90 ஆவது அகவையை பூர்த்திசெய்யும் வீரகேசரி  

Published By: Priyatharshan

06 Aug, 2020 | 11:58 AM
image

வீரகேசரி நிறுவனம் இன்று தனது 90 ஆவது அகவையை பூர்த்தி செய்கின்றது என்ற செய்தி வீரகேசரியோடு ஒன்றிணைந்து இருக்கும் அதன் அபிமானிகள் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

1930 ஆம் ஆண்டு இதே தினத்தில் தான்  வீரகேசரி என்ற விதை தென்னிந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் செட்டியார் அவர்களால் மண்ணில் ஊன்றப்பட்டது.

அன்றுதொட்டு தழைத்தோங்கி பெரும் விருட்சமாக விளங்கும்  வீரகேசரி இன்று பல்லாயிரக் கணக்கானோரின் அறிவுப் பசிக்குத் தீனி போடுவது மாத்திரமன்றி, சிறந்த செய்தி ஊடகமாகவும் விளங்குகிறது. அத்துடன் அதனை நம்பி வாழும் நூற்றுக்கனக்கான குடும்பங்களையும் வாழ வைத்து வருகிறது.

 ஆரம்ப கால கட்டத்தில் வீரகேசரி, வீரகேசரி வாரவெளியீடு ,மித்திரன் என தனது பிரசுரங்களை  வெளிக்கொணர்ந்த வீரகேசரி நிறுவனம், இன்று தனது கிளைகளை பரப்பி  பத்துக்கும் அதிகமான பிரசுரங்களை வெளியிட்டு வருவதுடன் பல்வேறு விருதுகளைப் பெற்று இலங்கையின் முதல்தர தேசிய ஊடகம் என்ற பெருமைக்குரிய ஒன்றாகவும் விளங்குகின்றது .

இவை அனைத்திற்கும் பிரதானமான காரணம், வீரகேசரியை வாழவைக்கும் அதன் அபிமான வாசகர்களும், எழுத்தாளர்களும், அதனோடு இணைந்த ஊழியர்களுமேயாகும். இந்த இனிய சந்தர்ப்பத்தில் வீரகேசரி தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது .

இதேவேளை வீரகேசரி நிறுவனம் உலகின் நவீன மாற்றங்களையும் தன்னகத்தே ஈர்த்து, உலகின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு தன்னாலான சிறந்த செய்திச் சேவையை ஆற்றி வருகின்றமை அனைவரும் அறிந்ததே .

குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக இணையவழியில் உலக தமிழ் மக்களை ஒன்றிணைத்து வழங்கி வரும் செய்திச் சேவை, இன்று பலராலும் பாராட்டப்பட்டதாகும். இதன் மூலம் சிறந்த இணையதளம் என்ற விருதையும்  பல தடவைகள் வீரகேசரி தட்டிக் கொண்டது .

 இவை அனைத்திற்கும் மேலாக புதிதாக அறிமுகம் செய்துள்ள செய்தி ஒலி ஒளிபரப்பு சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . பல்வேறு புதுமைகளை புகுத்துவதிலும் , நம்பகரமான செய்திகளை உடனுக்குடன் வழங்குவதிலும் virakesari.lk இணையத்தளம் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவை அனைத்திற்கும்  வீரகேசரி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை மற்றும் முகாமைத்துவ இயக்குனர் குமார் நடேசன் ஆகியோரின் வழிகாட்டல்கள் முக்கியமானதாகும்.

இன்றைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  உலகில் எத்தனையோ பாரிய நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்ட நிலையிலும் வீரகேசரி நிறுவனம் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தனது சேவையை தொடர்ந்து வருவதற்கு  பிரதான காரணம் உண்மையில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவும் அரவணைப்பும் என்றால் மிகையில்லை.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம், வீரகேசரி, வீரகேசரி 90 ஆவது வருடம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right