(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்கள் தமது வாக்குரிமையை புறக்கணித்தால் அல்லது உபயோகிக்க தவறினால் மீண்டும் ஏகாதிபத்திய யுகத்திற்கே செல்ல வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , நாட்டு பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே மீள கட்டியெழுப்ப முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இன்று நாம் அனைவரும் எதிர்காலம் பற்றிய பயத்தில் இருக்கின்றோம். எதிர்காலம் பற்றி எதிர்பார்ப்பின்றி இருக்கின்றோம். இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை அற்றுப் போயுள்ளது. கொவி;ட்-19 க்கு பின்னர் எமக்கு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. தொழில் வாய்ப்புக்கள் அற்றுப் போயுள்ளன. இவ்வாறான நிலைமைக்குள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

எமது நாட்டு பொருளாதாரத்தில் அந்நிய செலாவணி முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் இவ்வருடம் ஒரு சதமேனும் அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. மிகவும் நெருக்கடியான நிலைமையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சிறு வியாபாரிகளானாலும் பெரியவர்களாயினும் யாரிடம் தற்போது பணப்பறிமாற்றம் இல்லை.

கோத்தாபய ராஜபக்ஷ அனைத்தையும் சரியாக்குவார் என்று மக்கள் நம்பினர். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் எதுவும் நிறைவேறவில்லை. அவற்றை செய்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வேண்டும் என்று கோருகின்றனர். தொழிற்சாலையொன்றை திறப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டுமா ?

ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். அதற்கான பலம் எம்மிடம் மாத்திரமே இருக்கிறது. எனவே நாட்டு மக்கள் தமது வாக்குரிமையை உபயோகிக்க வேண்டும். அது அனைவரதும் அடிப்படை உரிமையாகும். நாட்டின் எதிர்காலத்தை மாத்திரமல்ல. அனைவரதும் எதிர்காலத்தையும் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கின்றன.

வாக்குரிமையை உபயோகிக்க தவறினால் அல்லது புறக்கணித்தால் ஏகாதிபத்திய யுகத்திற்கே மீண்டும் செல்ல வேண்டியேற்படும். எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் போது ஐக்கிய தேசிய கட்சியே உங்கள் கண் முன் தோன்றும். எனவே நாட்டை கட்டியெழுப்ப எம்மை ஆதரியுங்கள் என்றார்.