(க.கிஷாந்தன்)

இரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பை விலக்கச்சென்ற பெண்ணொருவர், தாக்குதலுக்கு இலக்காகி  உயிரிழந்த சம்பவம் நோட்டன் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் லொனக் தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய செல்லப்பன் வள்ளியம்மா என்பரவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

நோட்டன் லொனக் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில், நேற்றிரவு 8 மணியளவில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது கணவரை சண்டையிலிருந்து விலக்கச்சென்ற மனைவி அங்கிருந்த இளைஞன் ஒருவரது தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தக் கைகலப்பின் மூலம் காயமடைந்த கணவன், மகன் ஆகியோர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.