(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத் தேர்தலொன்றுக்காக அண்மைக்கால வரலாற்றில் காணப்பட்ட மிகவும் நீண்ட தேர்தல் பிரசார காலப்பகுதி முடிவடைந்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்கு மத்தியில் இரண்டு தடவைகள் தேர்தல் பிற்போடப்பட்டமை இவ்வாறானதொரு நீண்ட பிரசார காலப்பகுதிக்கு காரணமானது என தெரிவித்துள்ள பெப்ரல் அமைப்பு நாடளாவிய ரீதியில் வாக்கெடுப்பு நிலையங்களில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 3,045 பேரையும், அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கு வகையில் 1,092 பேர் நடமாடும் கண்காணிப்பாளராக ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்ப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு மேலும் குறிப்பிடுகையில் ,

பாராளுமன்றத் தேர்தல்  கண்காணிப்பு
மிக நீண்ட பிரசார காலப்பகுதியைக் கொண்ட பாராளுமன்றத் தேர்தல் 12,984 வாக்கெடுப்பு நிலையங்களில் 16,263,885 வாக்காளர்களின் பங்குபற்றுதலுடன் நாளை மறுதினம் ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. இதில் போட்டியிடும் 7,452 வேட்பாளர்களில் தகுதியான 196 பேரை நேரடியாக தெரிவு செய்யும் பொறுப்பு வாக்காளர்களைச் சாரும். மக்களின் வரிப்பணத்திலிருந்து 1000 கோடி ரூபாவை செலவிட்டும், சுகாதார ரீதியான சவால்களுக்கு மத்தியிலும் நடத்தப்படுகின்ற இத்தேர்தலை அவதானிக்க பெப்ரல் சகல நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துள்ளது.

வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணி ஆரம்பிக்கப்பட்டதும் பெப்ரல் நிறுவனம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் கள இணைப்பாளர்கள் 50 பேரை நியமித்தது. பிரதேச செயலாளர் மட்டத்தில் 319 நீண்டகால அவதானிப்பாளர்களை பணியில் அமர்த்தியது. இவர்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் திகதி வரையும், வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னரான இரண்டு வார காலப்பகுதி வரையும் அவதானிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இதற்கு மேலதிகமாக தபால் வாக்கெடுப்பை அவதானிப்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்ட 1000 பேரும் அவர்களுடைய பிரதேசங்களில் தொடர்ச்சியாக அவதானிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கெடுப்பு திகதியில் 3,045 நிலையான அவதானிப்பாளர்கள் காலை 07 மணி தொடக்கம் மாலை 05 மணிவரை வாக்கெடுப்பு நிலையங்களினுள் அவதானிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவை தவிர, வாக்கெடுப்பு நிலையங்களை சுற்றிய பிரதேசங்களில் அவதானிப்புப் பணியை மேற்கொள்வதற்காக மேல்மாகாணத்தில் 45 நடமாடும் அவதானிப்பு வாகனங்களும், மத்திய மாகாணத்தில் 35 வாகனங்களும்,தென் மாகாணத்தில் 31 வாகனங்களும், வட மாகாணத்தில் 40 வாகனங்களும், கிழக்கு மாகாணத்தில் 21 வாகனங்களும், வடமேல் மாகாணத்தில் 27 வாகனங்களும், வட மத்திய மாகாணத்தில் 18 வாகனங்களும், ஊவா மாகாணத்தில் 19 வாகனங்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 24 வாகனங்களும் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்தமாக 260 வாகனங்களுக்காக 1,092 அவதானிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடந்த கால தேர்தல் அனுபவங்கள் மற்றும் இத்தேர்தலின் இது வரையான காலத்தைக் கவனத்தில் கொண்டு தேசிய மட்டத்தில் செயற்படுவதற்கான 13 குழுக்கள்  ஆகஸ்ட் 03 மற்றும் 04 ஆகிய இரண்டு தினங்களில், நாட்டின் தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் அவதானிப்பை மேற்கொள்வதற்காக அனுப்பப்படவுள்ளன. அதற்கு மேலதிகமாக வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்குப் பெட்டிகளைப் பொறுப்பேற்கும் பணிகளை அவதானிப்பதற்காக 25 பேரையும், 160 தேர்தல் தொகுதிகளுக்கும் தலா ஒருவர் வீதம் 160 பேரையும், முடிவுகளை அறிவிக்கும் நிலையங்களில் 25 பேரையும் அவதானிப்புப் பணியில் ஈடுபடுத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.

பொது மக்களின் தீர்மானிக்கும் சுதந்திரம்
இம்முறை தேர்தலில் மௌன காலம், அதாவது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்குத் தடை செய்யப்பட்ட காலம் ஆகஸ்ட் இரண்டாம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் ஆரம்பிக்கின்றது. ஆகவே, தற்போது மௌன காலம் தொடங்கியிருப்பதுடன் இது வாக்கெடுப்பு நிறைவு பெறும் வரை நடைமுறையில் இருக்கும். இக்காலப்பகுதியில் சகலவிதமான தேர்தல் பிரசாரங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மௌன காலப்பகுதி  ஒன்றை அறிவிப்பது நோக்கம் வாக்காளர்கள் அழுத்தங்கள் இன்றி சுயாதீனமாக தமது முடிவை எடுக்கும் பொருட்டு சிந்திக்க தேவையான கால எல்லையை வழங்குவதே. இக்காலப்பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென நாம் சகல வேட்பாளர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

தொலைபேசிகள் ஊடான  தேர்தல் பிரசாரம்
அனேகமான வேட்பாளர்கள் கையடக்க மற்றும் நிலையான தொலைபேசிகளைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய தொலைபேசி அழைப்புகளும், குறுந் தகவல்களும் தமக்கு பெறும் தொல்லையாக மாறிவிட்டதாக ஒரு சில வாக்காளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அதேபோல், கையடக்க  தொலைபேசிகளில் கிடைக்கின்ற ஒருசில வேட்பாளர்களின் குறுந்தகவல்களில் தொலைபேசி இலக்கத்திற்குப் பதிலாக வேட்பாளர்களின் பெயர் ஊக்குவிக்கப்படும் போக்கு காணப்படுவதால் அதனை பெரும்பாலும் தொலைபேசி கம்பனிகளுடன் இணைந்து மேற்கொள்ளும் பிரசார உத்தியாக கருதவேண்டியுள்ளது. தொலைபேசிக் கம்பனிகளுக்கு வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமையை நாம் ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் பாவனையாளர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சுகாதார நடைமுறை
கடந்த இரண்டு மாதங்களாக நாம், கொவிட் 19 உடன் சேர்ந்து வாழப் பழகி வருகின்றோம். ஆகவே, சுகாதாரத்தைப் பேணியவாறு சந்தை, வழிபாட்டு இடங்கள் மற்றும் பிரதேசத்தில் காணப்படும் பொதுவிடங்களுக்கு எமது தேவைகள் நிமித்தம் சென்றுள்ளோம். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பியுள்ளோம். ஆகஸ்ட் 05 ஆம் திகதியும் அதே பாணியில் நாம் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் அதில் ஒரு வேறுபாடு உண்டு. அது யாதெனில், வாக்களிப்பு நிலையங்கள் ஏனைய இடங்களைப் பார்க்கிலும் சுகாதார நடைமுறைகள் பேணப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் இணைந்து இந்தப் பணியை ஆற்றியுள்ளனர். தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் ஆணைக்குழுவினால் 15இற்கும் மேற்பட்ட மாதிரி வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு அதனூடாக பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பெப்ரல்நிறுவனம் மேற்கொண்ட அவதானிப்புகளுக்கமைய 99 சதவீதம் சுகாதார நடைமுறைகள் பேணப்படும் வகையில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதை காணமுடிந்தது. ஆகவே, அச்சமின்றி உங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

தேர்தல் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள்
இம்முறை தேர்தலில் ஒப்பீட்டு ரீதியாக தேர்தலுடன் சம்பந்தப்பட்ட வன்முறைச் செயல்கள் குறைவாக உள்ளதை நாம் அவதானித்துள்ளோம். அதுபோல், அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதற்கு அனுமதியளித்த அரச உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் எம்மால் அவதானிக்க முடிந்ததால், அத்தகைய உத்தியோகத்தர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் அரசியலமைப்பில் சொல்லப்ட்டுள்ளவாறு அதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவால் சட்ட நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்டுவதற்கு அவசியமான மேலதிக தகவல்களை சமர்ப்பிக்க நாம் தயாராக உள்ளோம். அதாவது அரச சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைச் செய்யாத (சொத்து விவரத்தை அறிவிக்காத) வேட்பாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்க  தயாராக உள்ளோம்.

பொருத்தமான பிரதிநிதிகளை தெரிவு செய்தல்
பாராளுமன்றம் எனப்படுவது நாட்டின் சட்ட மன்றம். அதாவது, சட்டங்களை இயற்றுமிடம். 2010 பாராளுமன்றத் தேர்தலில் நாம், நாட்டின் அடிப்படை சட்டமான அரசியலமைப்பு என்றால் என்ன என்பதை அறியாதவர்களைக் கூட பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்துள்ளோம். ஆகவே இம்முறை, பாராளுமன்றத்திற்குரிய பொறுப்பினை நிறைவேற்றக்கூடிய அதாவது சட்டம் இயற்றுதல், கொள்கை வகுப்பு, பொது மக்களின் பணத்தை முகாமைத்துவம் செய்யக்கூடிய அறிவு ஜீவிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும்.

வாக்களிக்குச் செல்லுதல்
வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணியுமாறும், கருப்பு அல்லது நீல நிற போல்பொயின்ற் பேனை ஒன்றை எடுத்துச் செல்லுமாறும், செல்லுபடியாகும் அடையாள அட்டை மற்றும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை தவிர்ந்த வேறு பொருட்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோல், நீங்கள் கொண்டு செல்லும் பேனை அல்லது முகக்கவசத்தில் எத்தகைய சின்னங்கள் அல்லது  வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்கான இலக்கங்கள் அல்லது குறியீடுகள் இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அவ்வாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நீங்கள், தேர்தல் தினத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதற்கான குற்றத்தின் பிரகாரம் தண்டிக்கப்படுவீர்கள். அதேபோல், தேர்தல் தினத்தில் வாக்கெடுப்புக்கு இடையூறாக அமைகின்ற மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதைப் பலவீனப்படுத்தும் வகையிலான வதந்திகள் பரப்பப்பட வாய்ப்புள்ளதால் அவற்றுக்கு ஏமாற வேண்டாம்.