நாளை புதன்கிழமை (05) நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் புத்தளம் மாவட்டத்திலுள்ள 421 வாக்களிப்பு நிலையங்களுக்கு, இன்று செவ்வாய்க்கிழமை (04) எடுத்துச் செல்லப்பட்டன.

புத்தளம் சென் அன்ரூஸ் மத்திய கல்லூரி, பாத்திமா மகளிர் கல்லூரி மற்றும் ஸைனப் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றிலிருந்து குறித்த வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் என்பன பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அனுமதியளிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.

இவ்வாறு வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் போது புத்தளம் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொலிஸாரும், விஷேட அதிரடிப் படையினரும் நகரமெங்கும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள 5 தேர்தல் தொகுதிகளிலும் இருந்து 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இந்த தேர்தலில் பிரதான அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 17 ஆயிரத்து 370 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக 421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், 88 வாக்கு எண்ணும் நிலையங்களுடன், 10 தபால் வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, தேர்தல் கடமைகளுக்காக 5800 அரச உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதுதவிர, 1600 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, வன்னியில் நிரந்தர வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துள்ள வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வாக்காளர்கள் 6275 பேர் இம்முறை புத்தளத்தில் வாக்களிப்பதற்காக 12 கொத்தனி வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.