(நேர்காணல்:- ராம்)

நாம் கூட்டணியாகவும், தனித்துவமாகவும் தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றோம். சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் எம்முடைய கூட்டணியிலேயே உள்ளன. அந்த அடிப்படையில் நாம் பெருவாரியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அதிகாரத்துக்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்வோம். அது புது யுகமாற்றத்திற்கான அங்கீகாரமாகும்  என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

அந்தச் செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- பலம்மிக்க தேசிய கட்சிகளுடன் கூட்டணியமைப்பதை வழமையாகக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கவிலிருந்து பிளவுபட்டிருக்கும் சஜித் தரப்புடன் இணைந்து கொண்டது ஏன்?

பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தினுடைய பலவீனம் தொடர்ச்சியாக உணரப்பட்டு வருவதன் காரணமாக உள்ளக மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற பாரிய அழுத்தம் உருவானது. ஐ.தே.க. தலைமையின் கீழ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்ற கையறுநிலையை பங்காளிக் கட்சிகளும் உணர்ந்தன. அதுமட்டுமன்றி ஐ.தே.கவினுள் காணப்பட்ட முரண்பாடுகள், கேள்விக்குறியான உட்கட்சி ஜனநாயகம் என்பனவற்றின் பக்கவிளைவுகளையும் நாம் அனுபவிக்க நேர்ந்தது. ஐ.தே.கவில் மாற்றுத்தலைமையொன்று உருவாகாதவிடத்து தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே நீடிக்கும் பேராபத்தும் உணரப்பட்டது.

இவற்றுக்கெல்லாம் அப்பால் ஐ.தே.கவின் ஆதரவுத்தளத்தில் பெரும்பான்மையானவர்கள் சஜித்தின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், சுயலாப அரசுக்காக செயற்படும் ஒரு கும்பலின் கைதியாக ஐ.தே.கவின் தலைமைத்துவம் இருந்து வந்தது.

அதுமட்டுமன்றி சிங்கள பெரும்பான்மையிடத்தில் ஐ.தே.கவுக்கு இருந்த ஆதரவுத்தளத்தை வீழ்ச்சியடையாது பாதுகாக்க வேண்டியது முக்கியமானது என்பதை பிரயோக அரசியலின் யதார்த்தத்தைப் புரிந்தவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அந்தவகையிலேயே ஏற்படப்போகும் யுகமாற்றத்தில் இணைந்து கொண்டோம்.

கேள்வி:- இளந்தலைமையினரிடம் தலைமைத்துவத்தைக் கையளிக்கும் விடயத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்:- நாம் பங்கேற்றுள்ள கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அடுத்த தலைலைமுறைக்கான தலைமைத்துவத்தை வழங்கும் பொறுப்பைப் பெற்றுள்ளார். இந்த நிலைமையானது எமது கூட்டணிக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதற்கு விதிவிலக்கல்ல.

கேள்வி:- புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் உருவாக்கப்பட்ட, நல்லாட்சியை இலக்காகக் கொண்ட கூட்டரசின் செயற்றிறன் வீச்சு தனிக்கட்சி ஆட்சியை விடவும் குறைவாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- இத்தகைய விமர்சனங்கள் யதார்த்தத்தை உள்வாங்கியதாக இல்லை. எதிரிகளின் விமர்சனம் எவ்வாறாக இருந்தாலும் கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின்போதும் எதிர்பாராத சவால்களின்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்திரமான தலைமைத்துவத்தை வழங்கியிருக்கின்றது. முஸ்லிம் மக்களுக்கான அனைத்துப் பாராளுன்ற உறுப்பினர்களையும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைத்துச் செயற்பட்டிருக்கின்றது. கணிசமான அபிவிருத்திகளையும் மேற்கொண்டிருக்கின்றது. அதற்கு பெரிய பட்டியலொன்றையே இடமுடியும்.

மு.கா. அரசுடன் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, முஸ்லிம் மக்களின் ஆளும் கட்சி என்ற வகிபாகத்தை முழுமையாக ஏற்றுச் செயற்பட்டுள்ளது. தற்போதும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

கேள்வி:- கடந்த ஏழு மாதங்களாக எதிர்க்கட்சி வகிபாகத்தைக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றது?

பதில்:- பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலம் இருந்தபோதும் அரசியல் நாகரிகத்தின்பால் ஜனாதிபதித்  தேர்தல் பின்னடைவுகளால் ஆட்சி அதிகாரத்தை நாம் எதிர்த்தரப்பாக எண்ணிக்கையில் குறைவாக இருந்தவர்களிடத்தில் வழங்கினோம். ஏற்கனவே பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் தற்போதைய ஆட்சியாளர்களே ஜனநாயகத்துக்கு முரணாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தார்கள்.

ஆகவே, அவ்விதமான பிற்போக்குத்தனமான, அடாவடித்தனமான சூழல் மீண்டும் உருவாகக் கூடாது என்ற தூரநோக்கின் காரணமாகவே நாம் ஆட்சி அதிகாரங்களைக் கையளித்தோம். அத்துடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டுதான் பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமும் எமக்குக் கிடையாது.

மேலும் இந்த ஏழு மாத காலத்தில் நாம் பாராளுமன்ற அதிகாரங்களைக் கைப்பற்றவல்ல பலமான அணியை உருவாக்கி இருக்கின்றோம். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் எமது அணிக்கு எதிராகப்  பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

நான் உள்ளிட்ட சிறுபான்மைத் தலைவர்கள் இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்குத் தக்க பதிலடியை மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்.

கேள்வி:- ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதோடு அதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆணையைக் கோரி வரும் நிலையில் முஸ்லிகளுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் உங்களின் அணுகுமுறைகள் எவ்வாறிருக்கப் போகின்றன?

பதில்:- முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவே செயற்பட்டு வருகின்றது. அதற்காக உயிர்த்தியாகம்கூட செய்திருக்கின்றது. அவ்வாறிருக்கையில் மாறிவரும் சூழலில் எமது உரிமைகளுக்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்தாது தற்காலத்துக்கு ஏற்றவகையில் நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு சாணக்கியமாக நகர வேண்டியுள்ளது. அதற்கான முயற்சிகளில் எமது வகிபாகம் தொடர்ந்தும் இருக்கும்.

மேலும் அரசியலமைப்பு திருத்தங்கள், புதிய சட்ட ஏற்பாடுகள் போன்றவற்றில் எமக்குப் பாதகமாக வருகின்ற விடயங்களைத் தலையீடுகளைச் செய்து தடுத்துள்ளோம்.

நடைமுறையில் இருக்கின்ற விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் முறைமையில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மட்டுமல்ல அறுதிப்பெரும்பான்மையைக்கூட அவர்களால் பெற முடியாது. 

சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தவல்ல யாப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்காக அபிரிமிதமான ஆசனக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுமட்டுமன்றி ஜனநாயகத்தைத் தொடர்ச்சியாக மறுதலித்துக் கொண்டு செல்லும் ஆட்சியாளர்களின் போக்கை மக்கள் உணராமலுமில்லை.

கேள்வி:- தற்போதைய அரசியல் சூழமைவுகளில் பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- பாராளுமன்ற அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற பெரும் நம்பிக்கை எமக்குள்ளது. நாம் கூட்டணியாகவும், தனித்துவமாகவும் தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றோம். சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் எம்முடைய கூட்டணியிலேயே உள்ளன. அந்த அடிப்படையில் நாம் பெருவாரியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அதிகாரத்துக்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்வோம். அதனை நேர்மறையாகப் பார்க்க வேண்டியதில்லை.

கேள்வி:- முஸ்லிம்களின் இதயமென்று உணரப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில் வழமைக்கு மாறாக வேட்பாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்தமைக்கான காரணம் என்ன?

பதில்:- அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கு அதிகளவான பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது வெறுமனே அடையாளம் சார்ந்த விடயமொன்று அல்ல. அம்பாறையில் அதிகளவு பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்வதென்பது தேசிய மட்டத்திலும் தாக்கம் செலுத்துகின்ற விடயமாகவுள்ளது.

தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக நேசக்கட்சிகள் சிலவற்றுடன் அம்பாறையில் கூட்டாக போட்டியிடுவது பற்றி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். இருப்பினும் ஒருசில சுயநலன் மிக்கவர்கள் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவர்கள் தனித்துப் போட்டியிடவே தீர்மானித்தார்கள். இதனால் சில சவாலான நிலைமைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

எனினும், தற்போது அம்பாறையில் மு.காவுக்கு எதிராக உள்ள அணியில் உள்ளவர்களே தனிமேடைகளை அமைத்துத் தமது தலைமை தவறுவிட்டுள்ளதால் சாத்தியப்பாடு உள்ள அணியை ஆதரித்து பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை பகிரங்கமாகவே எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தேவையற்ற பிளவுகளுக்குள்ளும் நாம் அம்பாறை மாவட்டத்தை வெற்றிகொள்வோம்.

கேள்வி:- இந்தப் பாராளுமன்றத் தேர்தலை கிழக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முன்னாயர்த்தமானதாகப் பயன்படுத்த வேண்டுமென நீங்கள் கூறியதற்கான காரணம் என்ன?

பதில்:- இதுவொரு, பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் இந்தத் தேர்தலில் கிடைக்கும் பெறுபேறுகளைப்  பயன்படுத்தி கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றுவதற்கான வியூகத்தை அமைக்க முடியும். கடந்த தடவை கிழக்கு மாகாண சபையில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டாட்சியை முன்னெடுத்திருந்தோம்.

அவ்வாறிருக்கையில் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட இணக்கப்பாட்டை எட்டக்கூடிய தரப்புக்களை ஒருங்கிணைத்து கிழக்கு மாகாண சபை ஆட்சியை கைப்பற்றுவதற்கான வெற்றிகரமான திட்டத்தினை முன்னெடுக்க முடியும்.

அவ்வாறானதொரு ஒருங்கிணைவின் ஊடாகவே இனவாத, கடும்போக்கு ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து கிழக்கு மாகாண சபையைக் காப்பாற்ற முடியும். அதன் மூலமாகவே இரு சகோதர சிறுபான்மை இனங்களின் இருப்பை உறுதிப்படுத்த முடியும் என்பது உணரப்பட்டுள்ளது.

கேள்வி:- கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்புடன் கூட்டாட்சியை அமைத்துக்கொண்டதன் பின்னரான சூழலில் தங்களது தரப்பு வெறும் ஏழு ஆசனங்களை வைத்து முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரத்தை சாணக்கியமாகக் கைப்பற்றி ஆட்டிவிக்கின்றோம் என்ற தொனிப்பட அரசியல் முரண்நகையான கருத்துக்களை வெளியிட்டிருந்ததே?

பதில்:- பக்குவமற்ற, முதிர்ச்சியில்லாத கட்சியின் இரண்டாம் மட்டத்தலைமைகள் உளறியதை மையப்படுத்தி மு.காவின் நிலைப்பாடு இவ்வாறுதான் இருக்கின்றது என்று தீர்மானித்துவிட முடியாது. எமது கட்சியில் உள்ளவர்கள் குறுநிலை அரசியலுக்காக இவ்விதமான பேச்சுகளை மேடைகளில் பேசுகின்றார்கள். அதுபற்றி அதிகமாக அலட்டிக்கொள்ள வேண்டிதில்லை. தேசிய மட்டத் தலைமைகள் மத்தியில் சரியான பார்வையும், புரிதலும் உள்ளது.

கேள்வி:- இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 33 வருடங்கள் நிறைவுக்கு வந்துள்ள போதும், அதில் முன்மொழியப்பட்ட இணைந்த வடகிழக்கு விடயத்தில் தீர்க்கமான முடிவொன்றுக்கு கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் வரமுடியாதிருப்பதற்கான காரணம் என்ன? அல்லது இந்த விடயத்தை அவ்வப்போது பேசுபொருளாக்கி அரசியல் இலாபம் அடையப்படுகின்றதா?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் அவ்வப்போதிருக்கின்ற சாத்தியமான நிலைமைகளை மையப்படுத்திய நகர்வுகளின் ஊடாகத்தான் எமது விடயங்களைச் சாதிக்கின்ற செயற்பாட்டில் ஈடுபட முடியும். கோட்பாட்டு ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படை அபிலாஷைகளுக்கு எதிராக நின்று அரசியல் செய்வதை முஸ்லிம் காங்கிரஸ் எப்போதுமே தவிர்த்தே வந்திருக்கின்றது.

வடகிழக்கு இணைப்பு என்ற விடயம் பேசுபொருளாகின்றபோது, முஸ்லிம்களுக்கான உத்தரவாதங்கள் என்ன என்பது பற்றி தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள சக்திகள் சரியாகப் புரிந்து கொண்டு காப்பீடுகள் பற்றிய கருத்தாடல்கள் தற்போது அருகிப்போய்விட்டன.

எனினும், வடக்கு, கிழக்கு என்பது வெறுமனே கோசமாகத் தொடராது அது தொடர்பில் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ்த் தேசிய மேல்மட்டத் தலைமைகள் இவ்விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். நாம் பேசுவதற்கு தயாராகவே உள்ளோம். ஆனால், தென்னிலங்கை தரப்புக்கள் இதனை இனவாதமாக உருவகித்து நலன்பெறக் காத்திருக்கின்றார்கள். அதனையும் பக்குவமாக கையாள வேண்டியுள்ளது.

கேள்வி:- தற்போதைய ஆட்சியாளர்களின் கைக்கே அடுத்து பாராளுமன்றத்துக்கான அதிகாரம் சென்றால் மு.கா. ஆட்சியில் பங்கெடுக்க முற்படுமா?

பதில்:- அடுத்த ஆட்சியில் இணைவது தொடர்பான விடயங்களை கட்சியின் பிரதித் தலைவர்கள் இருவர் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கரத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். அவ்விதமான செயற்பாடுகள் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியவையாக நாம் பார்கின்றோம். மேலும் இந்த விடயம் சம்பந்தமாக கட்சியின் உயர் மட்டத்தில் எவ்விதமான கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை.

அவ்வாறு நடைபெறுவதென்றால் தெளிவான உடன்பாடுகள் அவசியமாகின்றன. அவ்வாறிருக்கையில், தமக்கு வாக்குச் சேகரிப்பதற்காக, அடுத்த அரசில் அமைச்சுப் பதவியை எடுக்கப்போவதாக கருத்துக்களை வெளியிடுகின்றமை அபத்தமானவை. அரசியல் தூரநோக்கு அற்றவை. சரணாகதி அரசியலுக்கு முஸ்லிம்களின் பேரியக்கத்தைத் தள்ளிவிடும் பின்னணியைக் கொண்டவை.  

கேள்வி:- ஒவ்வொரு ஆட்சியிலும் மு.கா. பங்காளியாகவே இருந்து வருகின்ற நிலையில் அடுத்த ஆட்சியில் அவ்விதமாக நடந்துகொள்ளாது என்று திடமாக கூறுவீர்களா?

பதில்:- மு.காவைப் பலவந்தமாக யாரும் இணைப்பதற்கு முயற்சிக்க முடியாது. மு.கா. தனது சுயகௌரவத்தை இழந்து அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லை. மு.கா. மிகப்பெரும் அரசியல் இயக்கம். கொள்கை ரீதியான விடயங்களில் பூரண உடன்பாடு இல்லாது எந்த முடிவுகளும் எடுக்க முடியாது. கடந்த காலங்களில் கட்சி உடைந்து விடக்கூடாது என்பதற்காக பல விபரீதங்கள் நடைபெற்றிருக்கின்றன.

மேலும் ஒரு சிலர் தமது பதவி மோகத்தால் கட்சியை காட்டிக்கொடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தின் பேரம்பேசும் சக்தியையும் பலவீனமடையச் செய்கின்றார்கள். அத்துடன் கட்சித்தலைமையையும் 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்கிற நிலைமைக்குள் தள்ளிவிடுகின்றார்கள்.

தமது சுயலாபத்தை அடைவதற்காக மக்களையும், கட்சிப் போராளிகளையும் அடகு வைத்து அவர்களின் விருப்பம் ஆட்சியில் இருப்பதே என்ற தோற்றப்பாட்டை விதைத்து விடுகின்றார்கள். ஆகவே, இந்தத் தேர்தலில் இவ்விதமாக உள்ளவர்கள் தொடர்பில் போராளிகளும் முஸ்லிம் சமூகமும் அவதானமாக இருக்க வேண்டும்.

கேள்வி:- 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கான ஆதரவை மு.கா. தெரிவிப்பதற்கு வெகுவான தாமதம் நிலவியபோது 'சரியான முடிவுகளை எடுக்கின்றபோது சேதாரங்களை தவிர்க்க வேண்டும்' என்று என்னிடத்தில் கூறியிருந்தீர்கள். இந்தத் தேர்தலின் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சியில் பங்குகொள்வது தொடர்பில் கட்சிக்குள் இருவேறு நிலை தோன்றினால் கட்சித்தலைமை 'சேதாரங்களைத் தவிர்ப்பதற்காக' நெகிழ்வுப்போக்கைக் கடைப்பிடிக்குமா?

பதில்:- கட்சியின் அடிப்படை விதிகளை மீறுகின்றபோது ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். கட்சியின் தலைமை நேர்மையாக எடுக்கும் முடிவுகளுக்கு உயர்பீடமும் பேராதரவு வழங்கும். ஆகவே, புல்லுருவித்தனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.

மேலும் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கை முக்கியமானதாக இருக்கையில் போராளிகள், ஆதரவாளர்களின் தெரிவு சரியானதாக இருக்க வேண்டும். அதன் மூலம் கட்சியையும் பாதுகாக்க முடியும். எதிர்ப்பு அரசியலா? இணக்க அரசியலா? என்பது கோட்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும்.