இலங்கையில் அடுத்து யார் தம்மை ஆளவேண்டும் என்பதைத் தீர்மானிக்க மக்கள் புதன்கிழமை வாக்களிக்கவுள்ளனர்.

நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் வீதியெங்கும் அனைத்துப் பிரச்சாரஙகளிலும் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசி தமக்குள் இருக்கும் முரண்பாடுகளையும், ஒற்றுமையின்மையையும் தென்னிலங்கை மக்களுக்கு வெளிப்படுத்தினர்.

ஆனால் ஒரு விடயத்தில் தமிழ்க் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடையே அதீத ஒற்றுமை ஒன்று உள்ளதையும் நான் கண்டேன். அது பத்திரிகைகளில் தமக்கு ஆதரவு கோரி அவர்கள் வெளியிட்டுள்ள விளம்பரங்கள்.

குழாயடிச் சண்டை போல அடித்துக்கொண்ட வேட்பாளர்கள் மக்களிடையே வாக்குக்கேட்கும் படங்களை உள்ளூர் பத்திரிகைகளில் அருகருகே காண முடிந்தது. தேர்தல் பிரசாரம் முடிவடைய ஒருநாள் இருக்கும் நிலையில் வடக்கிலிருந்து வெளியாகும் உள்ளூர் பத்திரிகை ஒன்றின் முதல் பக்கத்தில் அதாவது முகப்புப் பக்கத்தில் செய்திகளுக்குப் பதிலாக சைக்கிள், யானை, கை மற்றும் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் விளம்பரங்கள் மிக நெருக்கமாகக் காண முடிந்தது.

அதே பத்திரிகையின் மற்றொரு பக்கத்தில் முக்கியகட்சியின் வேட்பாளர் ஒருவர் முழு பக்கத்தையும் ஆக்கிரமித்திருந்தார். இன்னொரு பக்கத்தில் மீன், வீடு மற்றும் தொலைபேசி சின்ன வேட்பாளர்கள் கைகூப்பிய வண்ணம் அருகரே காட்சியளிக்கின்றனர்.

பத்திரிகை விளம்பரங்களின் வாக்கு கோரும் போது அருகரே காணப்படும் இந்தத் தமிழ்க் கட்சிகள் மற்றும் அதன் வேட்பாளர்கள் தமிழ் மக்களின் நலன்கள் மற்றும் உரிமை தொடர்பிலும் இப்படி தோளோடு தோள் நின்றிருந்தால் எவ்வளவு நன்மை கிட்டியிருக்கும் எனும் எனது அங்கலாய்ப்பைத் தவிர்க்க முடியவில்லை.

தேர்தல் அறிக்கையில் சமஷ்டி, சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் போன்ற விடயங்களில் ஒரே கருத்தை வெளியிடும் கட்சிகள் ஏன் ஒன்றாக இருக்கக் கூடாது என்று எழும் கேள்விகளுக்கு யார் விடையளிப்பார்கள்.

இங்குதான் மக்கள் நலனைவிட தனிப்பட்ட நலன்கள் முன்னிலைப் பெறுகின்றன. தமிழ்க் கட்சிகளின் உள்குத்து வேலைகள் காரணமாகத் தமிழ் மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆனது இலங்கையின் வரலாறு.

தேர்தலுக்குப் பிறகாவது இவர்கள் பொது நோக்குக்காக ஒரே அணியில் திரண்டால் அது நலம் பயக்கும். அந்த ஒற்றுமை உணர்வே தமிழ் மக்கள் எதிர்ப்பார்ப்பது.

எதிர்க்கட்சிகளிடையேயான ஒற்றுமையின்மையும், உட்கட்சிப் பூசலையும் தமக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள தாமரை மொட்டுக்கட்சி லாவகமாகக் காய் நகர்த்தி வருகிறது.

தேர்தலுக்கு முன்னரே குதிரை பேரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதைக் காண முடிகிறது. மூன்றில் இரண்டு என்பதை மந்திர உச்சாடனம் போன சதா சர்வகாலமும் ஜெபிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்படியாவது அதைப் பெற்றுவிட வேண்டுமென்று துடிக்கிறது. இதற்கு அச்சாரமாக ஐக்கிய தேசியக் கட்சியின் சில வேட்பாளர்கள் தாமரை மொட்டுக் கட்சிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இது எதிர்வரும் காலங்களில் தமது சுயநலப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.

மூழ்கும் கப்பலிலிருந்து குதிப்பதே புத்திசாலித்தனம் என்று அவர்கள் கருதியிருக்கலாம். ஆனால் கப்பல் மூழ்காமல் இருப்பதை அதை மாலுமி உறுதி செய்துகொள்ள வேண்டும். கப்பல் மூழ்கினாலும் தான் தப்பித்துக்கொள்ள முடியும் என்றும் அந்த மாலுமி நினைப்பாராயின் அது அழிவுக்கே வழிவகுக்கும்.

எப்பேர்ப்பட்ட புயல் வந்தாலும், தனது கப்பலையும் அதிலுள்ளோர்களையும் பத்திரமாக கரைசேர்க்கும் வல்லமையும் தலைமைத்துவ பண்பும் அந்த மாலுமிக்குத் தேவை. ரணில் எனும் அனுபவம் வாய்ந்த அந்த மாலுமி என்ன செய்யப் போகிறார் ?

தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பலர் தம்முடன் இணைந்து கொள்வார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே பிளவுபட்டு பலவீனமான நிலையில் இருக்கிறது. அப்படியான சூழலில் ரணில் விக்ரமசிங்கவால் எந்த அளவுக்கு தமது கட்சியின் சார்பில் தேர்வாகும் எத்துணை பேரைத் தேர்தலுக்கு பிறகு தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பது தெரியவில்லை. தேர்தலுக்கு முன்னரே வேட்பாளர்கள் கட்சி மாறுவது ரணிலின் தலைமைத்துவம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இதை அவருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகவும் பார்க்க முடியும்.

தேர்தலுக்கு பிறகு கட்சி மேலும் சிதறுண்டு போகாமல் இருப்பதையும், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ராஜபக்ச தரப்பால் இழுக்கப்படாமல் இருப்பதையும் ரணில் எப்படிக் கையாள்கிறார் என்பதிலியே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அவரது எதிர்காலம் ஆகிய இரண்டும் அடங்கியுள்ளது.

அதேவேளை தேர்தலுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஆதரவு கிடைத்தால் அதைவைத்து மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முயல வேண்டும். தாங்கள் விரும்பியதைச் செய்ய மூன்றில் இரண்டு பங்கு பலத்தை நாடாளுமன்றத்தில் பெற கட்சிகளை உடைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை தமது பக்கம் இழுக்கத் தாமரை மொட்டு விழையுமானால் அது புத்த பகவான் போதித்த தர்ம நெறிகளிலிருந்து விலகிச் செல்வதாகும்.

`பலவந்தமான ஆட்சேர்ப்பு`எப்படியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை இலங்கை அறியும். அப்படியான செயல்பாட்டில் ராஜபக்சக்கள் ஈடுபடக் கூடாது. மக்கள் தமக்களித்த ஆணையைக் கொண்டு கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு.

சிவா பரமேஸ்வரன்