-மீரா ஸ்ரீனிவாசன்-

இலங்கை ஆகஸ்ட் 5 பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகியிருக்கும் நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான அரசியல் அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தசாப்தத்துக்கு முன்னர் முடிவடைந்த உள்நாட்டுப்போருக்கு பிறகு அதன் வாக்காளர்கள் மத்தியில் இதுவரையில் சந்தித்திராத மிகப்பெரிய சவாலுக்கு முகம்கொடுக்கிறது.

2013 வடமாகாண சபைத் தேர்தலிலும் 2015 பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப்பெரிய ஆணையை திரும்பத் திரும்ப தமிழர்கள் வழங்கியிருந்தபோதிலும், (2015 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 16 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றியது) இத்தடவை வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியும் வெறுப்பும் அதிகரித்திருப்பதாக தோன்றுகின்ற சூழ்நிலைக்கு மத்தியில் தேர்தலில் அது போட்டியிடுகின்றது.

‘‘யார் தெரிவு செய்யப்பட்டாலும் எங்களது வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. எமது நிலை மேம்படும் என்ற எதிர்பார்ப்பில் அல்ல அது, எமது கடமை என்பதாலேயே நாம் வாக்களிக்கின்றோம் என்று கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பகுதியில் தனது சிறிய வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த யேசுதாஸ் ஜெனோவா என்ற பெண்மணி கூறினார்.

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டமும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டமும் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டமாக அமைந்திருக்கின்ற அதேவேளை, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்கள் ஒன்றிணைந்து வன்னி தேர்தல் மாவட்டமாக இருக்கின்றன.

வடமாகாணத்தில் பலரிடம் ஜெனிவா வெளிப்படுத்திய உணர்வுகள் எதிரொலித்ததை காணக்கூடியதாக இருந்தது. அதற்கு பல காரணங்கள். உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் பாரிய இழப்புகளை விளைவித்த போரிலிருந்து மீண்டு 11 வருடங்களுக்கு பிறகு தமிழ் சமூகம் இன்னமும் நீதியையும் கூடுதல் அரசியல் அதிகாரங்களையும் கோரிக்கொண்டிருக்கிறது.

சிங்கள அரசியல் சமுதாயத்தின் பெரும் பகுதியும் அந்த அதிகாரங்களை தமிழர்களுக்கு பரவலாக்கி கொடுக்க விரும்புவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் ஆதரித்த முன்னைய மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளை (குறிப்பாக புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமான தீர்வு) நிறைவேற்றுவிக்க முடியாமல் போனதின் விளைவாக, தமிழர்கள் மத்தியில் மேலதிக வெறுப்பை சம்பாதித்திருக்கிறது.

அதேவேளை, கொழும்பில் பதவியிலிருந்த அரசாங்கங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான வடமாகாண சபை நிர்வாகமும் தொழில்வாய்ப்புகளையும் வாழ்வாதாரங்களையும் உருவாக்குவதன் மூலம் போரினால் சின்னாப்பின்னமான பொருளாதாரம் ஒன்றுக்கு புத்துயிர் அளிக்க தவறியதையடுத்து, தமிழர்களின் பொருளாதார கவலைகளும் அதிகரித்திருக்கின்றன. வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிமுறையின் செயற்பாடுகள் மீதான தங்களது அதிருப்தியை வெளிக்காட்டி தமிழர்கள் 2018 உள்ளுராட்சித் தேர்தல்களில் தங்களது கணிசமான வாக்குகளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினதும் (ஈ.பி.டி.பி.) அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸினதும் வேட்பாளர்களுக்கு வழங்கினார்கள்.

தமிழ் மக்களின் இந்த கண்டனத்தையும் நம்பகத்தன்மையான அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் ராஜபக்ச நிர்வாகம் தரும் என்பதிலுள்ள நிச்சயமற்ற தன்மையையும் புரிந்துகொண்டவர்களாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அபிவிருத்திக்கும் வாழ்வாதாரத்துக்கும் முக்கியமான இடத்தை கொடுத்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை எந்தவிதமான ஐயுறவுக்கும் இடமின்றி நிராகரித்த வடமாகாண வாக்காளர்களை பொறுத்தவரை அவர்களின் மனதை மாற்றுவதில் இத்தடவை சுலபமானதாக இருக்கப் போவதில்லை.

சிதறிப்போன அரசியல் சமுதாயம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற பொதுத் தேர்தலில் சகல கட்சிகளுமே அடக்கமான ஒரு பிரசாரத்தை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. மேலும், வேறுபட்ட வகைகளிலான தமிழ் தேசியவாத அரசியலை பேசுகின்ற உறுப்பினர்களை கொண்ட அரசியல் சமுதாயத்தின் மத்தியிலிருந்து தமிழ் வாக்காளர்கள் தங்களது தெரிவை செய்ய வேண்டி இருக்கிறது. சகல பக்கங்களிலும் பிளவுகளையே காணக்கூடியதாக இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் காரணமாக தோன்றியிருக்கின்ற அதிகரித்த பூசல்கள் ஒருபுறமிருக்க, அதன் வேட்பாளர்களில் சிலருக்கு எதிராக கடுமையான எதிர்ப் பிரசாரங்களும் கட்சிக்குள்ளேயே தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய நிலையில், நம்பிக்கையிழந்த வாக்காளர்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது. மறுபுறத்திலே முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலதரப்பிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. முதலமைச்சராக இருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த விக்னேஸ்வரன் பிறகு பிரிந்து தனிக்கட்சி அமைத்து பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார். வேறு வேறு முகாம்களாக போட்டியிடுகின்ற அவருக்கும் கஜேந்திரகுமாருக்கும் யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளில் ஓரளவு ஆதரவு இருக்கிறது. 

வடக்கு, கிழக்கில் அதே பாராளுமன்ற ஆசனங்களுக்காக ராஜபக்ச ஆட்களின் ஆளுங்கட்சியுடன் அணிசேர்ந்த அரசியல்வாதிகளும் போட்டியிடுகின்றார்கள். ராஜபக்ச நிர்வாகத்தில் அமைச்சரவை அமைச்சராக இருந்த ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனும் முக்கியமானவர்கள். டக்ளஸ் தேவானந்தாவை பொறுத்தவரை யாழ்ப்பாணத்திலும் குடாநாட்டுக்கு அப்பாலுள்ள தீவு பகுதியிலும் பாரம்பரியமான ஆதரவு தளத்தை கொண்டவர்.

கடந்த காலமும் நிகழ்காலமும்

இந்த அரசியல் நிலைவரத்தை எதிர்நோக்குகின்ற அதேவேளை, வாக்காளர்கள் அரசியல் உரிமைகளுக்கும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்குமான தங்களது நீண்டகால கோரிக்கைகள் பற்றியும் காணி, வீடமைப்பு, தொழில்வாய்ப்பின்மை மற்றும் கடன்சுமை போன்ற தங்களது அன்றாட வாழ்வின் பிரச்சினைகள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை பொறுத்தவரை இவை இரண்டிலும் எதுவுமே முக்கியத்துவம் கொண்டதாக இல்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த இடமான வல்வெட்டித்துறைக்கு அண்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான வேட்பாளரும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை சிகை அலங்கரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சந்தித்த கூட்டம் ஒன்றில் வாக்காளர்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு வகையான அக்கறைகள் எடுத்துக் கூறப்பட்டன.

அந்த 30நிமிட சந்திப்பில் சிகை அலங்கரிப்பாளர்கள் சங்கத்தினர் தென்னிலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கக்கூடிய பேரம்பேசும் சக்தி வல்லமை, அருகிவரும் இந்தியாவின் செல்வாக்கு, சமஸ்டி தீர்வுக்கான சாத்தியப்பாடுகள், ஆயுதப்போராட்டம் பற்றிய சுமந்திரனின் எண்ணப்பாடு பற்றியே பெரும்பாலும் அவரிடம் கேள்விகளை தொடுத்தனர்.

அண்மையில் சுமந்திரன் அளித்த பேட்டியொன்றில் ஆயுதப்போராட்டம் பற்றி அவர் தெரிவித்த கருத்துகளுக்கு கடுமையான கண்டனங்கள் கிளம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஐக்கியப்பட்ட ஒரு சக்தியாக எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதையே நாங்கள் விரும்புகின்றோம்’’ என்று சிகை அலங்கரிப்பாளர்களின் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவரான ஏ.உதயசங்கர் தேசிய அரசியலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆற்றலில் கூடுதல் நம்பிக்கை கொண்ட தொனியில் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நீண்டகாலமாக நிலவிவருகின்ற உள்முரண்பாடுகள் அதன் வேட்பாளர்களுக்கு இடையில் விருப்பு வாக்குகளை பெறுவதற்கான போட்டாபோட்டியின் விளைவாக தற்போது கூடுதலானவர்களுக்கு வெளிப்படையாக தெரிகிறது.

உள்ளுராட்சி சபைகளில் கணிசமான அதிகாரத்தை கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – திரும்ப திரும்ப வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்ற போதிலும் - அந்தந்தப் பகுதிகளில் வீதிகளை கூட அமைக்க முடியாததாக இருக்கிறது ஏன்? என்று சுமந்திரனிடம் தொண்டமானாறு பகுதியிலிருந்து வந்த குழுவொன்றுடன் இருந்த இளைஞர் ஒருவர் கேட்டார். ‘எமது அடிப்படைத் தேவைகளைக்கூட எமது சொந்த தமிழ் அரசியல் தலைமைத்துவத்தினால் நிறைவேற்ற இயலாமல் இருக்கும்போது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு சிங்கள அரசியல் தலைமைத்துவம் தீர்வுகளை தரும் என்று நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்’ என்று எஸ். பிரிந்தன் என்ற சட்ட மாணவர் ஒருவர் வினா தொடுத்தார்.

மாற்று அணி தயாரா?

மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை அலட்சியம் செய்துக்கொண்டு இனப்பிரச்சினை மீதே கூடுதல் கவனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்துவதே இதற்கெல்லாம் காரணம் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இத்தடவை தேர்தலில் சுயேச்சைக்குழு அமைத்து போட்டியிடுபவருமான முருகேசு சந்திரகுமார் கூறினார். ‘‘கிளிநொச்சி பகுதியில் மாத்திரம் தொழில் வாய்ப்பில்லாமல் 20ஆயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். போதைப்பொருள் கடத்தல், வர்த்தகம் உட்பட சட்டவிரோத செயற்பாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உரிய தலைமைத்துவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்க முடியவில்லை’’ என்றும் சந்திரகுமார் குறிப்பிட்டார். 

வீடுகளையும் தொழில் வாய்ப்புகளையும் வழங்குவதற்கான அவர்களது முயற்சிகளும் தற்போதைய தேர்தல் பிரசாரமும் கிளிநொச்சி பகுதியில் கணிசமான அளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்கின்றது. மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான விரக்தி வெளிப்படையாக தெரிகின்ற அதேவேளை, வீடு சின்னத்துக்கு வாக்களித்து வந்த வழக்கத்திலிருந்து வாக்காளர்கள் விடுபடுவார்களா என்பது தெளிவற்றதாக இருக்கின்றது. அதுவும் குறிப்பாக ராஜபக்ச அரசாங்கம் சட்டங்களை திருத்துவதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் குறிவைத்து அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையில் செயற்படுகின்ற நேரத்தில் இது முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதன் காரணத்தினால் தான் வேறுசில சுயேச்சைக்குழுக்களும் இந்த தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் களத்தில் இறங்கியிருக்கின்றன.

‘‘எமது பிரசாரங்கள் வடக்கில் உழைக்கும் மக்களை மையப்படுத்தியதாக இருக்கின்றது. அந்த மக்களின் கோரிக்கைகளை முக்கியத்துவப்படுத்துகின்ற ஒரு முற்போக்கு தமிழ்த் தேசிய வாதத்தையே நாம் வலியுறுத்துகின்றோம். எமது பிரசாரம் இந்த தேர்தலை பற்றியது மாத்திரமல்ல, மாற்று அரசியல் தலைமைத்துவம் ஒன்றை தெரிவு செய்வதற்கு தமிழர்கள் தயாராயிருக்கின்றார்களா என்பதை பற்றியதுமாகும்’’ என்று யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவரான மூத்த இடதுசாரி தலைவரான சி.கா.செந்தில்வேல் கூறினார். (த இந்து)