(செ.தேன்மொழி)

கேகாலை நகரத்தில் இளைஞர்கள் சிலருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், இன்னுமொருவர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது இளைஞர்கள் சிலருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது இளைஞன் ஒருவன், அங்கிருந்த இளைஞர்கள்  இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து படுகாமடைந்த இளைஞர்கள் இருவரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் , அவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் ; தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

கேகாலை - வின்சன் விக்கிரமசிங்க மாவத்தையை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்றிருந்த 24 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக  விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.