(எம்.எப்.எம்.பஸீர்)

குருநாகல் மாநகர மேயர், நகர ஆணையாளர் உள்ளிட்ட ஐவரை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம் நேற்று உத்தர்விட்டார்.  குருநாகல் இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை காணப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்த பழைமை வாய்ந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பில் அவர்களை இவ்வாறு கைது செய்யுமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

 இந்த விவகாரம் தொடர்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா குருணாகல் நீதிவானுக்கு சமர்ப்பித்திருந்த விஷேட ஆவணங்களையும் பரிசீலித்தே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன் படி, குருநாகல் மாநகர மேயர் துஷார சஞ்சீவ விதானகே, நகர ஆணையாளர் நுவன் பக்ஷகே  பிரதீப் நிஷாந்த திலகரத்ன,  நகர பொறியியலாளரான  சமிந்த பண்டார அதிகாரி,  தேவையற்ற கட்டுமாணங்களை அகற்றும் அதிகாரியான  அலாவுதீன் மொஹம்மட் சுல்பிகார், பெகோ  இயந்திர சாரதி  லக்ஷ்மன் பிரியந்த ஆகியோரைக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு குருணாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் பிராந்திய விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கும் நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

 இந்த ஐவரும் குருநாகல் இரண்டாவது புவனேகபாகு மன்னரின் அரசவை காணப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்த கட்டடத்தை சேதப்படுத்தியமை தொடர்பில் கூட்டாக பொறுப்புக் கூற வேண்டும் என சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அவர்கள் தொல்பொருள் கட்டளை சட்டத்தின் 15 ( பி)  பிரிவின் கீழ் பழைமை வாய்ந்த கட்டிடம் ஒன்றினை சேதப்படுத்தியமை  தொடர்பிலும் அதே சட்டத்தின் 31 ஆவது அத்தியாயத்தின் கீழும்  தண்டனை சட்டக் கோவையின் 408 ஆவது அத்தியாயத்துடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் கீழும் சந்தேக நபர்கள் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக நியாயமான சந்தேகம் சாட்சிகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, பிடியாணைப் பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதன்படி நேற்று பிடியாணைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு சென்றனர். குருணாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில அதிகாரி,  பிராந்திய விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர்  ஆர். டி. குலதுங்க ஆகியோர் மன்றில் ஆஜரானதுடன் அவர்கள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்னாவும்,  சிரேஷ்ட அரச சட்டவடஹி மாதவ தென்னகோனும்  ஆஜராகினர்.

  இதன்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள குருணாகல் மாநகர  மேயர் துஷார சஞ்ஜீவ உள்ளிட்ட ஐவர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ மன்றில் ஆஜரானார்.

குறித்த கட்டிடம், பழைமை வாய்ந்த கட்டிடம் என்பது உண்மையாக இருந்தாலும், அது ஒரு போதும், பாதுகாக்கப்பட்ட தொல் பொருள் கட்டிடமாக தொல் பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட இடம் அல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ வாதிட்டார். சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை பிரகாரம்,  குறித்த கட்டிடத்தை அகற்ற எடுத்த நடவடிக்கை தொல் பொருள் கட்டளை சட்டத்தின் 18, 19 ஆம் பிரிவுகளின் கீழ் உள்ளடங்காது என்பதால், அது தொல் பொருளினை சேதப்படுத்தியதாக அமையாது என ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ வாதிட்டார்.

இதற்கு பதிலலித்த சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன,  அனைத்து பழைமை வாய்ந்த கட்டிடம் தொடர்பிலும்  தொல் பொருள்  திணைக்களத்துக்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுக்கொண்டிருப்பது கஷ்டமான காரியம் எனவும், எனினும் அகற்றப்பட்டுள்ள பழைமை வாய்ந்த கட்டிடம்  தொல் பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது என தொல் பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகமே அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

 இந்த விடயம் முழு நாடும் உண்ணிப்பாக அவதானிக்கும்  ஒரு விடயம் என்ற ரீதியில், சட்ட மா அதிபர் மிக வெளிப்படைத் தன்மையுடன் இந்த விவகாரத்தை கொள்வதாகவும், சந்தேக நபர்கள் பொதுச் சொத்தொன்றுக்கு சேதம் விளைவித்ததாகவே கருதுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குறிப்பிட்டார். எனவே இவர்கள் ஐந்து பேரையும் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாரும் அவர் கோரினார்.

இந் நிலையிலேயே சட்ட மா அதிபரின் அறிக்கை, இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிவான் சம்பத் ஹேவாவசம், குருணாகல்  மாநகர மேயர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்ய பிடியாணைப் பிறப்பித்தார்.