போவோமா? விடுவோமா?

Published By: Priyatharshan

05 Aug, 2020 | 11:08 AM
image

நாட்டின்  9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பெருமக்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி தங்கள் பொன்னான வாக்குகளை இடலாம். போவோமா? விடுவோமோ? என்ற இரு மனம் இன்றி ஒரே மனமாக வாக்காளர்கள் நேரகாலத்துடன் சென்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டியது இன்றியமையாதது .

வடக்கு, கிழக்கு,  மலையகம் உட்பட நாட்டின் தேர்தல் முடிவுகளை மக்கள் மிகவும் விசேடமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆளும் கட்சி,  தான் எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. அதேபோன்று எதிரணியும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் ஆதரவுடன் கூடிய இடங்களைப் பெறலாம் என எதிர்பார்த்துள்ளது.

இவற்றுக்கு மத்தியில் மக்கள் என்ன தீர்வினை வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்படுகின்றது. தேர்தல் முடிவுகள் நாளை காலை முதல் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

எனவே மக்கள் பொறுமையாக தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர அநாவசியமான வன்செயல்களுக்கோ அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கோ இடமளிக்கக் கூடாது.  

ஒவ்வொரு தேர்தலின் போதும் முறைகேடுகள் இடம்பெறுவதும், தேர்தல் வன்செயல்கள் தலைதூக்குவதும் வழமையான ஒன்றாகவே இருந்து வருகின்றது. எனவே தேர்தல் கடமைகளில் ஈடுபடுவோர் மிகுந்த கடமை உணர்வுடன் தமது சேவையை மேற்கொள்வது இன்றியமையாதது.

இதேவேளை வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் ,அதிகாரிகள் பக்கச்சார்பின்றி நடுநிலையாக செயற்பட வேண்டியது அவசியமாகும் .குறிப்பாக நுவரெலியா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த வாக்களிப்பு மத்திய நிலைய அதிகாரிகள் 10 பேர் அந்த கடமைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக  புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்  .குறித்த 10 அதிகாரிகளும் குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றின் தேர்தல் கூட்டங்களில் கலந்துகொண்டதாக புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார் .

இவ்வாறு சம்பவங்கள் தொடருமானால் தேர்தல்  நடத்துவதில் அர்த்தம் இல்லாது போய்விடும் . அத்துடன் மக்கள் தேர்தல்கள் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்டோர் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right