(நா.தனுஜா)

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்திற்கு வருகைதரும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அதனை ஓர் சுற்றுலாப்பயண மையமாக மாற்றும் வகையில் விரிவான அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாக விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக சுமார் 50 சர்வதேச விமானங்கள் பயணித்ததாகவும், அதனூடாக சுமார் 2188 பயணிகள் பயனடைந்ததாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதன்படி கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இன்டிகோ எயார்லைன்ஸ் விமானசேவையின் ஊடாக மத்தள விமானநிலையத்தைப் பயன்படுத்தி சுமார் 20 சர்வதேச விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், அதனூடாக சுமார் 358 பயணிகள் நாடுகளுக்கிடையில் ஏற்றிச்செல்லப்பட்டனர்.  

அத்தோடு தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் வெளிநாட்டவர்களை அழைத்துச்செல்லல் மற்றும் விமான ஊழியர்கள் தரித்து நிற்றல் என்பவற்றுக்காக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம் தொடர்ந்தும் பாவனையிலேயே இருக்கின்றது.

இந்நிலையிலேயே மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தை ஒரு சுற்றுலாப்பயண மையமாக அபிவிருத்தி செய்யவிருப்பதாக விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் லெப்டினன் ஜெஹான் சுமனசேகர தெரிவித்திருக்கிறார். 

அதேபோன்று இந்த விமானநிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் சர்வதேச விமானப்போக்குவரத்துக்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.