அன்புள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு,

 ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதை இனிமேலும் தாமதிக்க என்மனம் இடந்தரவில்லை என்பதால் இதை எழுதுகிறேன்.

        2020 ஆகஸ்ட் 5 பொதுத்தேர்தல் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 'முதன்முதலான" பல திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. இலங்கையின் தேசிய கட்சியொன்று பாராளுமன்றத் தேர்தலில், அதுவும் குறிப்பாக விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தேர்தல் முறையின் கீழ் ஒரு ஆசனத்தைக்கூடக் கைப்பற்றாமல் தனியே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்துடன் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது அந்த 'முதலாவதுகளில்" பெருமுக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்.

        உங்களுக்கு அது தெரியாது என்று நினைத்து நான் இதைக்கூறவில்லை. ஆனால் அதைப் பலரும் பேசிக்கொள்கிறார்கள். அதனால் என்னாலும் தவிர்க்கமுடியவில்லை.

        இன்னொரு 'முதலாவது", இலங்கையின் பழம்பெரும் கட்சியொன்றின் தலைவர் - அதுவும் பாரம்பரியமாகத் தலைநகரில் பெரும் செல்வாக்கைக்கொண்டு விளங்கிய கட்சியின் தலைவர் - கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற முடியாமல்போன சந்தர்ப்பமாகவும் இது அமைகிறது. அந்த 'முதலாவதை" நீங்களே சந்திக்கவேண்டியிருந்தது எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.

        ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் பெருந்தலைவர்களாக இருந்தவர்களில் நீங்கள்தான் மிகவும் நீண்டகாலம் - அதாவது கால்நூற்றாண்டுக்கும் அதிகமாக - தலைவர் பதவியில் இருந்துவருகிறீர்கள். உங்களுக்கு இந்தத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைக் காண்பதற்கு உங்களது பழைய தலைவர்கள் உயிருடன் இருந்திருந்தால் சுவரில் தலையை மோதியிருப்பார்கள்.

        ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களிலே உங்களைப்போன்று கட்சிக்குள் கிளர்ச்சிகளை எதிர்நோக்கிய தலைவர் ஒருவரும் கிடையாது. அதேவேளை அந்தக் கிளர்ச்சிகளின் சவாலை இடையறாது எதிர்கொண்டு வெற்றிகரமாகச் சமாளித்துத் தலைமைப் பதவியில் தொடர்ந்து நீடித்து நிலைக்கின்ற தலைவரும் நீங்கள்தான்!

        கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட போதிலும் நாடளாவிய ரீதியில் உங்கள் கட்சி பெற்ற வாக்குகளின் மொத்தத்தொகை, வெற்றிபெற்று ஆட்சியமைத்த கட்சியினதோ அல்லது கூட்டணியினதோ மொத்த வாக்குகளiயும் விடக்கூடுதலாக இருந்த பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.

        அதேவேளை உங்களது உறவுக்காரர் ஜனாதிபதி ஜெயவர்தன பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறைக்குப் பதிலாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய போது தேசிய ரீதியில் கூடுதல் வாக்குகளைப் பெறுகின்ற தனியொரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே விளங்கிவந்திருக்கிறது என்ற அம்சத்தையும் கருத்திலெடுத்திருந்தார் என்று கூறப்படுவதுண்டு.

      அதாவது, நாடளாவிய ரீதியில் கூடுதல் வாக்குகளைப் பெறுகின்ற தனது கட்சியே விகிதாசாரத்தேர்தல் முறையின் கீழ் என்றென்றைக்கும் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று அவர் நம்பியிருக்கக்கூடும்.

        ஆனால் அவரது கணிப்புக்களையெல்லாம் மீறி நிலைவரங்கள் அவரது கட்சிக்கே பாதகமாக அமைந்திருப்பதைப் பார்ப்பதற்கு அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் பெருங்கவலை அடைந்திருப்பார். அதுவும் தனது உறவுக்காரர் ஒருவர் தலைமையில் இருக்கின்ற வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் போயிருக்கும். அவருக்கு அடுத்துவந்த ஜனாதிபதி பிரேமதாஸவும் கூட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இவ்வாறு நேருமென்று ஒருபோதும் கனவு கண்டிருக்க மாட்டார்.

        விகிதாசாரத்தேர்தல் முறையின் கீழ் முதன்முதலான பாராளுமன்றத்தேர்தல் 1989 பெப்ரவரியில் ஜனாதிபதியாக பிரேமதாஸ இருந்த நேரத்தில்தான் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் வரலாற்றை நோக்கும்போது பெருமளவிற்கு செல்வாக்கை இழந்திருக்கின்ற ஒரு கட்சியும் கூட அந்தத் தேர்தல் முறையின் கீழ் ஓரளவு கணிசமான ஆசனங்களைப் பெறக்கூடியதாக இருக்கும் என்றே நம்பப்பட்டது.

        ஆனால் அந்தக் கணிப்பையும் கூட இந்த வாரத்தைய பொதுத்தேர்தல் பொய்யாக்கிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி இனிமேல் தலையெடுக்குமா? தலையெடுக்க முடியுமா? என்று எங்கு பார்த்தாலும் கேட்கிறார்கள்.

        தேர்தல்களில் படுதோல்விகளுக்குப் பிறகு தலைவர்கள் தங்கள் பதவிகளைத் துறந்து மற்றவரிடம் அவற்றை ஒப்படைத்த சந்தர்ப்பங்கள் பெருவாரியானவற்றை வரலாற்றில் கண்டிருக்கிறோம். இலங்கையில் அது அரிது என்றாலும் பல உலகநாடுகளில் நாம் காண்பது தான் அது.

        உங்கள் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பாரதூரமான வரலாற்றுத்தோல்வியை அடுத்து நீங்கள் தலைவர் பதவியைத் துறந்துவிட்டு - அடிக்கடி நீங்கள் கூறுவதைப்போன்று - இளைய தலைமுறைத் தலைவர்களிடம் ஒப்படைப்பதற்கான அறிகுறி எதையும் காணவில்லை.

       சிலவேளை நீங்கள் தொடர்ந்தும் கட்சித்தலைவராக இருந்து, கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு உறுதிபூண்டிருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக உங்கள் கட்சிக்கு ஏன் இந்தக் கதி ஏற்பட்டது என்பது குறித்து நீங்கள் ஆழமாக சிந்திக்கத் தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

      அதுகூட காலங்கடந்த ஞானமாகவே இருக்கும் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள். வரலாற்றுத் தோல்விக்கான காரணங்கள் என்று உறுதியாக நம்புகின்றவற்றை இந்த இந்தக் கடிதத்தில் விரிவாக எழுதமுடியவில்லை என்பதால் இன்னொரு சந்தர்ப்பத்தில் அதை உங்களுக்கு எழுதுவேன்.

        கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உங்களது தலைமைத்துவத்தின் கீழ் பல பின்னடைவுகளையும் தோல்விகளையும் சந்தித்து வந்திருக்கிறது. அவற்றினால் மனம் துவண்டுபோகாமல் நீங்கள் தலைமைத்துவத்தில் தொடர்ந்து நிலைகுற்றி நின்றிருக்கிறீர்கள். உண்மையில் சொல்கிறேன், தோல்விகளைக்கண்டு துவண்டுபோகாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் உங்களைப்போன்று ஒரு தலைவரை நான் கண்டதில்லை. இதை வஞ்சகப்புகழ்ச்சியாக நினைத்துவிடாதீர்கள். மனதில் பட்டதையே சொல்கிறேன். அந்த 'மனோதிடத்தைத்" தொடர்ந்தும் பேண உத்தேசமா? அறியத்தாருங்கள். பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,

ஊர்சுற்றி.