பொதுத் தேர்தலில் அடைந்த அமோக வெற்றியை அடுத்து நாளை 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்க உள்ளார்.
இதுதொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறுகையில் , நாட்டு மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மீது நம்பிக்கை கொண்டு தொடர்ந்து ஆணையதிகாரத்தை வழங்கி வருகிறார்கள்.
ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி பொதுத்தேர்தலின் வெற்றியின் ஊடாக முழுமைப் பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் தமிழ்- முஸ்லிம் என சகோதர இனத்தவர்களும் பங்குகொள்வார்கள் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருபோதும் அரசாங்கம் செயற்படாது.
அனைத்து இன மக்களும் சம அளவில் மதிக்கப்படுவார்கள். வடக்கு மாகாணத்தில் மொட்டு சின்னம் தமிழ் மக்களின் ஆதரவில் வெற்றிக் கொண்டுள்ளது. தமிழ் மக்களின் அபிலாசைகளை சரியான முறையில் நாம் நிறைவேற்றுவோம் என அவர் தெரிவித்ள்ளார்.
இதேவேளை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஒருமுகமாக செயற்படுவார்களேயானால் இந்த நாட்டின் புரையோடிப்போன தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூடயதாக இருக்கும்.
இதேபோல நடந்து முடிந்த தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சிறந்த பாடமாகவும் அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் மூலம் மக்கள் எதை விரும்புகிறார்கள் எதை வெறுக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
கடந்த காலங்களில் மக்களுக்கு சேவை செய்யாத மக்கள் பிரதிநிதிகள் வெறுமனே வாய்ச்சொல்லில் தங்களை வீரர்களாக காட்டிக்கொண்டவர்கள் என முன்னாள் உறுப்பினர்கள் பலர் படுதோல்வியை சந்தித்து உள்ளார்கள். மேலும் சிலர் குறைந்த வாக்குகளால் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற ரீதியில் வெற்றிவாகை சூடியுள்ளனர்.
அத்துடன் கட்சிகளுக்கு இடையேயான போட்டா போட்டிகள் பிளவுகள் ஒரு தரப்பை மறுதரப்பு சாடும் செயற்பாடுகள் என்பவற்றையும் மக்கள் வெறுத்து ஒதுக்கி உள்ளனர்.
மக்களுக்கு இன்று தேவைப்படுவது அனைத்தும் நாட்டின் துரித அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் பொருளாதார மீட்சியுமே ஆகும். அதனை செய்யக் கூடியவர்கள் யார் என்பதை கருத்தில் கொண்டே புதியவர்கள் பலரையும் தெரிவு செய்துள்ளனர்.
அதேவேளை பழைய பல்லவி எதுவும் இன்றைய இளம் தலைமுறையினரிடம் செல்லாது என்பதும் நிரூபணமாகியுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு புதிய அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது அவசியமாகும்
குறிப்பாக இந்த நாட்டை பல தடவைகள் ஆட்சி செய்த பழம்பெரும் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளமை இவற்றிற்கு சிறந்த உதாரணமாகும் .
எனவே புதிய மக்கள் பிரதிநிதிகள் ' செயல் வீரர்களாக இருக்க வேண்டுமே தவிர வெறும் வாய்ச்சொல் வீரர்களாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பார்களேயானால் அவர்களும் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்வே வழிவகுக்கும் .
புதிய அரசும் புதிய அமைச்சரவையும் இன்றைய நெருக்கடிகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்போகின்றது என்று ஆவலோடு காத்திருக்கும் மக்களுக்கு அவர்கள் நல்ல செய்தியை வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM