இன்று இடம்பெறும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க 82,091 பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தலை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 61,078 பொலிஸ் அதிகாரிகள், 3,145 விசேட பொலிஸ் அதிரடைப் படையினர் மற்றும் 2,368 உளவுத்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தேர்தல் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர்  அசோக தர்மசேனா தெரிவித்தார். 

மேலும், 1,926 சிறப்பு பணியக அதிகாரிகள் மற்றும் 10,750 சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

12,984 வாக்குச் சாவடிகளுக்கு பாதுகாப்பு வழங்க மொத்தம் 25,998 பொலிஸ் அதிகாரிகள், ஒரு மையத்திற்கு இரண்டு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 64 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3,328 அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தலா ஐந்து அதிகாரிகள் அடங்கிய 3,069 மொபைல் ரோந்து பிரிவுகள் இன்று காலை 6 மணி முதல் தேர்தல் கடமைகள் தொடர்பான ரோந்துப் பணிகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் தர்மசேன தெரிவித்தார். அதன்படி, 15, 345 அதிகாரிகள் மொபைல் ரோந்து பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் ஜாலியா சேனரத்ன, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமைதியான காலப்பகுதியில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் 19 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக 22 வேட்பாளர்களை பொலிஸார் கைது செய்து ஏழு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறினார்.