(செ.தேன்மொழி)

குற்றப்புலனாய்வு திணைகளத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. எமது ஆட்சியில் சட்டம் , ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று  சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

குற்றப்புலனாய்வு திணைகளத்தின் முன்னாள் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை கைது செய்தமைக்கு  கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். இவரது கைதின் ஊடாக அரசாங்கம் தமது கூற்றின் படி செயற்படாதவர்கள் அரச அதிகாரிகளாக இருந்தாலும் சுயாதீன ஆணைக்குழுக்களை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்பதை கூறவே முயற்சிக்கின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் சட்டத்தை பாதுகாக்குமாறும் குடும்ப ஆட்சிக்கு நாட்டை கொண்டு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஆட்சியில் ஜனநாயகம் , சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய தேர்தலை நியாயமான முறையில் நடத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரசாங்கத்திடமும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் கோருகின்றோம்.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்பின்மையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. சட்டமா அதிபர்  திணைக்களத்தினால் வழங்கப்படும் உத்தரவுக்கமைய பொலிஸார் செயற்படுவதில்லை. இந்நிலையில் பொலிஸாருக்கு அரசியல் ரீதியில் ஏதாவது அச்சுறுத்தல்கள் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மகிழ்ச்சியாக ஊடகச்சந்திப்புகளில் கலந்துக் கொள்கிறார்.

ஐ.தே.க.வின் ஆதரவாளர்கள் 26 வருடகாலமாக தோல்வியடைந்து பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். எனவே பொதுத் தேர்தலில் எமக்கு ஆதரவளித்தால் எமது ஆட்சியில் மக்கள் நலனுக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

ரணில் விக்கிரமசிங்கவின் இரகசிய அரசியலுக்கும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ரவி கருணாநாயக்கவுக்கும் கட்சி ஆதரவாளர்கள் தகுந்த பாடத்தினை கற்பிக்க வேண்டும்.  கம்பளை மற்றும் நாவலபிட்டி பகுதியில் ஐ.தே.க. நகரசபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பின்னர் அதனை ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர்களது உறுப்புரிமை, எதிர்காலத்தை பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.

சஜித் பிரமதாசவுடன் இணைந்து செயற்படுவதற்கு மக்கள் எடுத்துள்ள தீர்மானத்தை மாற்றக் கூடாது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளரா? நாட்டின் பொருளாதாரம் , ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பிலும் கவனம் செலுத்தி , நன்கு சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.