நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் பிரதான வாக்கெண்ணும் நிலையமான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியிலிருந்து தீவிர பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக முல்லைத்தீவு  மாவட்டத்தில் 78360  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 136 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

கொரோனா தொற்று நிலைமைகளை கருத்தில்கொண்டு சுகாதார சட்ட விதிகளுக்கு அமைய வாக்கு பெட்டிகளை கொண்டு செல்பவர்களினது உடல் வெப்பம் சுகாதார பகுதியினரால் பரிசோதனை மேற்கொள்ளபடுகின்றமையும் குறிப்பிடதக்கது .

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்கள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அண்மையாக விசேட அதிரடி படையினர் மற்றும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்  ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் வன்முறைகளை கண்காணிப்பதற்காக கெமராக்களுடன் பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.