நேர்காணல் ஆர்.ராம்

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான அடிப்படை கோரிக்கைகளாக உள்ள கோட்பாடுகள் எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் எந்தச் சந்தர்ப்பதிலும் இடமில்லை. தமிழ் மக்களின் இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு மீளப்பெறமுடியாத வகையில் சமஷ்டி முறைமை யிலான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். சமஷ்டி என்பது புரட்சிகரமானதோ பயங்கரமானதோ அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- மிகவும் மூத்த அரசியல்வாதியாகவிருக்கும் தாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டுமெனத் தீர்மானித்தமைக்கான காரணம் என்ன?

பதில்:- ஆரம்பத்தில் இந்தத் தேர்தலில் போட்யிடுவதென்றே முடிவெடுத்திருந்தேன். ஆனால், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் நான் பாராளுமன்றில் இருக்க வேண்டியது அவசியமென வலியுறுத்தினார்கள்.  1977ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசியல் தீர்வு சம்பந்தமாக நடைபெற்ற பல கருமங்களில் நானும் பங்காளியாக இருந்திருக்கின்றேன். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அண்ணன் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோருடன் இணைந்தும் செயற்பட்டுள்ளேன்.அதனடிப்படையில் எனது பிரசன்னம் தற்போது அவசியம் என்று கருதி போட்டியிடுமாறும் அவர்கள் கோரினார்கள். 

அவர்களின் கோரிக்கை தொடர்பில் நான் பரிசீலனை செய்தேன். என்னுடைய பிரசன்னம் இல்லாத நிலையில் தவறுகள் ஏற்பட்டால் அவை எனக்குப் பெரும் மனக்கவலையை ஏற்படுத்தும் என்று கருதினேன். அதன்பிரகாரம், அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதில் எனது பிரசன்னம் அவசியம் என்ற முடிவுக்கு வந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு சம்மதித்திருந்தேன். 

கேள்வி:- தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 'இணைந்த வடக்கு, கிழக்கில் பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளீர்களே அது தற்போதிருக்கும் அரசியல் சூழலில் நடைமுறைச்சாத்தியமாகுமெனக் கருதுகின்றீர்களா? 

பதில்:- நடைமுறைச்சாத்தியமான விடயங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூற வேண்டிய அவசியமில்லை. எமது அடிப்படைக் கோட்பாடுகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூற வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள எந்தவொரு விடயங்களும் புரட்சிகரமானவை அல்ல.  மக்கள் சமத்துவமாகவும், நாகரிகமாக வாழ்வதற்குமான கோரிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. 

அனைத்துப்பிரச்சினைகளுக்கும் அரசியல் சாசன ரீதியாக தீர்வு வழங்கப்பட வேண்டும். அதாவது, அந்த தீர்வு ஒரேமொழியைப் பேசுகின்ற மக்கள் ஒரே அலகாக வாழுவதற்கும், ஆட்சி அதிகாரங்கள், மீளப்பெறாத வகையிலும் நிலைத்து நிற்கக் கூடிய வகையிலும் அளிக்கப்பட வேண்டும். இவ்விதமான கருமங்கள் நடைமுறைச்சாத்தியமாக்கப்பட வேண்டுமென்றால் சமஷ்டி முறைமையின் அடிப்படையிலேயே அவை சாத்தியமாகும். இந்நிலையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகின்ற போது சில மாற்றங்கள் நிகழலாம். ஆனால் அடிப்படைக் கோட்பாட்டை மாற்றமுடியாது. சமஷ்டி புரட்சிகர கோரிக்கையல்ல.

கேள்வி:- தேர்தலின் பின்னர் மத்திய அரசாங்கத்தில் கூட்டமைப்பின் வகிபாகம் எவ்வாறு இருக்கப்போகின்றது?

பதில்:- தேர்தலின் பின்னர் அரசாங்கமொன்று அமைக்கப்படும். அந்த அரசாங்கம் எவ்விதமான கொள்கையைக் கொண்டிருக்கின்றது, யார் அதிகாரத்தில் இருக்கப்போகின்றார்கள் என்பது பற்றி எமக்குத் தெரியாது. ஆகவே, எமது வகிபாகத்தினை இப்போதே கூறிவிடமுடியாது. ஆனால் நாம் யாருடனும் பகைமையை வளர்க்க மாட்டோம். தேவையற்ற எதிர்ப்புக்களை வளர்க்க மாட்டோம். அனைவரையும் ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமாக எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க கூடிய வகையில் செயற்படுவோம். எந்தக்கட்சி, ஆட்சி அமைத்தாலும் இதுவே எமது முதற்கட்ட செயற்பாடாக இருக்கும். இதற்கு மேல் தற்போது வேறுவிடயங்களை கூற முடியாது. 

கேள்வி:- மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த ஆட்சியில் 18சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி தோல்வி கண்டிருக்கும் நிலையில் அவர் தலைமையிலான அரசுடன் பேசுவது சாத்தியமாகுமெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- நீங்கள் குறிப்பிட்டது போன்று மஹிந்த ராஜபக்ஷவுடன் நாம் பேச்சுவார்த்தைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்திருந்தோம். அவர் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுடன் நேர்மையாகச் செயற்பாட்டார் என்று கூறமுடியாது. நாம் இறுதிவரையில் விசுவாசமாக செயற்பட்டிருக்கின்றோம். அவ்வாறான நிலையில் பேச்சுவார்த்தைக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் நடந்து கொண்ட விதம் எமக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. 

பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து அதில் பங்கேற்றுமாறு அழைப்பு விடுத்தார்கள். அச்சமயத்தில், சிக்கலான விடயங்களுக்கு நானும், நீங்களும்(மஹிந்தவும்) பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வை எடுக்க முடியுமே தவிர பாராளுமன்றக் குழுவில் அதனை எட்டமுடியும் என்று நான் நம்பவில்லை என்று கூறியதால் அந்தப்பேச்சுவார்த்தை தொடரவில்லை. 

இந்நிலையில் கடந்த தடவை அவர்கள் தவறிழைத்தார்கள் என்பதற்காக அவ்விதமாக தொடர்ந்தும் செயற்படுவார்கள் என்று கூறுவதற்கில்லை. அவர்கள் ஆட்சிக்கு வருவார்களாக இருந்தால் ‘புதிய ஆரம்பத்தின்’ மூலம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம். எமது அடிப்படைக் கோட்பாடுகளில் பற்றுறுதியுடன் நாம் அந்த முயற்சிகளில் ஈடுபடுவோம். அதுவே அரசியல் யதார்த்தமுமாகவுள்ளது. 

கேள்வி:- சமஷ்டி தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் கூறிவரும் நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வினைக் காணமுடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா?

பதில்:- நம்பிக்கை இன்றி எந்தக் கருமங்களையும் முன்னெடுக்க முடியாது. அவ்வாறிருக்க, இந்த நாட்டில் சமஷ்டிக் கோரிக்கையை எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவே முதலில் முன்வைத்தார். அதற்கு அடுத்தபடியாக கண்டியத் தலைவர்கள் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார்கள். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் சமஷ்டி அடிப்படையிலான அலகு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கண்டியத் தலைவர்களே  முன்மொழித்திருக்கின்றார்கள். 

துரதிஷ்டவசமாக தமிழ்த் தலைவர்கள் அந்தக் கோரிக்கையை ஆதரித்திருக்கவில்லை. உலகத்தில் சுபீட்சமாக இருக்கும் நாடுகளில் சமஷ்டி ஆட்சிமுறைமையே உள்ளது. சமஷ்டி என்பது பயங்கரமான விடயமாக கொள்ளப்பட வேண்டியதில்லை. அவ்வாறிருக்கையில் தென்னிலங்கைத் தலைவர்கள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சமஷ்டி என்ற சொல்லை ஆபத்தான சொல்லாக பரப்புரை செய்து சிந்தனையை ஏற்படுத்தி விட்டார்கள். பெரும்பான்மை மக்களுக்கு தென்னிலங்கைத் தலைவர்கள் உண்மையைக் கூற வேண்டும். அதில் பூதாகாரமாக ஒன்றுமில்லை என்பதை புரிய வைக்க வேண்டியது அவசியமாகின்றது. 

கேள்வி:- கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கிருந்த துருப்புச் சீட்டுக்களை சரியாக யன்படுத்தாது ஆட்சியாளர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக ஏனைய தமிழ்த் தரப்புக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஏனைய தமிழ்த் தரப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விமர்சிப்பதை தவிரவும் இற்றைவரையில் ஆக்கபூர்வமாக எந்த பங்களிப்பையும் செய்யவில்லை.  கூட்டமைப்பின் அரசியல் பயணம் மிகவும் நீண்டது. நாங்கள் தேர்தலுக்காக இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல. தந்தை செல்வாவினால் 1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். எமது கொள்கைகளை 1956ஆம் ஆண்டு முதல் மக்கள் முன்னிலையில் வைத்து அதற்கான அங்கீகாரத்தினைப் பெற்று வந்திருக்கின்றோம். 

அவ்வாறிருக்க, 2015ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஆட்சியில் இருந்தவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதான செயற்பாடுகளை அதீதமாக முன்னெடுத்தமையால் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் உருவான ஆட்சி ஜனநாயகப் பண்புகளை மதித்து, எமது விடங்களையும் கருத்திற் கொண்டு முன்னெடுக்க ஆரம்பித்தமையால் அதற்கு எமது ஒத்துழைப்புக்களை வழங்கினோம். துரதிஷ்டவசமாக அரசியல் குழப்பம் ஏற்பட்டமையால் அந்த செயற்பாடுகள் முற்றுப்பெறவில்லை. அவ்வளவு தான். மற்றவர்களை விமர்சித்து அரசியல் செய்வில்லை. எமது மக்களின் அபிலாஷைகளை முன்னிலைப்படுத்தி கொள்கையின் அடிப்படையில் நீண்ட பயணத்தினை தொடர்ந்து கொண்டு அரசியல் தீர்வொன்றைப் பெறக்கூடிய, பேரம்பேசக்கூடிய நிலையில் இருக்கின்றோம். 

கேள்வி:- நீங்கள் கூறுகின்ற புதிய அரசியல் சாசன விடயங்களும், ராஜபக்ஷவினர் கூறுகின்ற விடயங்களும் நேரெதிராக இருக்கையில் அவர்களுடைய ஆட்சி அமையும் பட்சத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்காக உங்களுடைய தரப்பு எவ்வாறு ஒத்துழைப்புக்களை வழங்குவது சாத்தியமாகும்?

பதில்:- ஆட்சி அமைப்பவர்கள் அரசியல் சாசன திருத்தங்களை அல்லது புதிய அரசியல் சானத்தினை உருவாக்க முனைகின்றபோது மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமாகின்றது. இந்திய ,இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர் அரசியல் தீர்வு விடயத்தில் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையின் ஆட்சியாளர்கள், இந்தியாவுக்கு, சர்வதேசத்திற்கு, ஐக்கிய நாடுகளுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள். 

அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்ததந்த பிராந்தியங்களில் வாழ்கின்றவர்கள் தமது விடயங்களை கையாள்வதற்கான அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டு பகிரங்கமாகவும் கூறியிருக்கின்றார். அவ்வாறான நிலையில் ராஜபக்ஷவினருடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் காணப்படுகின்றபோதும் அரசியல் தீர்வுக்காக சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் நாங்கள் முயற்சிகளை எடுப்போம். முயற்சிகளை முன்னெடுக்கின்றபோது வெற்றிபெறுவோம், வெற்றிபெறச் செய்வோம் என்ற அடிப்படையில் நகர்வோம்.

கேள்வி:- மத்திய அரசாங்கத்தில் பங்கேற்பது தொடர்பில் கொள்கை ரீதியான முடிவினை மீளாய்வு செய்யப்பட வேண்டுமென கூட்டமைப்பின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- எமது கட்சி ஜனநாயகப் பண்புகள் நிறைந்ததொரு அரசியல் கட்டமைப்பாகும். ஆகவே கருத்தியல் ரீதியான சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. மத்திய அரசாங்கத்தில் பங்கேற்று அமைச்சுப்பதவியைப் பெறுவது என்ற முடிவினை தமிழரசுக்கட்சி எடுக்கவில்லை. அமைச்சுப்பதவியைப் பெறுவதாக இருந்திருந்தால் நாம் கடந்த அரசுகளில் பல்வேறு முக்கிய அமைச்சுக்களைப் பெற்றிருக்க முடியும். 

அது எமது இலக்கு அல்ல. எமது மக்களின் இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு சர்வதேச ரீதியாக அவர்களுக்கு உள்ள உரிமைகளின் அடிப்படையில் மீளப்பெறமுடியாத நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த இலக்கை வேறு எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. அந்த இலக்கினை அடைகின்றபோது தேவையேற்படின் ஏனைய விடயங்களையும் நாங்கள் பரிசீலிப்போம். எமது கட்சியின் செயற்குழு, மத்தியகுழு, பொதுச்சபை உள்ளிட்டவையை முறையாகக் கூட்டி அது தொடர்பில் தீர்மானங்களை எடுப்போம். தற்போது வரையில் அவ்விதமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்விதமாக யாரும் கூறினால் அது தவறாகும். 

கேள்வி:- தற்போதைய பூகோளச் சூழலில் இந்தியா உட்பட சர்வதேசம் தமிழினப் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு தொடர்ந்தும் இருக்கின்றதா? 

பதில்:- ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியடைந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி, தனது வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை முக்கிய செய்தியுடன் இலங்கைக்கு அனுப்பியிருந்தார். அந்த முக்கிய செய்தியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். 

அதன் பின்னர், கோத்தாபயவும், மஹிந்தவும் இந்தியாவுக்குச் சென்றபோதும் பாரதப்பிரதமர் நேரடியாக அதே கருத்தினைக் கூறியிருக்கின்றார். அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச கூட்டாண்மை நாடுகளுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே அடுத்த ஆட்சியாளர்கள் அந்த விடயங்களை நடைமுறைப்படுத்தாது இருப்பார்களாயின் அச்சமயத்தில் அவ்விடயங்களை எவ்விதமாக நடைமுறைச்சாத்தியமாக்குவது என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவெடுத்து செயற்படுவோம். 

கேள்வி:- விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகிய தரப்புக்கள் களமிறங்கியுள்ளமை கூட்டமைப்புக்கு பெரும் சவாலை தேர்தல் களத்தில் ஏற்படுத்தியுள்ளதெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- அவ்வாறு நான் கருவில்லை. தனிநபர்களைப் பற்றி கருத்துக்களை வெளியிடுவது எனது பழக்கமும் அல்ல. எனினும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளை நீண்டகாலமாக பின்பற்றுகின்ற கட்சியாக இருக்கும் எம்மையும் அவர்களையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. 

கேள்வி:- உங்களுடைய மாவட்டத்தில் விக்கினேஸ்வரன் அணியில் களமிறங்கியுள்ள முன்னாள் போராளியான ஆத்மலிங்கம் ரவீந்திரா(ரூபன்) திருமலைக்கான பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தியமை, உங்களை வெற்றிபெறச் செய்தமை உட்பட கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறு வருகின்ற விடயங்கள் உண்மையா?

பதில்:- ரூபனை எனக்கு நன்கு தெரியும். நான் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளேன். என்னை மக்களே தெரிவு செய்தார்கள். ஜனநாயகம் மக்களுக்கு உரித்தானது. ஜனநாயகம் தனிநபருக்கு உரித்தானது அல்ல. நான் திருமலை மக்களால் தெரிவு செய்யப்பட்டேன் என்பது தான் யதார்த்தம். இம்முறையும் திருமலை மக்கள் அதனை நிரூபித்துக்கட்டுவார்கள்.

படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்