பொது தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அணைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேவேளை, பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு வெளிநாட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களும் தங்களது பார்வையை செலுத்தி வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தை பொருத்தமட்டில் 577,717  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அந்தவகையில் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 330761 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கொத்மலை தேர்தல் தொகுதியில் 84,175 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா. 87,503 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 75,278 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும் 95 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் 4000 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 2000 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதே வேளை மாலை மூன்று மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில்  70% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.  அத்துடன் நிறைவடைந்துள்ள 8மணித்தியாளத்தில் இலங்கையில் மாவட்ட ரீதியாக அதிக வாக்கு பதிவு நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.