லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் லெபனான் ஜனாதிபதி மைக்கல் அவுன் புதன்கிழமை அவரச அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனர்த்தத்தினை தொடர்ந்து இரண்டு வார கால அவசர நிலையை அறிவிக்கவே இந்த அமைச்சரவை கூடப்படவுள்ளது. 

செவ்வாயன்று இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவம் நகரம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், புறநகரில் கூட பரவலான சேதத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே 78 பேர் உயிரிழந்தும் 4000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ள நிலையில், தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.‍ இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என்றும் அஞ்சப்படுகின்றது.

ஆறு ஆண்டுகளாக துறைமுகத்தில் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,700 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்ட இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாரிய வெடிப்பைத் தொடர்ந்து பெய்ரூட்டை பேரழிவால் பாதிக்கப்பட்ட நகரமாக அறிவிக்கவும், தலைநகரில் இரண்டு வார கால அவசரகால நிலையை அறிவிக்கவும், பாதுகாப்புப் பொறுப்பை இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் லெபனானின் உச்ச பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்தது.

ஜனாதிபதி மைக்கேல் அவுன் 2020 பட்ஜெட்டில் இருந்து 100 பில்லியன் லெபனான் பவுண்டுகள் (66 மில்லியன் டொலர்) அவசரகால ஒதுக்கீட்டில் வெளியிட முடிவு செய்துள்ளார்.