அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் நீதிசேவை ஆணைக்குழுவானது சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஆணைக்குழுவின் தலைவரான தற்போதைய  பிரதம நீதியரசர் ஊடாக சர்வதேச ஆலோசனைகளைப் பெற்று விசாரணைப் பொறிமுறைக்கு உள்நாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியும்.  இவ்வாறு செய்வதன் மூலமே இனவாதிகளின் வாயை மூடி நீதியை நிலைநாட்ட முடியும் என்று இராஜாங்க அமைச்சரும்,  சுதந்திரக்கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்தார். 

தமிழ்  இனத்தை சேர்ந்த பிரதம நீதியரசரை  சிங்கள அரசியல்வாதியான நான் நம்பும்போது ஏன்  தமிழ் மக்கள் அவரை நம்பமுடியாது? அவர்  தகுதியான  நீதிபதிகளை  இந்த விசாரணைப் பொறிமுறைக்கு நியமிப்பார். மாறாக வெளிநாட்டு நீதிபதிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோருமாயின்  இந்த விடயம் இனவாதிகளின் கைகளுக்குள் சிக்கிவிடும் அபாயம் உள்ளது எனவும் அவர் கூறினார். 

ஜெனிவா தீர்மானத்திற்கான உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவேண்டுமென  வலியுறுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.