நாளை 5 ஆம்  திகதி விடிந்தால் தேர்தல், 9 ஆவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற போகின்றது. 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர் . ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாளை 5 ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு மாலை 5 மணி வரை தொடர உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வாக்களிக்கத் தயக்கம் காட்டுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை தெரிவித்துள்ளார் .

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டியது அவசியமாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் போன்று இதுவும் சிறுபான்மை மக்களைப் பொறுத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்பு இன்றி  பெரும்பான்மை மக்களின் 65  சத வீத வாக்களிப்பின்  மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் சிறுபான்மை மக்களின் ஆதரவின்றியும் பெரும்பான்மை மக்களின் ஒட்டுமொத்த ஆதரவின் மூலமும் ஜனாதிபதியை தெரிவுசெய்ய முடியும் என்ற கருத்தே மேலோங்கி உள்ளது. இவ்வாறான பின்னணியில் சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதன் மூலமே தேர்தலில் தங்கள் ஆர்வத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தக் கூடியதாக அமையும்.

இதேபோல் நாடெங்கும் பாதுகாப்பான வகையில் வாக்களிக்கக்கூடிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே கொரோனா அச்சம் தொடர்பில் மக்கள் கலவரம்  அடையாது நேர காலத்தோடு சென்று வாக்களிக்க முடியும்.

இதேவேளை குறிப்பாக யாழில் விசேட பாதுகாப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வட பகுதியில் இத்தடவை ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் களத்தில் குதித்துள்ளனர் .

கட்சிகளுக்கு அப்பால் கடுமையான விமர்சனங்களும் ஒரு தரப்பு மறுதரப்பின் மீது சேற்றை வாரி இறைக்கும் போக்குகளும் தாராளமாக இடம் பெற்றுள்ளன. இந்தப்பின்னணியில் மக்கள் யாருக்கு ஆதரவு என்ற எதிர்பார்ப்பு இலங்கையையும் தாண்டி சர்வதேச ரீதியில் பரவலாக காணப்படுகின்றது. எனவே வடக்கு, கிழக்கு மக்கள் சொல்லப் போகும் செய்தி என்ன ? என்பதை சகலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.

யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் பல்வேறு தேர்தல் நடந்து முடிந்த போதிலும் இந்த தேர்தல் சற்று வித்தியாசமான கோணத்திலேயே பார்க்கப்படுகின்றது. எனவே மக்கள் தயக்கம் இன்றி வாக்களிக்க முன்வரவேண்டும். வாக்களிப்பு மந்தமானால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மக்களே சுமக்க வேண்டும் என்பதே யதார்த்தம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்