருக்கி்ன்றது என்றே கூறவேண்டும். காரணம் இம்முறை ஆளும் கூட்டணியின் சில கட்சிகள் சில மாவட்டங்களில் தனித்து போட்டியிட்டன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கூட்டணியில் இருந்த போதிலும் அக்கட்சி யாழில் தனித்து போட்டியிட்டு பெற்றுள்ள ஒரு ஆசனம், ஈ.பி.டி.பி. பெற்றுள்ள இரண்டு ஆசனங்கள் என்பனவும் ஆளும் கூட்டணியையே சாரும்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி பெற்ற ஒரு ஆசனம் மற்றும் திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் பெற்ற ஒரு ஆசனம் ஆகியனவும் ஆளும் கூட்டணியையே சென்றடையும். இந்த கட்சிகள் ஆளும் கட்சியின் கூட்டு கட்சிகள் என்பதால் சிறிலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றிருக்கின்றது. அந்தவகையில் பார்க்கும்போது ஆளும் கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.
வாக்குகள்
மேலும் கட்சிகள் பெற்றுக்கொள்கின்ற வாக்குகளும் இங்கு முக்கியமாகும். அந்தவகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 6,853,693 வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இது 59.09 வீதமாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன 52 வீதமான வாக்குகளையே பெற்றது. ஆனால் இம்முறை அதனையும் தாண்டி 59 வீதமான வாக்குகளை பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 2,771,984 வாக்குகளை பெற்றுள்ளது. இது 23.90 வீதமாகும். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 445,958 வாக்குகளை பெற்றுள்ளது. இது 3.84 வீதமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 327,168 வாக்குகளை பெற்றிருக்கிறது. இது 2.82 வீதமாகும். ஐக்கிய தேசிய கட்சி 249,435 வாக்குகளை பெற்றுள்ளதுடன் இது 2.15 வீதமாகும். இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி 67,766 வாக்குகள், எமது மக்கள் சக்தி 67,758 வாக்குகள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 67,692 வாக்குகள், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 66,579 வாக்குகள், ஈ.பி.டி.பி. 61,464 வாக்குகளையும் பெற்றுள்ளன.
முஸ்லிம் தேசிய கூட்டணி 55,981 வாக்குகளையும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 51,301 வாக்குகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43,319 வாக்குகளையும் பெற்றுள்ளன. அத்துடன் தேசிய காங்கிரஸ் 39,272 வாக்குகளையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428 வாக்குககளையும் பெற்றுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகளவான கட்சிகள் தனித்து ஆசனங்களை பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. நாட்டின் இறைமை மக்களுக்கு உரியது. எவே மக்களின் தீர்ப்பை சகலரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஆளும் கட்சியின் இமாலய வெற்றிக்கான காரணங்கள்
முதலில் ஆளும் கூட்டணிக்கு எவ்வாறு இந்தளவு அமோக வெற்றி கிட்டியது என்பதை பார்க்கவேண்டும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய ரஜபக்ஷ வெற்றிபெற்று ஆட்சியமைத்ததால் எதிர்வரும் ஐந்து வருடங்களையும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருக்கே வழங்கவேண்டும் என்பதில் சகோதர பெரும்பான்மை மக்கள் உறுதியாக இருந்தனர். சகோதர பெரும்பான்மை மக்கள் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம் மக்களும் இம்முறை சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்துள்ளனர். அடுத்த ஐந்து வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் இதில் பிரதானமாக இருந்தது.
அடுத்ததாக கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் ஏற்படுத்திய இருண்ட அத்தியாயம் இன்னும் மக்கள் மனதிலிருந்து நீங்கவில்லை. கடந்த ஆட்சியின் பலவீனமே இந்த அகோரம் இடம்பெற காரணம் என்று மக்கள் பலமாக எண்ணுகின்றனர். எனவே யுத்தத்தை முடிந்த ராஜபக்ஷவினரினால் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
அடுத்த மிக முக்கிய காரணமாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு வேலைத்திட்டத்தை அரசாங்கம் மிகவும் நேர்த்தியாக முன்னெடுத்ததாக மக்கள் வெகுவாக நம்புகின்றனர். குறிப்பாக கொத்தனி பரவல்கள் இடம்பெற்றதும் அதனை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட கடடமைப்பு இயந்திரம் மற்றும் இறப்பு விகித்தை கட்டுப்படுத்தியமை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் வேகமாக வெளியே வந்தமை என்பன மக்களை கவர்ந்திருக்கின்றது.
இதுபோன்ற பல்வேறு விடயங்கள் அரசாங்கத்தின் இமாலய சாதனைக்கு காரணங்களாக அமைந்திருக்கின்றன. அதுவும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களித்துள்ளனர்.
அந்தவகையிலேயே வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டத்தின் சில தேர்தல் தொகுதி தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன பாரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
ஐ.தே.க.வின் நிலை
இதேவேளை இம்முறை ஐக்கிய தேசிய கட்சி சஜித் தரப்பு மற்றும் ரணில் தரப்பு என பிரிந்து போட்டியிட்ட நிலையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் அதிகமான தொகுதிகளில் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறான பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அதுவும் விகிதாசார தேர்தல் முறைமையில் எதிர்க்கட்சிகள் எவ்வாறாவது ஆசனங்களையும் பெற முடியும். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி இம்முறை மாவட்ட மட்டத்தில் ஒரு ஆசனத்தையும் பெறவில்லை.
இது அக்கட்சியின் பாரிய வீழ்ச்சியை காட்டுகிறது. மேலும் ஐக்கிய தேசிய கட்சி பிரிந்து போட்டியிட்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களை பெற்றுள்ளது. எனவே இரண்டு தரபபினரும் இணைந்து போட்டியிட்டிருந்தால் இது இன்னும் சற்று அதிகமாக இருந்திருக்கும். ரணில் விக்ரமசிங்க அகில விராஜ் காரிய வசம் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் வெற்றிபெற்றிருப்பார்கள். ஆனால் அதற்கான அவகாசத்தை ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் இழந்துவிட்டது. இறுதி நேரத்திலும் இரண்டு தரப்பினரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கப்பட்ட போதும் அந்த முயற்சி கைக்கூடவில்லை.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்திக்கும் பிளவால் தேர்தலில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சி 60 க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 54 ஆசனங்கள் கிடைத்துள்ளன. எனவே இரண்டு தரப்பினரும் இணைந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக அமைந்திருக்கலாம். எதிர்க்கட்சியாக இன்னும் குறிப்பிட்ட ஆசனங்களை பெற்றிருக்கலாம். இந்நிலையில் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை நிராகரித்துள்ளனர்.
முக்கியமாக கடந்த காலம் முழுவதும் கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க விருப்பு வாக்கில் முதலாவது இடத்தை பெற்றுவந்தார். ஆனால் இம்முறை அவரினால் பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான வாக்குகளை கூட பெற முடியவில்லை. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயலர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரினால் கூட குருணாகல் மாவட்டத்தில் வெற்றிபெற முடியவில்லை. எனவே ஐக்கிய தேசிய கட்சி அடுத்தக்கட்டம் என்ன என்பதனை சிந்தித்து தீர்மானங்களை எடுக்கவேண்டும்.
ஜே.வி.பி.யின் சரிவு
மக்கள் விடுதலை முன்னணிக்கு இம்முறை பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றில் அக்கட்சிக்கு ஆறு ஆசனங்கள் காணப்பட்டன. ஆனால் இம்முறை மூன்று ஆசனங்களே அக்கட்சிக்கு கிடைத்துள்ளன. கொழும்பு மாவட்டத்தில் அனுர குமார திசாநாயக்கவும் கம்பஹா மாவட்டத்தில் சுனில் ஹந்துன்னெத்தியும் வெற்றிபெற்றுள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் ஹந்துன்னெத்தி மாத்தறை மாவட்டத்தி்ல் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர் தோல்வியடைந்துள்ளார். 7 வீதத்துக்கும் அதிகமாக அவர் வாக்குகளை பெற்ற போதிலும் ஆளும் கட்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆசனத்தை பெற முடியவில்லை.
எனினும் அக்கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டும் என்று பலரும் கூறுகின்றபோதிலும் அவர்களின் உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதென்பது கடினமாகிக்கொண்டே செல்வதை காண்கின்றோம்.
வடக்கு கிழக்கு
வடக்கு கிழக்கிலும் இம்முறை பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வாக்குகள் பிரிந்து சென்றிருந்தாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றாக வேண்டும். அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்புக்கு மூன்று ஆசனங்களே கிடைத்துள்ளன. கடந்த முறை ஐந்து ஆசனங்கள் காணப்பட்டன. ஆனால் அதில் சரிவு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஏனைய தரப்பில் போட்டியிட்ட கஜேந்திர குமார் பொன்னம்பலம் சி.வி. விக்கினேஸ்வரன் டக்ளஸ் தேவானந்தா அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
கடந்தகாலங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஒரு ஆசனம் பெறப்பட்டு வந்தது. இம்முறை ஐக்கிய தேசிய கட்சி யாழிலும் தோற்றுள்ளது. இதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் பெற்றுள்ள பாரிய வெற்றியை அவதானிக்கவேண்டும்.
இதனூடாக வடக்கு மக்களின் செய்தி என்ன என்பதை அரசியல் ரீதியில் சகலரும் புரிந்துகொள்வது அவசியமாகும். பல அணிகள் பிரிந்து நின்று போட்டியிட்டதால் மக்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்று கூற முடியாது. மாறாக மக்களின் தீர்ப்பு என்ன என்பது உணர்ந்து செயற்படவேண்டியது அவசியமாகும். அதேபோன்று வன்னி மாவட்டத்திலும் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவங்கள் கிடைத்துள்ளன. அங்கு கூட்டமைப்பு தனது ஆசனங்களை தக்கவைத்துள்ளது. ஈ.பி.டி.பி. ஆசனம் ஒன்றை பெற்றுள்ளது.
கிழக்கு
கிழக்கு மாகாணமும இம்முறை மாற்றத்தையே கண்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனங்களும் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன. ஆளும் கட்சியின் சார்பிலும் தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
திருமலை மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு ஆசனம் கிடைத்துள்ளது. கூட்டமைப்பின் சம்பந்தன் அங்கு வெற்றிபெற்றுள்ளார். திகாமடுல்ல மாவட்டத்தில் 3 ஆசனங்களுடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டியுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களை பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையு।ம் தேசிய காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
மலையகம்
இது இவ்வாறு இருக்க மலையக மக்களும் பாரிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் ஆளும் கட்சி நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிபெற்றுள்ளது. அம்மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் ஜீவன் தொண்டமான் மருதபாண்டி ரமேஷ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட பழனி திகாம்பரம் கே. ராதாகிருஷ்ணன் மற்றும் உதயா ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். பதுளை மாவட்டத்தில் வடிவேல் சுரேஷ் மற்றும் அரவிந்த குமார் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட வேலு குமார் வெற்றியீட்டியுள்ளார். அந்தவகையில் மக்கள் தமிழ் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்கும் வகையில் வாக்களித்துள்ளனர்.
தலைநகர் பிரதிநிதித்துவம்
கொழும்பு மாவட்டத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வெற்றிபெற்றுள்ளார். அத்துடன் இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளும் வெற்றியீட்டியுள்ளனர். அந்தவகையில் தலைநகரில் சிறுபான்மை பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தற்போது நாட்டு மக்கள் எவ்வாறான செய்தியை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளனர் என்பதனை சகலரும் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கேற்றவகையில் செயற்படுவதற்கு அரசியல் கட்சிகள் முன்வருவது அவசியமாகும். தற்போது ஆளும் தரப்பினருக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தமது கொள்கைகள் திட்டங்கள் நிலைப்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யவேண்டும். வரலாற்று முக்கியமாக கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏன் இந்த நிலை? கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? ஆளும் கட்சியின் இமாலய வெற்றி கூறுவது என்ன? இவை தொடர்பில் சகலரும் ஆழமாக சிந்திக்கவேண்டும். தற்போது தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. இனி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாட்டை விரைவாக கட்டியெழுப்பவும் திட்டங்களை சகலரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM