தேர்தல் மோசடி சாத்தியமா?

Published By: Digital Desk 4

02 Aug, 2020 | 07:42 PM
image

-சத்ரியன்

இம்முறை பொதுத் தேர்தல் முற்றிலும் வேறுபட்டதொரு சூழலில் நடைபெறவுள்ளதால், தேர்தல் முடிவுகள் மறுநாள் தான் வெளிவரப் போகிறது. வழக்கத்தில் இலங்கையில் தேர்தல் முடிந்து வாக்குப் பெட்டிகள்,  வாக்கு எண்ணுகின்ற மத்திய நிலையங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டதும், வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும்.

பெரும்பாலும், எல்லா இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை இரவு 8 மணிக்குள்ளாகவே தொடங்கப்பட்டு விடும்.

அதற்கு முன்னதாக, தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி அன்று மாலை 5 மணிக்கெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு விடும்.

ஆனால் கொரோனா தொற்று நெருக்கடியால், மறுநாளான வரும் வியாழக்கிழமை காலை 6 அல்லது- 7 மணிக்குத் தான், வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அன்று பிற்பகல் தேநீர் வேளைக்குள் முதல் முடிவை எதிர்பார்க்க முடியும் என்று கூறியிருக்கிறார் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய.

இதனால் மாலை 5.30 மணிக்கு வாக்களிப்பு முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்கள் வரை அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்படவுள்ளன. அதற்குப் பிறகே வாக்குகளை எண்ணும் அதிகாரிகளிடம் அவை ஒப்படைக்கப்படும்.

வாக்குச்சாவடி அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படுவதற்கு முன்னர் வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முக்கியமானது.

இந்தியாவில் இதற்கென தனியான நடைமுறைகள் உள்ளன. அங்கு இரண்டு, மூன்று வாரங்கள் கூட வாக்கு எண்ணிக்கைக்காக வாக்குப்பெட்டிகள் பாதுகாக்கப்படுவதும் உண்டு.

அதற்கென பல கட்ட பாதுகாப்பு வளையங்கள் உருவாக்கப்படும். அத்தகைய இறுக்கமான பாதுகாப்பையும் தாண்டி சில அதிகாரிகள் உள்ளே சென்ற சந்தர்ப்பங்களும் உள்ளன.

ஆனால்,  இலங்கையில் இதுவரை அவ்வாறான நடைமுறை இல்லை. எனவே இந்தப் புதிய நடைமுறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியமானது.

வாக்காளர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட வேண்டும், வேட்பாளர்களுக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும்.

இல்லையேல் ஒட்டுமொத்த தேர்தல் முறை மீதும் நம்பிக்கை போய் விடும்.

இம்முறை வாக்குப் பெட்டிகள் சாதாரண ஹார்ட் போர்ட் அட்டையால் தான் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவை இலகுவில் சேதப்படுத்தப்படக் கூடியவை. உடைக்கப்படவும் கூடியவை.

எனவே, வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடத்தில் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முக்கியம்.

அதற்காக, வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கும் இடத்தில், பொலிஸ் பாதுகாப்பு போடப்படுவதுடன், அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் முகவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

எனினும், வாக்களிப்புக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட நேரத்தில், வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்பு தொடர்பான பலமான சந்தேகம் உள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சுவிஸ் தூதுவரிடம், இதுபற்றி கவலையை எழுப்பியிருந்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

அவர் அந்தக் கவலையை எழுப்பியதற்கு ஒரு காரணமும் இருந்தது.

முன்னதாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம், தேர்தல் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்களா என்று ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பட்டது.

அதற்கு அவர், “நெடுந்தீவு போன்ற தூர  இடங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்கு கடற்படை அல்லது விமானப்படையின் உதவி பெற்றுக் கொள்ளப்படும்.

வேறெந்த சூழலிலும் இராணுவத்தினர் தேர்தலில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். பொலிசாரே அந்தப் பணிகளில் ஈடுபடுவார்கள்” என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், இப்போது, தேர்தல்கள் ஆணைக்குழு முடிவை மாற்றியிருக்கிறது. பொலிஸ் நிலையங்களில் முப்படையினரையும் தயார் நிலையில் வைத்திருக்கப் போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியிருக்கிறார்.

வாக்குகளை எண்ணும் நிலையத்தில் இருந்து 1 கி.மீ சுற்றளவு பகுதியில் இராணுவத்தினரைப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

அதாவது வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குப் பெட்டிகள் இருக்கும் போது, அதனை சுற்றிய பகுதிகளில் இராணுவததினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவது- முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

இராணுவத்தினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதில்லை என்று முடிவெடுத்து விட்டு வாக்கு எண்ணும் நிலையங்களின் சுற்றுப் புறத்தில் அவர்களை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்திருப்பது, சிவி.விக்னேஸ்வரின் குழப்பத்துக்கு காரணமாக இருக்கலாம்.

அதேவேளை, தேர்தல் முறைகள் தொடர்பாக அரசியல்வாதிகள் மட்டத்திலும், சாதாரண மக்கள் மத்தியிலும் சந்தேகங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

தேர்தல் அதிகாரிகளால், தேர்தல் முடிவுகளை தாம் விரும்பியபடி மாற்ற முடியும் என்றொரு கருத்து பொதுவாகவே உள்ளது.

அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே இதுபற்றியும் சந்தேகம் எழுப்பியிருந்தார்.

2013இல் வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது வடக்கில் பணியில் இருந்த ஒரு தேர்தல் அதிகாரி, பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குறித்து அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

வாக்கு மோசடிகளை இலக்கு வைத்துத் தான் குறித்த அதிகாரி கொண்டு வரப்பட்டாரா என்று அவர் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும், 2013ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் தான் அதிகளவு விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே தேர்தலில் தோல்வியடைபவர்களும், தோல்வி அச்சம் கொள்பவர்களும் தேர்தல் முறையை குறை சொல்வது வழக்கம்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் திமுகவும் இவ்வாறான குற்றசசாட்டுகளை அடிக்கடி கூறியிருக்கின்றன.

வாக்களிப்பு இயந்திரங்களில் எந்தச் சின்னத்துக்கு அழுத்தினாலும் பாஜகவின் தாமரைச் சின்னத்துக்கே வாக்கு அளிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் பலமுறை முன்வைக்கப்பட்டன.

இதற்குப் பின்னர் தான் வாக்குப் பதிவு செய்யப்பட்டதும் யாருக்கு வாக்கு அளிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு துண்டுச் சீட்டு வழங்கப்படும் முறை இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆச்சரியம் என்னவென்றால், இவ்வாறான மோசடி இடம்பெறுவதாக கூறிய காங்கிரஸ் கட்சியும் திமுகவும்  தமிழகத்தில் வெற்றி பெற்ற போது அது எப்படி நடந்தது என்று கூறவில்லை.

தோல்வியடையும் தரப்புகள் தேர்தல் முறையை  குறைசொல்வதும், வாக்களிப்பில் மோசடி என்று குற்றம்சாட்டுவதும் வழக்கம்.

இலங்கையில் தேர்தலில் கள்ள வாக்குகளை அளிக்கும் வாய்ப்புகள் இல்லை. எனவே தான் தேர்தல் மோசடிகள் வாக்கு எண்ணிக்கையின் போது நடக்கலாம் என்ற கருத்து உள்ளது.

2015 நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாண மாவட்டத்தில், ஒரு சர்ச்சை ஏற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள் கிடைத்திருந்தன. கூட்டமைப்பின் முதல் நான்கு வேட்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டு விட்ட பின்னர், ஐந்தாவது விருப்பு வாக்கு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

அருந்தவபாலன் ஒரு கட்டத்தில் முன்னிலையில் இருந்தார். வட்டுக்கோட்டை தொகுதியின் முடிவுகள் வந்த போது, சரவணபவன் 325 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த இடத்தில் தான், ஏழாவது இடத்தில் இருந்த  சுரேஸ் பிரேமச்சந்திரனும், ஆறாவது இடத்துக்கு வந்த அருந்தவபாலனும்,  மோசடியான முறையில் தமது வெற்றி பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

தேர்தல் முடிவில் தெரிவத்தாட்சி அதிகாரி கையெழுத்திடுவதற்கு முன்னர், வேட்பாளர்களால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு கோரும் சந்தர்ப்பம் இருந்தது என்றும், ஆனால் அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்திருக்கிறார்.

உரிய நேரத்தில் மேன்முறையீட்டை செய்வது, மறு வாக்கு எண்ணிக்கையை கோருவது போன்ற வாய்ப்புகளை தவறவிட்டு விட்டு குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரிகள் மீது சுமத்துவது முறையற்றது என்று அவர் அண்மையில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தோல்வியடைந்தவர்கள் எவராலும் தமது தோல்வியை இலகுவில் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அவர்கள் அந்தப் பழியை யார் மீதாவது போட்டு தப்பிக் கொள்ளவே முனைவார்கள்.

அவ்வாறு குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறும் போது, சாதாரண மக்களும் அதனை நம்புவார்கள்.

எனவே, தேர்தல் முறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டால் தான், வாக்களிப்பின் மீது நம்பிக்கை ஏற்படும்.

இதுபோன்ற நம்பிக்கையீனங்களை தவிர்ப்பதற்கான பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கே அதிகம் உள்ளது.

அந்தப் பொறுப்பை ஆணைக்குழு தவறவிட்டால் மீண்டும் மீண்டும், வாக்கு மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடரத் தான் செய்யும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13