உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி இருப்பதால், 12 வயதிற்குட்பட்ட  சிறார்களுக்கு, அவர்களுடைய கல்வி கற்றல் தொடர்பான செயற்பாட்டில் அவசியப்படும் குவி கவனமும், அவர்களின் உளவியல் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இன்றைய திகதியில் உலகம் முழுவதும் ஏறக்குறைய 2 கோடி மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் 5 வயதிற்குட்பட்ட  குழந்தைகளுக்கு அறிகுறியற்ற கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்களின் மூலமாகவே பெரியவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பிற்குள்ளாகும் 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு அவர்களுடைய உளவியல் வளர்ச்சியில் தேக்க நிலை அல்லது இடையூறு ஏற்பட்டிருப்பதாகவும், அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாட்டில் ஒருமுக கவனத்துடன் செயல்படாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். பாடசாலை வளாகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் வகுப்பறைகளில் அமர்ந்து கல்வி கற்ற அவர்களுக்கு, அத்தகைய தொடர்ச்சியான நடவடிக்கைக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இடைநிறுத்தம் செயப்பட்டிருப்பதால், அவர்கள் கவனச் சிதறலுக்கு ஆளாகி இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கல்வி கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், கல்வி கற்பித்தல் தொடர்பான தொடர்ச்சியான நடவடிக்கையின் மாற்று வடிவமாக கருதப்படும் ஒன்லைன் மூலமான கல்வி  கற்பித்தலை அவர்களால் முழுமையாக ஏற்றுக்கொண்டு, எதிர்வினையாற்ற முடியவில்லை என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.

இவ்விரண்டு பாதிப்பிற்கும் இவர்கள் உரிய நேரத்தில் முறையான உறக்கத்தை கடைப்பிடிக்காததே காரணம் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். எனவே 12 வயதுக்குட்பட்ட சிறார்களின் உறக்க சுழற்சியை, பெற்றோர்கள் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் பராமரிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் பக்க விளைவுகளிலிருந்து மீள இயலும் என்றும், சிலரை இத்தகைய பாதிப்பிற்கு முன்னரே தடுக்க இயலும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

டொக்டர் ராஜ்மோகன்
தொகுப்பு அனுஷா.