கால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர்களின் முகம் அருகே அல்லது நடுவர் முகம் அருகே வேண்டுமென்றே இருமினால் தடைவிதிக்கப்படும் என இங்கிலிஷ் கால்பந்தாட்ட சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவிய பின்னர், ஐரோப்பிய நாடுகளில் கால்பந்தாட்டப் போட்டிகள் ரசிகர்களின்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஒரு வீரரிடமிருந்து மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

மைதானங்களில் அடிக்கடி துப்பக்கூடாது. வீரர்கள் சந்தோசத்தில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிக்கக் கூடாது, முடிந்தளவு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு வீரர் மற்றொரு வீரர் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினாலும், நடுவர் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினாலும் அவரை சிவப்பு அட்டை காண்பித்து வெளியே அனுப்பலாம். அல்லது மஞ்சள் அட்டை கொடுத்து தண்டிக்கலாம் என நடுவருக்கு அதிகாரம் கொடுக்கும் வகையில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் வழிகாட்டு நெறிமுறையை திருத்தம் செய்துள்ளது.

எனினும், அடிக்கடி இருமுதல் மற்றும் மைதானத்தில் எச்சில் துப்புதல் தண்டனைக்குள்ளாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.