(எம்.ஆர்.எம்.வஸீம்)

எட்டாவது பாராளுமன்றத்தின் இறுதி அரசியலமைப்பு பேரவை 82வது கூட்டம் நேற்றுமாலை அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்னாயக்க  ஆகியோரும் சிவில் சமூக உறுப்பினர்களான யாவிட் யூசுப், பேராசிரியர் நாகநாதன் செல்வகுமார், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆரம்பத்தில் அரசியலமைப்பின் உறுப்பினர்களை வரவேற்ற அரசியலமைப்புப் பேரவையின் தலைவரான முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, மிகவும் வேலைப்பழு நிறைந்த சூழ்நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இதன் பின்னர் பொதுச்சேவைகள் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இழப்பீடு தொடர்பான அலுவலகம் ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து அரசியலமைப்பு பேரவை கவனம் செலுத்தியிருந்ததுடன் இவற்றை நிரப்புவது குறித்த இறுதித்தீர்மானத்தை அடுத்த கூட்டத்தில் எடுப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டது.

அத்துடன் நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற காலாண்டு அறிக்கைகள் பற்றியும் அரசியலமைப்புப் பேரவை கவனம் செலுத்தியது. 

மேலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கலாநிதி தீபிகா உடுகம வழங்கியுள்ள இராஜினாமாக் கடிதம் குறித்து அவதானம் செலுத்தியிருந்த அரசியலமைப்புப் பேரவை, மனித உரிமைகள் ஆணைக்குழுவை உயர்ந்த இடத்துக்குக் கொண்டுசெல்ல அவர் வழங்கிய தலைமைத்துவத்தையும் பாராட்டியிருந்தது. மனித உரிமை ஆணைக்குழு உலகில் மிகவும் சிறந்த ஆணைக்குழுக்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் தீபிகா உடுகம அரசியலமைப்புப் பேரவைக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்.