2020 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆரம்ப குடித்தொகை சார்ந்த ஆய்வு கட்டுரையாக இதை வரைகிறேன்.
தமிழ் பகுதிகளை பொறுத்தவரையில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவை காட்டுகிறது. இதில் மிகவும் மோசமான எதிர்பாராத பின்னடைவாக பிரபாகரன் மற்றும் பல போராளிகளை உருவாக்கிய வல்வெட்டித்துறை மண்ணைக் கொண்ட உடுப்பிட்டித் தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவை குறிப்பிடலாம்.
முதல் தடவையாக சிங்கள பேரினவாதக் கட்சி ஓன்று உடுப்பிட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன் பாராளுமன்ற சரித்திரத்தில் பல தசாப்தங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக இருந்த உடுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3ம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும் இதை அடைவதற்கு எவ்வாறான உபாயங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராய்வதும் தமிழர்களின் எதிர்காலம் இலங்கையில் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை எதிர்வு கூறுவதற்கு வழிவகுக்கும்.
எழுந்தமானமாக பார்க்கும் போது தமிழர் போராட்ட வரலாறு பற்றி சரியாக அறியாத தமிழ் தேசியத்தில் பற்றுறுதி அற்ற புதிய இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்படும் போது தமிழ் தேசியத்தின் பின்னடைவு தவிர்க்க முடியாது என்று கருதினாலும் இந்த தோல்வியின் பின்னால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்ச்சிகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
முதலாவதாக தமிழர் பகுதியில் உள்ள மகிந்த எதிர்ப்பு உணர்வை மறைப்பதற்கு மொட்டு சின்னம் தவிர்க்கப்பட்டு கை சின்னம் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக தமிழினத்தின் அடிப்படை பலவீனமான சாதித்துவம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அணுகப்பட்டு அவர்களுடைய வாக்குகளை இலக்கு வைத்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
தேர்தலுக்கு பின்னர் அடுத்தகட்ட தமிழர் பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு இந்த நபர்களே துணை போகப்போகிறார்கள் என்பதை அறியாத அப்பாவி இளைஞர்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு கிடைத்த உதவிகளுக்கு கைமாறாக வாக்குகளை வாரி வழங்கினார்கள். இதை விட தமிழ்ப் பகுதியில் பல சுயேச்சைக் குழுக்கள் தமிழர் வாக்குகளை சிதறடிப்பதற்காக திட்டமிட்ட முறையில் களம் இறக்கப்பட்டிருந்தனர்.
கிழக்கை பொறுத்தவரையில் தமிழர் வாக்குகளை சிதைப்பதற்காக முஸ்லீம் எதிர்ப்புணர்வை பயன்படுத்தும் குழுக்கள் திட்டமிட்ட முறையில் இறக்கி விடப்பட்டதானால் சூழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை போல தமிழர் பிரதிநிதித்துவம் மட்டக்களப்பில் 4 இல் இருந்து 3 ஆகவும் அம்பாறையில் 0 ஆகவும் குறையும் இழிநிலை ஏற்ப்பட்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள் சிறிய சிறிய எண்ணிக்கையை கொண்ட பல குழுக்களாக பிரிந்துள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்துக்கு ஒழுங்காக செல்லாதவர்களாகவும் பாராளுமன்ற அனுபவம், சட்டப் புலமை ஆங்கில அறிவு இல்லாதவர்களாகவும் எழும்பி நின்று ஒரு உரையை திறம்பட அற்ற முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் தமிழருக்கு ஏற்பட்ட இந்த இழிநிலைக்கு உள்நாட்டு சக்திகள் மாத்திரமல்லாது வெளிநாட்டிலுள்ள பல சக்திகளும் காரணமாவார்கள். உதாரணமாக நாடு கடந்த அரசாங்கம் மற்றும் வெளிநாட்டிலுள்ள "தமிழ் தேசியம்"பேசும் குழுக்கள் வெளிப்படையாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்தும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஆதரித்தும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்திருந்தார்கள்.
இதே வேளை தென்பகுதியில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்கெனவே 128 ஆசனங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் உருவாகும் அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றுக் கொள்வது ஒரு பெரிய விடயமாக இருக்கப்போவதில்லை. அப்படி சில ஆசனங்கள் குறைந்தாலும் தமிழர் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஆதரவு அளிப்பதற்கும் இணைந்து செயல்படவும் தயாராகவே இருக்கிறார்கள்.
இதன் மூலமாக செய்யப்பட்ட சூழ்ச்சிகளின் அடிப்படை நோக்கமாகிய 2/3 பெரும்பான்மையை பெறுவது உறுதி ஆகியுள்ளதுடன் அடுத்த 5 வருடங்களில் சிங்கள பவுத்தத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் பல சட்டவாக்கங்களும் அரசியலமைப்பு மாற்றங்களும் ஏற்படப் போகிறது.
துரதிஷ்ட வசமாக தமிழர் தரப்பில் இந்த மாற்றங்களை விளங்கி குரல் கொடுக்கக் கூடிய ஆளுமையுள்ள தலைவர்கள் அருகியுள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி சிங்கள குடியேற்றங்களை தமிழ்ப் பகுதிகளில் வேகமாக மேற்கொள்ள எந்த தடையும் இருக்கப் போவதில்லை என்பதுடன் ஏற்கெனவே கிழக்கில் ஆரம்பித்துள்ள பண்டைய தமிழர் ஆட்சி அடையாளங்களையும் புராதன சைவ ஆலயங்களையும் அழிக்கும் செயல்களும் இனி முழுமூச்சுடன் நாடெங்கும் இடம் பெறும்.
முடிவாக அடுத்த 5 வருடங்கள் ஈழ தமிழர் வரலாறில் களப்பிரர் யுகம் போல ஒரு இருண்ட காலமாக இருக்கப் போகிறது. குறைந்த பட்சம் இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாக்களித்து தமது அடையாளத்தை பேணி மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்பதை அவதானித்து செயற்படாவிட்டால் தமிழினம் இலங்கையில் இன்னும் பல பின்னடைவுகளை சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.
முரளி வல்லிபுரநாதன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM