தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான ரம்யா, சிலம்பம் கற்று வருவதாக தெரிவித்திருக்கிறார்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வி.ஜே.ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓகே கண்மணி', மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை உள்ளிட்ட பல படங்களில் நடித்து, நடிகையாகவும் வலம் வருகிறார். 

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தி வரும் இவர், அண்மையில் வலுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு, தேசிய அளவில் சாதனை படைத்தார். 

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழர்களின் வீர கலையான சிலம்பம் சுற்றும் கலையை இவர் கற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்யடிருக்கிறார். இதற்கு அவருடைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

இதனிடையே இவர் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சங்க தமிழன்' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்பதும், விரைவில் வெளியாகவிருக்கும் தளபதி விஜய் நடிப்பில் தயாரான 'மாஸ்டர்' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிலம்ப பயிற்சி குறித்து அவர் பேசுகையில்,' இம் மாதம் முதல் சிலம்பக் கலையை கற்று வருகிறேன். எனக்கு நானே அளித்துக் கொண்ட பரிசு இது. தமிழ் வீரர்கள் மீது தனி மரியாதை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கலையை எப்படி அவர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியமும் எமக்குள் எழுகிறது.' என்றும் பதிவிட்டிருக்கிறார் நடிகை ரம்யா.