கே .குமணன்
முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.

"நந்திக்கடல் ஆழமாக்கல் முன்மொழிவு" என்ற தலைப்பில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியில் உள்ள அறிவித்தல் வருமாறு ,

இந்த நந்திக்கடல் ஆழமாக்கல் முன்மொழிவு நடவடிக்கையானது பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வருமானத்தினூடாக அதாவது அரச நிதியூடாக மேற்கொள்ளப்படவுள்ளமையால் நந்திக்கடல் ஆழமாக்கல் முன்மொழிவு அலுவல்களுக்காக எந்தவொரு கட்சிக்குழுவுக்கு அல்லது வேட்பாளர் ஒருவருக்கு விசேட அக்கறையை காண்பிக்க வேண்டியதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த 02.08 .2020 அன்று மீன்பிடி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாரா நிறுவனத்தால் நந்திக்கடலை ஆழமாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கபடவிருந்த நிலையில் மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவால் அந்த நடவடிக்கை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக முல்லைத்தீவுக்கு வருகைதந்திருந்த மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேர்தலுக்கு முன்னர் வட்டுவாகல் ஆற்றினை ஆழப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என மீனவர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்.  இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆழப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட இருந்த நிலையிலேயே தேர்தல் முடியும் வரை தடுத்து நிறுத்தபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

போருக்கு பின்னர் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்று பகுதி சேறுகள் நிறைந்து நிரம்பியதால் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் அதனை ஆழப்படுத்தி தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.