லெபனானின் தலைநகர் பெய்ரூட் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டின் சுகாதார அமைச்சு புதன்கிழமை தெரிவித்தார்.

இதேவேளை லெபனானின் பெய்ரூட் நகரின் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்புக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த பகுதிக்கு தேடல் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

லெபனான் அதிகாரிகள் வேண்டுகோளின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

அதேவேளை தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து, கிரீஸ் மற்றும் செக்குடியரசு, பிரான்ஸ், போலந்து மற்றும் ஜெர்மனியும் உதவிகளை வழங்கியுள்ளன.

பெய்ரூட் துறைமுகத்தில் வெடிபொருட்கள் அடங்கிய கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்த பாரிய வெடிப்பில் குறைந்தது 113 பேர் உயிரிழந்ததுடன் 4,000 பேர் காயமடைந்தாகவும் கூறப்படுகிறது. 

அதேநேரம் தலைநகரின் பல சுற்றுப்புறங்களில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனானில் உள்ள உச்ச பாதுகாப்பு கவுன்சில் பெய்ரூட்டை பேரழிவால் பாதிக்கப்பட்ட நகரமாக அறிவித்துள்ளது.

லெபனான் அதிகாரிகளால் ஒரு கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிடங்கில் வைக்கப்பட்ட "அதிக வெடிக்கும் சோடியம் நைட்ரேட்" காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பெய்ரூட் துறைமுக மேலாளர், "ஆபத்தான பொருட்களின்" அளவு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.