நாட்டின் 9 ஆவது புதிய பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொருட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும்  பொதுஜன பெரமுன 128  இடங்களைப்  பெற்று மாபெரும் வெற்றி வாகை சூடியுள்ளது.

இதேவேளை ஐக்கிய  தேசியக் கட்சியிலிருந்தும் பிரிந்து சஜித் பிரேமதாஸா  தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி 47 ஆசனங்களைப் பெற்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவுள்ளது.

நாட்டை பல தடைவைகள் ஆட்சி செய்த பழம் பெறும் தேசிய கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி எந்தவொரு ஆசனத்தையும் பெறாது படுதோல்வி அடைந்துள்ளது.

வடக்கு , கிழக்கு மக்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் ஒன்பது ஆசனங்களையும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தையும் பெற்று 10 உறுப்பினர்களை ஒருவாறு தக்கவைத்துக் கொண்டது.

மக்கள் விடுதலை முன்னணிக்கு இரு ஆசனங்கள் கிடைத்துள்ளன. யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் 49, 373 வாக்குகளைப் பெற்று  வெற்றி பெற்றுள்ளார்.

வடக்கு. கிழக்கைப் பொறுத்த மட்டில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை  கடந்த தடவையை விட இத்தடவை 5 ஆல் குறைந்துள்ளது.

2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் 22 ஆசனங்களைக் கூட்டமைப்பு பெற்றிருந்தது. பின்னர் 2010 இல் 14 ஆசனங்களும்,2015 இல் அதே அளவிலான ஆசனங்களையும் பெற்றிருந்தது.

கூட்டமைப்பு யாழ் மாவாட்டத்தில் 3 ஆசனங்களையும் வன்னியில் 3 ஆசனங்களையும் மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களையும் திருகோணமலையில் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. அம்பாறையில் எந்தவொரு ஆசனமும் கிட்டவில்லை.

தமிழ் மக்களின் வாக்குகள் பிளவுபட்டமையும் கடுமையான விமர்சனங்களை கூட்டைமைப்பு சந்தித்தமையும் மக்கள் திருப்தி அடையகூடிய போதிய சேவைகள் எதனையும் மேற்கொள்ளாமையும், தமிழ்மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பிரிந்து சென்று தேசிய மற்றும் மாற்று கட்சிகளுக்கு வாக்களிக்க நேர்ந்தது. அதுமாத்திரமன்றி வடக்கில் பல கட்சிகள் போட்டியிட்டமையும் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட காரணமாக அமைந்தது.

இதேவேளை யாழில் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும், ஈ.பி.டி.பி ஒரு ஆசனத்தையும், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இடித்த இடிக்கும் மின்னலுக்கும் ஏற்ப மழை கொட்டாத நிலையே தமிழ்மக்கள் தேசிய கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியான பொது ஜனபெரமுன மிகக்குறுகிய காலத்தில் கால்பதித்து இதர தேசிய கட்சிகள் அனைத்துக்கும் பாரிய சவாலாக மாத்திரமன்றி இருக்கும் இடம் தெரியாது உருகுலைத்து விட்டது என்றே கூற வேண்டும்.

இதேவேளை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முன்வைத்தே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரசாத்தை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில், பொதுஜன பெரமுன பெற்ற 128 ஆசனங்களுடன் அவர்களுக்கு தேசிய பட்டியல் ஊடாக கிடைத்த 17 ஆசனங்களையும் சேர்த்து 145 ஆசனங்களை ஒட்டு மொத்தமாகக் கைப்பற்றி உள்ளது.

இதேவேளை மூன்றில் இரண்டு  பெருபான்மையை எதிர்பார்க்கும் பொதுஜன பெரமுனவுக்கு ஈ.பி.டி.பி யின் இரு ஆசனங்கள் அங்கஜன் இராமநாதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு ஆசனம், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் மூலம்  ஒரு ஆசனம், பிள்ளையானின் தமிழ் மக்கள் புலிகள் கட்சி மூலமும் ஒரு ஆசனமும்  கிடைக்கும் என்பதால் ஒட்டு மொத்தமாக அவர்கள் 150 ஆசனங்களை இன்று காலை வரை பெற்றிருந்தனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற தற்போதைய நிலையில் 151 ஆசனங்கள் தேவை என்பதால், தற்போது தேவையான  மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி யமைக்கும் நிலை எவ்வேளையிலும் உருவாகலாம். இதுவே இன்றைய களநிலைவரம் ஆகும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்