ராஜபக்சாக்களுடன் டீல் பேசிய சரவணபவன் இப்பொழுது முழுப் பொய்களைக் கக்கியிருக்கின்றார் கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகின்றார். நீதியரசர் விக்கினேஸ்வரனையும்  அனாவசியமாக வம்புக்கு இழுக்கின்றார் நண்பர் சரவணபவனின் திட்டமிடப்பட்ட பொய்களுக்கு காலம் விரைவில் பதில் சொல்லும் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே என்.ஸ்ரீகாந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.....

2018 ஆண்டு ஐப்பசி மாதத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  மைத்திரிபால சிறிசேனாவால் திடிரென பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார் அவரிடம் பாராளுமன்றப் பெரும்பான்மை இருக்கவில்லை.

தமிழ் முஸ்லிம் எம் பிக்களுக்கு வலை வீசி விலைபேசி அவர்களை இழுத்தெடுக்கும் நடவடிக்கைகள் மகிந்த தரப்பினால் முன்னெடுக்கப்பட்டன கூட்டமைப்பு எம் பிக்கள் சிலரோடும் டீல் பேசும் படலம் ஆரம்பித்தது அதில் முதலில் சிக்கியவர் வியாழேந்திரன் கட்சி தாவி ராஜபக்சவுடன் போய்ச் சேர்ந்த அவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அந்த நேரத்தில் கொழும்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு அவசரமாகக் கூடியது அதற்கு முன்னதாக மகிந்தவின் அழைப்பின் பேரில் சம்பந்தன் சென்று அவரை சந்தித்திருந்தார் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சம்பந்தரே அந்தத் தகவலை சொன்னார் .

சில கோரிக்கைகளை மகிந்தவிடம் தெரிவித்ததாக கூறினார் கட்சியுடன் பேசித்தான் முடிவு எடுக்கலாம் என்று மகிந்த கூறியதாக சம்பந்தர் தெரிவித்தார் .

நீங்கள் மகிந்தவை சந்தித்திருக்கக் கூடாது அவர் பிற்கதவு வழியால்  பிரதமர் ஆக்கப்பட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரான நீங்கள் சந்தித்தால் அது அவரை பிரதமராக நாங்கள் அனைவரும் அங்கீகரிப்பதாக அமைந்து விடும்  உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் நான் ஒரு போதும் மகிந்தவிடம் போயிருக்க மாட்டேன் என்று அவருக்கு நேரடியாகக் கூறினேன்.

அப்போது தான் அவரின் நடவடிக்கையின் தாற்பரியத்தை அவர் முற்றாக உணரத் தொடங்கினார் என்பதை அவரின் முகத் தோற்றத்தில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது அத்துடன் அவர் பதில் எதுவும் பேசவில்லை. 

அந்தக் கூட்டத்தில் நாங்கள் கலந்து பேசி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி நீக்கத்தை சட்டவிரோதமானது என்று அறிவிப்பது என முடிவெடுத்தோம் அத்துடன் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட மகிந்தவின் அரசை எதிர்ப்பது எனவும் முடிவு செய்தோம்.

இந்தக் கூட்டத்தில் சம்பந்தர் சுமந்திரன் சேனாதிராஜா மற்றும் சித்தார்த்தன், ராகவன், செல்வம், அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், ஜனா ,கருணாகரன் மற்றும் நான் ஆகியோர் கலந்து கொண்டோம் .

அந்தக் கூட்டத்தில் சுமந்திரன் ஒர் அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார் சரவணபவன் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவுக்க முன் வந்திருக்கிறார் என்றும் அவருடன் டீல் பேசப்படுகிறது என்றும் சரவணபவன் பெருந் தொகையான பணத்துடன் மந்திரி பதவியையும் கோரி இருக்கிறார் என்றும் அவர் கூறினார் . அத்துடன் அடுத்த தேர்தலில் தேசியப் பட்டியலில் தன்னை எம் பியாக மகிந்த தரப்பு நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளதாக சுமந்திரன் கூறினார். 

அடுத்த நாள் கூட்டறிக்கை தயாரிப்பதற்காக நாங்கள் கூடிய போது சரவணபவனுடன் டீல் பேசப்பட்டிருப்பதை சுமந்திரன் திரும்பவும் உறுதிப்படுத்தினார்.

அதேவேளையில் இன்னும் ஒரு கூட்டமைப்பு எம் பி பற்றியும் அவர் சில தகவல்களைத் தெரிவித்தார்.

எமது கூட்டறிக்கையில் மகிந்தவுக்கு ஆதரவளிப்பதில்லையென நாம் திட்டவட்டமாக தெரிவித்தோம் இதனை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரசும் எம்மைப் பின்பற்றத் தீர்மானித்தது மகிந்தவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பது உறுதியானது.

சரவணபவன் மகிந்தவிடம் பேசிய டீலும் கைவிடப்பட்டது. நான் கூறிய கூட்டமைப்புப் பிரமுகர்கள் எவரிடமும் இதைக் கேட்டுப்பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில் சரவணபவன் டீல் களைப்பற்றிப் பேசக்கூடாது மனசாட்சி இருந்தால் அவர் ஒழுங்காக நடக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் 2010ல் சிவாஜிலிங்கம் போட்டியிட்டது ஏன் என்பது எல்லோருக்கும் தெரியும். 

போர்க் குற்றவாளிகளான மகிந்த ராஜபக்சவையோ அல்லது சரத்பொன்சேகாவையோ ஆதரிக்கக் கூடாது என்பதில் தமிழ்த் தரப்பில் நாம் உறுதியாக இருந்தோம்.

இந்த நிலைப்பாடு சரியானது என்பது பின்னர் வந்த நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட பல நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டன இதை முன் எடுத்தவர்கள் கட்சி சார்பற்றவர்கள்.

கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடாத்தப்பட்டது ஆனால் ஒரு தமிழ் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை காணப்படவில்லை. 

இந்த நிலையில் தான் அந்த முயற்சி நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் கைவிடப்பட்டது அந்த நிலையில் தான் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆதரவுடன் களத்தில் இறங்கினார் அது கொள்கை ரீதியாக அவர் எடுத்த முடிவு அந்த முடிவுடன் நான் உடன்பட்டிருக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் கட்சிகளை அழைத்துப்பேசியது பல சுற்றுப்பேச்சு வார்த்தைகள் நடந்தன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்களிடமும் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை சமர்ப்பித்துப் பேசவேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பேச்சு வார்த்தையின் இறுதி நாளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி விதித்த ஒரு நிபந்தனை மற்றக் கட்சிகளால் ஏற்கப்படவில்லை. இக்கட்சிகள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தன ஆனாலும் பிரதான சிங்கள வேட்பாளர்களுடன் பேசுவது கைகூடவில்லை.

கோத்தபாயா பேச விரும்பவில்லை, சஜித் பிரேமதாசாவும் பின்னடித்தார்.  இந்நிலையில்  தமிழரசுக்கட்சி கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கூட ஆலோசிக்காமல் சஜித் பிரேமதாஸாவை ஆதரிப்பதாக அறிவித்தது.

இதில் நாம் அதிருப்தி அடைந்து ரெலோ தலைமைக் குழுவைக் கூட்டினோம்.  சஜித் பிரேமதாஸா வெற்றி பெறுவதை ரணில் விரும்பவில்லை என்பது எங்களுக்கு தெரிந்திருந்தது அவரின் தூண்டுதலால் தான் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவு மேற்கொள்ளப்பட்டதாக நாம் நம்பினோம். 

ஏனெனில் எவரை ஆதரித்தாலும் அந்த முடிவை நேரத்தோடு அறிவிக்காமல் தேர்தலுக்கு ஒரு சில தினங்கள் முன்பே அறிவிக்க வேண்டும் என்று சுமந்திரன் ஏற்கனவே மாணவர் ஒன்றியக் கூட்டத்தில் கூறியிருந்தார் அப்படி அறிவித்தால் நாம் ஆதரிக்கும் வேட்பாளருக்கு எதிராக மற்றத்தரப்பு இதனை உபயோகித்து அவரைத் தோற்கடித்து விடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார் ஆனால் இதற்கு மாறாக தமிழரசுக் கட்சி நடந்து கொண்டது 

ரெலோவின் தலைமைக் குழுக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு எல்லோராலும் தீவிரமாகக் கண்டிக்கப்பட்டது. இருந்தும் பெரும்பான்மையோர் தமிழரசுக் கட்சியுடன் இசைந்து செல்லவே விரும்பினர் பாராளுமன்ற தேர்தலை அவர்கள் மனதில் கொண்டிருந்தனர்.

ரணில் தமிழரசுக் கட்சி கூட்டுச்சதிக்கு எதிராக சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நான் சிவாஜி லிங்கத்தை ஆதரிக்க முடிவெடுத்தேன் இது தான் உண்மையில் நடந்தது. 

சஜித்தை தோற்கடிக்க ரணில் தரப்பு செய்த சதியால் தான் கோத்தபயவிற்கு எதிர்பாராத பாரிய பெரும்பான்மை கிடைத்தது ஐக்கிய தேசியக் கட்சியும் பிளவுபட்டது. 

ஆனால் ராஜபக்சாக்களுடன் டீல் பேசிய சரவணபவன் இப்பொழுது முழுப் பொய்களைக் கக்கியிருக்கின்றார் கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகின்றார்.

நீதியரசர் விக்கினேஸ்வரனையும்  அனாவசியமாக வம்புக்கு இழுக்கின்றார் நண்பர் சரவணபவனின் திட்டமிடப்பட்ட பொய்களுக்கு காலம் விரைவில் பதில் சொல்லும்