சிங்களத் தலைமைகளின் வாக்குறுதிகள்

Published By: Digital Desk 4

02 Aug, 2020 | 07:43 PM
image

-கார்வண்ணன்

சுவிஸ் தூதுவர் ஹன்ஸ்பீற்றர் மொக் இலங்கையில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவிருக்கிறார்அதற்கு முன்னர் அவர் ஜனாதிபதிபிரதமர் ஆகியோரைச் சந்தித்து விடைபெற்றிருந்தார்.


கடந்த வாரம் வடக்கிற்குச் சென்று முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த அவர், மறுநாள் திருகோணமலைக்குச் சென்று இரா.சம்பந்தனையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

தேர்தலுக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டிருந்தது.

சந்திப்பு பற்றி விளக்கமளித்த இரா.சம்பந்தன், “இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தனது வாக்குறுதிகளை மீறி செயற்பட்டு வந்திருக்கிறது. அது முடிவுக்கு வரவேண்டும்” என்று கூறியிருந்தார்.

சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளையும், சர்வதேச நாடுகளுடன் செய்து கொண்ட உடன்பாடுகளையும் மீறிச் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியே, இரா.சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மீறப்படுவது ஒன்றும் தமிழ்மக்களுக்குப் புதிய விடயமல்ல. அது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியாக இருந்தால் என்ன, அந்தக் கட்சி கூட்டணி அமைத்து நடத்திய ஆட்சியாக இருந்தால் என்ன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியாக இருந்தால் என்ன, அதன்வழி வந்த கட்சிகளின் ஆட்சியாக இருந்தால் என்ன – நிலைமைகள் ஒன்று தான்.

தமிழ் மக்களை வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதும், உடன்பாடுகளை கிழித்தெறிவதும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இவ்வாறான நிலை முடிவுக்கு வர வேண்டும் என்று இரா.சம்பந்தன் குறிப்பிட்ட அடுத்த நாள் அலரி மாளிகையில் ஒரு நிகழ்வு நடந்தது.

நாடு முழுவதும் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்காக 20 பேர் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழுவுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வே அது.

இந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

ஆலோசனைக் குழுவின் 20 உறுப்பினர்களில் ஒன்பது பௌத்த பிக்குகள் இடம்பெற்றிருக்கின்றனர். ஏனையவர்கள் அனைவரும் சிங்கள பௌத்தர்கள்.

குழுவில் ஒருவர் கூட தமிழரோ, முஸ்லிமோ கிடையாது.

இலங்கை முழுவதும் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் குழுவில் தனியே சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் இடமளிக்கப்பட்டது ஏன்?

இலங்கையில் பௌத்தர்கள் அல்லாத தமிழர்கள், முஸ்லிம்களுக்கென, தொல்பொருள் இடங்களோ, அடையாளங்களோ இல்லையா?

தொல்பொருள் பாதுகாப்பு விடயத்தில் தற்போதைய அரசாங்கம் மிகக் குறுகிய காலத்துக்குள் சிறுபான்மையினரை ஓரம்கட்டி விட்டு எடுத்துள்ள இரண்டாவது நடவடிக்கை இது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கடந்த ஜூன் மாதம், கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணி என்ற பெயரில் ஒரு செயலணியை உருவாக்கியிருந்தார்.

பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையிலான அந்தச் செயலணி முற்றிலும் படை அதிகாரிகள், பௌத்த பிக்குகள், சிங்கள பௌத்தர்களை மாத்திரம் கொண்டதாக இருந்தது.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினராக தமிழ் பேசும் மக்களே வாழுகின்ற நிலையில், கிழக்கில் தமிழ், முஸ்லிம்களின் தொல்பொருள் இடங்கள், அடையாளங்கள் இருக்கின்ற நிலையில், பௌத்தர்களை மாத்திரம் உள்ளடக்கியதாக ஒரு செயலணி அமைக்கப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழ் பேசும் மக்களும், அரசியல் தலைவர்களும் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட போது, அந்த செயலணியை நியமித்த- தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன் என்று ருவன்வெலிசாய மண்டபத்தில் உறுதியளித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதனைக் கண்டு கொள்ளவேயில்லை.

இந்த செயலணியின் ஆபத்து குறித்து தமிழர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பிய போது, தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போது இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகவும், செயலணியில் தமிழ்ப் பிரதிநிதிக்ளுக்கு இடமளிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.

அத்துடன் பொருத்தமானவர்களின் பெயர்களை பரிந்துரை செய்யுமாறும் ஜனாதிபதி கேட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பின்னர், அலரி மாளிகையில் தமிழ் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் இதுபற்றி கேள்வி எழுப்பிய போது, பொருத்தமான தமிழ்ப் பிரதிநிதி ஒருவரை தேடிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும் ஒருவர் கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

அதற்குப் பின்னர், சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஆனந்த பீரிசை செயலணியில் உள்ளடக்கி புதிய வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது.

அப்போது ஜனாதிபதியும் பிரதமரும் ஏமாற்றி விட்டார்கள் என்று தமிழர் தரப்பில் குற்றச்சாட்டுகள் பறக்க, மீண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதாக செய்தி வெளியாகியது.

இந்த விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்ற போது, பொருத்தமான இரண்டு பிரதிநிதிகளின் பெயர்களை தருமாறு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

அதற்குப் பின்னரும் தமிழ்ப் பிரதிநிதிகள் யாரும் உள்வாங்கப்படவில்லை.

இந்தநிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச புதிதாக தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான ஒரு ஆலோசனை குழுவை நியமித்திருக்கிறார்.

இந்தக் குழுவிலும் தமிழருக்கோ, முஸ்லிம் பிரதிநிதிக்கோ இடமில்லை.

கோத்தாபய ராஜபக்ச தான் கடும்போக்காளர், மகிந்த ராஜபக்ச கொஞ்சம் நெகிழ்வுப் போக்குடையவர் அவரை வைத்துக் காரியம் சாதிக்கலாம் என்று நம்பிக் காண்டிருந்த தமிழர்கள் மீண்டும் ஏமாந்து போயிருக்கிறார்கள்.

தான் ஒன்றும் நெகிழ்வுப் போக்குடையவர் அல்ல என்று அவர் நிரூபித்திருக்கிறார்.

ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் ஒருமுகமாகத் தான் இருக்கிறார்கள் என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

சிங்கள பௌத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு மாத்திரமே மிக முக்கியமான விடயங்களில் பிரதிநிதித்துவத்தை வழங்க முயன்றிருக்கிறது அரசாங்கம்.

ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கத் தவறிய அரசாங்கம் அந்த குறைபாட்டை பிரதமரின் ஆலோசனைக் குழுவிலாவது நிவர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஆனால், இரண்டு பேருமே தமிழர் தரப்பை ஏமாற்றியிருக்கிறார்கள்.

இது சிங்களத் தலைமைகளின் வரலாற்றுத் தொடர்ச்சி.

தமிழர்களையும், சர்வதேசத்தையும் அவர்கள் ஏமாற்றியே வந்திருக்கிறார்கள். இப்போதும் அவ்வாறே செய்கிறார்கள்.

மீண்டும் ஆட்சிக்கு வந்து தமிழர்களுக்கு அபிவிருத்தியை செய்வோம், வடக்கை வளப்படுத்துவோம், கிழக்கை செல்வம் கொழிக்க வைப்போம் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள்.

தொல்பொருள் செயலணியிலும் ஆலோசனைக் குழுவிலும் கூட தமிழ் பேசும் மக்களுக்கு இடமளிக்க மறுக்கின்ற அரசாங்கத்திடம் இருந்து, அரசியல் தீர்வையும் அதிகாரப் பகிர்வையும் எதிர்பார்ப்பதோ, வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புவதோ, காளை மாடு பால் தரும் என்று கனவு காண்பதற்கே ஒப்பானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54